உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

05 January 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம்


புதுடில்லி: "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும்படி உத்தரவிட முடியாது. இதற்கான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் டிவிஷன், "பெஞ்ச்' தெரிவித்துள்ளது.

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரமிளா சங்கர் என்பவரும், சமூக ஆர்வலர் ஒமிதா துபே என்பவரும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், அவர்கள் கூறியிருந்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை, பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கவும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணைகளை, பெண் நீதிபதிகளே நடத்தவும் உத்தரவிட வேண்டும்.பெண்களின் பாதுகாப்பிற்காக, தற்போது உள்ள சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அவற்றை அமல்படுத்தும்படி, ஆணையிட வேண்டும்.பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில், பெண்களின் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். :

இந்த மனுக்கள் நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், டிவிஷன், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, உத்தரவிடும் அதிகாரம், சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை. எனவே, மனுவில் விடுக்கப்பட்டுள்ள, அது தொடர்பான வேண்டுகோள் குறித்து விசாரிக்க முடியாது.
அதேநேரத்தில், அரசியல்வாதிகளுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.அத்துடன், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தற்போதுள்ள சட்டத்தை கடுமையாக்குவது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டியின், விசாரணை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தை போல சட்டம்:

"பாலியல் பலாத்காரங்களை தடுக்க, பார்லிமென்ட் சட்டம் இயற்றும் என்று காத்திராமல், மகாராஷ்டிரா மாநில அரசே, தற்போதுள்ள தன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று தாக்கல் செய்த, பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி மோகித் ஷா மற்றும் நீதிபதி மோக்தா ஆகியோர் அடங்கிய, மும்பை ஐகோர்ட், "பெஞ்ச்' இந்த உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, சட்டங்களை திருத்துவது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்; இதுதொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். "ஈவ்-டீசிங்'கை தடுக்க, தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது; அதேபோல், இங்கும் இயற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT