உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

24 August 2012

சாதனை 50 வாலிபர்களை மணந்த பெண்


காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக த்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள்.

புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வாரம் வரை எனது மனைவி என்றே நினைத்திருந்தேன். கடந்த வாரம்தான் அவள் ஒரு மோசடி ராணி என்ற அந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.
சகானா செல்போன் மூலம்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனாள். எடுத்த எடுப்பிலேயே உங்கள் குரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது என்றுதான் சகானா ஆரம்பித்தாள். ஆனால் நான் அவளை நேரில் பார்த்தபிறகுதான், அவளது காதலை ஏற்றேன். வக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் செய்வதாகவும் சொன்னாள்.
அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாக சொன்னாள். முதலில் பெற்றோருக்கு தெரியாமல் அவளை ரகசிய திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு எனது பெற்றோர் ஆசியுடன் முறையாக அவளை, தாலி கட்டி மணந்தேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து அவளை கைப்பிடித்தேன்.
தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ளது என்றும் எனது பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் அவள் சொன்னாள். இதை நம்பினேன்.

2 மாதம் அவள் என்னோடு நல்ல மனைவியாக வாழ்ந்தாள். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை வேண்டும் என்று சொல்லி, சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தாள். அதன்பிறகு அவளை விடுதிக்குச் சென்று பார்த்து வந்தேன்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விடுதியை காலி செய்துவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசி வந்தாள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத போய்விட்டதாக சொன்னாள். அவளால் நான் இழந்தது பல லட்சம் இருக்கும்’’ என்று கூறினார்.



இன்னொரு வாலிபர் பிரசன்னாவும், கேரள அழகியிடம் மோசம் போனது பற்றி கண்ணீருடன் விளக்கினார். நானும் டிப்ளமோ என்ஜினீயர்தான். புளியந்தோப்பில் நான் வசிக்கிறேன். கால்பந்து வீரராகவும் உள்ளேன்.

நான் சகானாவை புரசைவாக்கத்தில் ஒரு கடையில் சந்தித்தேன். முதலில் காதலை சொன்னாள். அடுத்து ரகசிய திருமணத்தில் விழவைத்தாள். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டேன். 2 மாதம் மட்டும் என்னோடு மனைவியாக வாழ்ந்தாள். எனக்கு நல்ல மனைவியாக இன்பத்தையும் வழங்கி, சமைத்து கூட போட்டாள்.

அதன்பிறகு வக்கீலுக்கு படிக்கிறேன் என்று சொல்லி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசுவாள்.


எனக்கு தெரியாமல் எங்கள் வீட்டுக்கு, பக்கத்து தெருவில் வசிக்கும் எனது உறவினர் சுரேசையும் இதுபோல் ஏமாற்றி மணந்து இருக்கிறாள். ஒரு நாள் எனது தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்றாள். அங்கு சுரேசின் தாயார் சகானாவை பார்த்து, எனது தாயாரிடம், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறாள். எனது தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறார். உடனே சகானா, சுரேசின் தாயாரை பார்த்து, மிரட்டி இருக்கிறாள். நான் பிரசன்னாவின் மனைவிதான் என்று அடித்து கூறிவிட்டு வந்துவிட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் நிலையத்திற்கும் வந்து, பிரசன்னாதான் எனது கணவர் என்று சகானா சத்தியம் செய்தாள். அவளை மாயக்காரி என்று தான் சொல்ல வேண்டும். நானும் அவளால் ரூ.5 லட்சத்தை இழந்து நிற்கிறேன் என்று கூறினார்.

மோசக்காரி சகானா சட்டையை கழற்றுவதுபோல, மாப்பிள்ளைகளை கழற்றி இருக்கிறாள். இதுவரை அவளது மாப்பிள்ளை கணக்கை பார்த்தால், 50-ஐ தொடும் என்று சொல்லுகிறார்கள். கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் அல்லாது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு போன்ற போலீஸ் நிலையங்களிலும் அவளது மாப்பிள்ளைகளின் புகார்கள் உள்ளன.

மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த புருஷன்கள் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று, சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கேரளாவிலும் அவளிடம் ஏமாந்த கணவன்கள் உள்ளனர். இப்போது இந்த புகார்கள் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். மாயக்காரி சகானாவை போலீசார் தேடி வருகிறார்கள். 
நன்றி: நக்கீரன் 

22 August 2012

தேசிய கொடியை அவமதித்த பிரபல நடிகர் மீது வழக்கு


புனே:தேசியக் கொடியை அவமதித்ததாக அளித்த புகாரின் பேரில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மீது, புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புனே நகரின், சாதுஷிரிங்கி போலீஸ் நிலையத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு எதிராக, லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலர் ரவி பிராமி, புகார் ஒன்றை அளித்தார். அதில், "யூடியூப் வலைதளத்தில், நடிகர் ஷாரூக்கான், "அப்லோடிங்' செய்த வீடியோ காட்சியில், தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஷாரூக்கான் மீது, "தேசிய கவுரவ சின்னங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், 1971'ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "14ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் விசாரணைக்காக, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது' என, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஷாரூக்கானுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமாக, சில புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும், போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஷாரூக்கான் மீது புகார் தெரிவித்த, ரவி பிராமி, ஏற்கனவே மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஜெக்னா வாசிஷ்ட் என்பவர் மீதும், சமீபத்தில் புகார் கொடுத்தார். அதில், "தேசிய கொடியை, பிகினியாக (நீச்சல் உடையாக), ஜெக்னா வாசிஷ்ட் அணிந்து நடித்துள்ளார்' என, தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து, 18ம் தேதி, மாடல் அழகியை புனே போலீசார் கைது செய்தனர். மறுநாள் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

புது பொலிவு பெறும் எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்கள்

"கர்ணன் படம் புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டதில், சக்கை போடு போட்டதால், தமிழ் சினிமா உலகத்தில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் புது, "டிரெண்ட் உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆரின், "மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, வேட்டைக்காரன் ஆகிய படங்களும். சிவாஜியின், "பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும்,  தற்போதுள்ள நவீன திரையரங்குகளின் தரத்திற்கேற்ப,  மெருகேற்றப்பட்டு மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

19 August 2012

தமிழில் வெளிவருகிறது சிவாஜி நடித்த தெலுங்கு படம்!

கர்ணன் படம் மறு திரையீட்டில் பெரிய வரவேற்பை பெற்றதும், சினிமாக்காரர்களுக்கு என்ன செய்வது, ஏதுசெய்வது என்றே தெரியவில்லை. சிலர் சிவாஜியின் பழைய ஹிட் படங்களை தூசு தட்ட ஆரம்பித்திருக்கின்றனர், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்பன், திரிசூலம், தங்கப்பதக்கம், கவுரம், புதிய பறவை என சிவாஜி படங்களை டிஜிட்டல் படுத்தி வெளியிட பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் ஒரு படிமேலே போய்விட்டார்கள் தெலுங்கு சினிமாகாரர்கள். 1987ம் ஆண்டு சிவாஜி நடித்த தெலுங்கு படம் விசுவநாத நாயகுடு, இது 16ம் நூற்றாண்டில் நடந்த சரித்திரத்தை மையமாக கொண்டது. புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் விசுநாத நாயகுடு. தமிழ்நாட்டு ராஜராஜசோழன் போன்று அங்கு புகழ் பெற்றவர். இவரது சரித்திரப் படம்தான் இது. இதில் விசுவநாதநாயுகுடுவாக அப்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகவும், அரசவை நடனக்காரியாகவும் ஜெயப்பிரதா நடிதிருந்தார். சிவாஜி, விசுநாதநாயுடுகுவின் தந்தை நாகம்ம நாயக்கராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. படத்தை தாசரி நாராயணராவ் இயக்கி இருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

அப்போது இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட யாரும் முன்வரவில்லை. இப்போது கர்ணன் காட்டிய வழியில் தாசர நாராயணராவின் உறவினர்கள் பத்ரகாளி, பெத்தபாபு ஆகியோர் தங்களின் குருபிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இதை டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். படத்திற்கு படத்தில் சிவாஜியின் கேரக்டர் பெயரான நாகம்ம நாயக்கர் என்று வைத்திருக்கிறார்கள்.

எப்போதோ செய்திருக்க வேண்டியதை இப்போதாவது செய்ய முன்வந்ததற்கு வாழ்த்து சொல்லலாம். ஆனால் டப்பிங்கிற்கு அந்த சிம்மக்குரல் வேண்டுமே அதற்கென்ன செய்யப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

17 August 2012

சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை: விரைவில்


சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்' தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு' தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.

இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்' என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்ட போது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது. இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்' தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

15 நாட்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை: மத்திய அரசு

புதுடில்லி : அடுத்த 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வ‌டகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பரவிய வதந்திக்கு இணையதள தொழில்நுட்பமே காரணம் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.

மீண்டும் ஒரு ஸ்பெக்ட்ரம்: நிலக்கரி சுரங்கத்தில் 1 . 86 லட்சம் ‌கோடி இழப்பு !


புதுடில்லி: ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது மத்திய அரசை ஒரு ஆட்டு ஆட்டுவித்தது. எதிர்கட்சிகள் தங்களுக்கு கிடைத்த அவலை ஒரு சேர அரைத்து ஸ்பெக்ட்ரம் என்ற ஊழல் பலூனை ஊதி மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் மற்றொரு ( நிலக்கரி சுரங்க ) மெகா ஊழல் இன்று வெளி உலகிற்கு வெளிவந்தது. இது ஸ்பெக்ட்ரத்தை ( 1 . 76 லட்சம் கோடி ) கொஞ்சம் மிஞ்சியுள்ளது.

இந்த அறிக்கையை மத்திய தலைமை கணக்காயர் குழு பார்லி.,யில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டில்லி இந்திராகாந்தி விமான நிலையங்கள் செயல்பாட்டில் - தனியார் இணைந்ததில் கடந்த 60 ஆண்டு கால இழப்பும் வெளிவருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் அரசியலில் ஒரு புயலை பார்க்க முடியும். இந்த போக்கில் வரும் கால அரசியல் பாதை இருக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் லீக்கானது ( நம்ம ஊருல டி.என்.பி.எஸ்.சி.,வினாத்தாள் மாதிரி ) . இது எப்படி வெளியானது என்ற சர்ச்சை கடந்த பார்லி., கூட்டத்தொடரில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லி வந்தாலும் சில பிரச்னைகளை காரணம் காட்டி தள்ளிப்போடப்பட்டு வந்தது. 

14 August 2012

ரஜினியின் முதல் 3டியில் வெளியாகும் படம் சிவாஜி...!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாகி ரஜினியின் முதல் 3டி படமாக வெளியாக இருக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி. ஷங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்த முதல்படம் இது. கறுப்புபணத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அத்துடன் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்ற சஹானா, ஆம்பல் ஆம்பல், அதிரடிக்காரன் மச்சான்... போன்ற பாடல்கள் பிரபலமும் அடைந்தன.

இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒருவருடமாக சுமார் 400 தொழில்நுட்ப கலைஞர்களுடன் சிவாஜியின் 3டி தொழில்நுட்ப பணியை பிரசாத் லேப்பில் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்டமாக சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளனர். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

படம் உருவான விதம் குறித்து நாம் கேட்டறிந்த செய்திகள் இதோ, பிரசாத் குரூப் நிறுவனம் திரு.சாய் பிரசாத் ஏ.வி.ஏம்.குகனை சந்தித்து 3டியில் படம் பண்ணலாமே என்று கேட்டபோது, ரஜினியின் சிவாஜி படத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இப்படத்தில் உள்ள காட்சிகள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சியையும் பிரித்து எடுத்து, மிட் வைடு, க்ளோஸ் என்று ஒவ்‌வொரு பகுதியும் பிரிக்கப்பட்டு, ரோட்டோ ஸ்கோபி முறையில் தொடங்கி, அதற்கென உரிய சாப்ட்வேர் கொண்டு பிரேம் பை பிரேம் அவுட்புட் எடுத்து இறுதியாக படத்தின் தரம், கலர், சவுண்ட் உள்ளிட்டவைகள் 2டியில் எடுக்கப்பட்டு பின்னர் 3டியில் இப்படத்தை கொண்டு வந்துள்ளனர். மேலும் 3டியில் படத்தின் நீளமும் 2.17 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

`சிவாஜி 3டி படத்தின் ஒரு பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, `சிவாஜி 3டி படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். `கோச்சடையான் படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கே இந்த படம் பிடித்து இருக்கிறது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சிவாஜியை தொடர்ந்து எந்திரன் படத்தை 3டியில் கொண்டு வரலாம். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிவிட்டது. அதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

அருணா குகன் : சிவாஜி 3டி படத்தின் தயாரிப்பாளரான அருணா குகன் கூறுகையில், சிவாஜி 3டி படத்தின் டிரைலர் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப்படம் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவரும், படம் முழுமையாக முடிய இன்னும் சில பணிகள் இருக்கிறது. அது முடிந்ததும் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

அதிர வைத்த 'கொலவெறி' அனிருத் - ஆன்ட்ரியா ரியல் லிப்-டூ-லிப் கிஸ்

சமூக வலைத்தளங்கள், சினிமா தளங்களை நேற்றிலிருந்து ஒரு படம் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது... அது கொலவெறி புகழ் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் அடித்துக் கொள்ளும் ஒரு படு  லிப்-டூ-லிப் கிஸ்
சினிமாவில் கூட இப்படி ஒரு முத்தக் காட்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு முத்தம்...
அனிருத்துக்கும் ஆன்ட்ரியாவுக்கும் எப்படி 'இது' பத்திக்கிச்சு என பலரும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தப் பையனுக்கு 18 வயசுதான் ஆகுது. ஆன்ட்ரியாவோ, ஓரிரு வருடங்களில் ஆன்ட்டியாகும் வயதிலிருக்கிறார். இந்த இருவரின் உறவும் பொருந்தா காதலா, காமமா என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய உறவுக்காரர்.
அனிருத் ஒரே ஒரு படத்துக்குதான் இசையமைத்திருக்கிறார். பார்க்க ரொம்ப அப்பாவி சாதுப் பையன் போல இருந்தவர், இப்படி அடுத்த படம் தொடங்குவதற்குள்ளேயே ஆழமான காமத்தில் சிக்கிக் கொண்டாரே... என உச்சுக் கொட்டுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
அது கிடக்கட்டும். அவர்களின் பர்சனல் சமாச்சாரம் அது. நமக்கென்ன வந்தது என்று ஆதரவளிப்போரும் இல்லாமலில்லை!
யார் கண்டது... அது நாங்கள் இல்லை... கிராபிக்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!

கருணாநிதியும் டுவிட்டர் இணையதளத்தில் புதிய பக்கம் துவக்கியுள்ளார்

சென்னை: சமூக வலைதளங்களில் பல தலைவர்கள் தங்களுக்கென பக்கங்களை உருவாக்கியுள்ளனர். பா.ஜ., தலைவர் அத்வானி, தனது கருத்துக்களை பேஸ்புக் மற்றும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிக வாசகர்கள் உள்ளனர். பல அரசியல்வாதிகள், இளைஞர்களை கவர பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இணையதளங்களில் தங்களுக்கென பக்கங்களை துவக்கி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் டுவிட்டர் இணையதளத்தில் புதிய பக்கம் துவக்கியுள்ளார். 

தமிழகத்தில் பெட்ரோல் கண்டுபிடிப்பு

புதுடில்லி: தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அருகே பெட்ரோல் வளம் இருப்பதை எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் கண்டுபிடித்துள்ளது. மதனம் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் வயல், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கே 14 கி.மீ., தொலைவில் காவிரி படுகையில் உள்ளது. இந்த எண்ணெய் வயல் மூலம் நாள் ஒன்றிற்கு 115 கியூபிக் மீட்டர் எண்ணெயும், 11 ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் எரிவாயுவும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஓ.என்.ஜி.சி., தெரிவித்துள்ளது.

வறுமை, பசியை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டம்


புதுடில்லி: பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்கள் இருந்த போதும், நாட்டின் பொருளாதாரம் மீண்டுவரும் என தான் நம்புவதாக தெரிவித்த பிரணாப், நாட்டின் கிழக்குப்பகுதிகளுக்கும் பசுமைப்புரட்சி சென்றடையவேண்டும் என்று குறிப்பிட்டார். நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் நாடு மிக அதிகமாக சாதித்துள்ள போதும், இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளதாக கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சராசரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மிகவும் பின்தங்கிய பகுதிகள் தேசிய நீரோட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார். நாட்டில் நோய், பசி மற்றும் வறுமையை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரணாப் அழைப்பு விடுத்துள்ளார்.

13 August 2012

பார்லி.,முற்றுகை; ராம்தேவ் கைது


புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவர வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் யோகாகுரு பாபா ராம்தேவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசினர். 
பார்லி., முன்பு தொண்டர்களுடன் தர்ணா போர் நடத்தப்போவதாக அறிவித்தத‌ையடுத்து இங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது . ‌‌தொடர்ந்து பார்லி., நோக்கி புறப்பட்ட அவரை ஆதரவாளர்களுடன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கடந்த 9ம் தேதி முதல் 3 நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மத்திய அரசிடம் இருந்து முடிவை கேட்டார். ஆனால் அரசு தரப்பில் எவ்வித பதில் அறிக்கையும் இல்லை. இதனால் கோபமுற்ற ராம்தேவ் பார்லி.,யை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்.

பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஆதரவு:இன்று போராட்ட மேடைக்கு பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், ஜனதாகட்சி தலைவர் சு.சாமி, தெலுங்குதேசம், சிவசேனா, சி.பி.ஐ.,, நிர்வாகிகள், ஆகியோர் பங்கேற்றனர்.

மேடையில் நிதின் கட்காரி பேசுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைளே, நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது. கறுப்புப் பணம் குறித்து பேசுபவர்கள் மீது, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, கறுப்புப்பணம் குறித்துப் பேசிய ராம்தேவின் உதவியாளர் பால்கிருஷ்ணா மீது போலி பாஸ்போர்ட் வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்தேவ் போராட்டத்திற்கு பா.ஜ.,முழு ஆதரவு அளிக்கும் .இவ்வாறு கட்காரி பேசினார்.

குரூப்-2 தேர்வு கேள்வித்தாள் லீக்ஆனது எப்படி பரபரப்பு தகவல் !


ஈரோடு: கேள்வித்தாள் வெளியானதையடுத்து டி.என்.பி.எஸ்.சி.,குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநத கேள்வித்தாள் எப்படி வெளியானது என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும் பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதில் பல்வேறு திடுக் தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் குரூப் -2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 6 . 4 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நேற்று தேர்வு நடந்தபோது ஈரோட்டில் மாணவி தனக்கொடி ஒருவர் வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். தேர்வு முடிந்ததும், வெளியே வந்தவர்கள், தனக்கொடியை கண்புபிடித்தனர். அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். உண்மையிலேயே கேள்வித்தாள் லீக்கானதா என விசாரிக்கப்பட்டது. இது போன்று கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லீக்கானது கண்டுபிடிக்கப்பட்டது . 

இது தொடர்பாக இன்று ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் தனக்கொடியிடம் டி.ஆர்.ஓ., கணேசன், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர், இதில் தனக்கொடி தனது கணவன் செந்தில் மூலம் கிடைத்ததாக தெரிவித்தார். செந்திலை விசாரித்த போது , நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த சுதாகர்மூலம் கிடைத்ததாக தெரிவித்தார்.சுதாகர் இப்போது ஈரோட்டை சேர்ந்த வரதராஜன் என்பவைர கை காட்டியுள்ளார். தொடர்ந்து இது சங்கிலி தொடர் போல போய்க்கொண்டிருப்பதால் உண்மை குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

மெயில் மூலம் வினாத்தாள்: கேள்வித்தாள் பரிமாற்றம் மெயில் மூலமாகவே வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை , திருச்சி மற்றும் நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மெயில் பரிமாற்றம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் பிடிபட்டவர்களிடம் அவர்களது மெயில் ஐ.டி.,யை ஓப்பன் செய்ய போலீசார் கூறியபோது அவர்கள் தங்களின் பாஸ்வேர்டு மறந்து விட்டதாகவும்,மெயிலை திறக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். 

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நட்ராஜ் பேட்டி: முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தேர்வு ரத்து செய்யப்படுவது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நட்ராஜ் கூறியதாவது, வினாத்தாள் தயாரிப்பு பணி போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் லீக் ஆகி இருப்பது வேதனை தருகிறது. மக்கள் மற்றும் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். விரைவில் புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, குழு அமைக்கப்பட உள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, அதை தேர்வுமையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கொடுமை மயானத்தையும் விட்டு வைக்கவில்லை


மேலூர்: மதுரை மேலூர் பகுதியில், அரசு புறம்போக்கு, கண்மாயை ஆக்கிரமித்த குவாரி உரிமையாளர்கள், மயானத்தையும் விட்டு வைக்கவில்லை. மயானம் மற்றும் கண்மாயை ஆக்கிரமித்திருந்த கிரானைட் குவாரிக்கு சொந்தமான, ஒரே பதிவெண் கொண்ட இரு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது வரை கிரானைட் குவாரிகளில் நடந்த சோதனைகளில், அனைத்து குவாரிகளுமே முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்களது பட்டா இடத்தின் அருகில் உள்ள வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், களங்கள் என எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவற்றை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்த அவர்கள், அதிகாரிகள் சோதனையால், தோண்டிய பள்ளங்களில் மண்ணை கொட்டி மூடினர். எவ்வளவு தூரம் வெட்டப்பட்டது, எவ்வளவு வருவாய் இழப்பு என்பதை அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை. கற்களை வெட்டிய பிறகு வெற்றிடமாக உள்ள இடங்களை மட்டுமே 'டோட்டல் ஸ்டேஷன்' உதவியுடன் அளக்கின்றனர். பல இடங்களில் முறைகேடாக வெட்டி எடுத்து வரப்பட்ட கற்களை பதுக்கி வைத்ததையும் கண்டுபிடித்தனர். அவற்றையும் அளக்கும் பணி ஒரு இடத்தில் மட்டும் நடக்கிறது. "ஸ்டாக் யார்டு' என கூறப்படும் இது போன்ற இடங்கள் கீழவளவைச் சுற்றி பல உள்ளன. இவற்றை முழுமையாக அளக்க சில நாட்களாகும்.

மயானம் ஆக்கிரமிப்பு: நேற்று கீழவளவு பெட்ரோல் பங்க் எதிர்புறம் உள்ள மதுரா கிரானைட்டில் துணை கலெக்டர் குணசேகரன், கனிம வளத்துறை துணை தாசில்தார் சிவபாலன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மயானம் மற்றும் குளத்தை, இக்குவாரி ஆக்கிரமித்து இருந்தது ஆய்வில் தெரிந்தது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கழிவு கற்களை அடுக்கி வைத்திருந்ததும், ஊழியர்களுக்கான ஓய்வறையை அரசு இடத்தில் கட்டியிருந்ததும் தெரிந்தது. இவ்வளாகத்தில் இரு டிப்பர் லாரிகளுக்கு ஒரே பதிவெண் எண் (டி.என் 30 இசட் 1679) இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பின், லாரிகள் மற்றும் கட்டிங் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

சாக்கு மூடையில் கிரானைட் குவாரி ஆவணங்கள்:வாகனங்களில் பதுக்கல்: மதுரை மேலூரில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், குவாரிக்கு சொந்தமான இரு வாகனங்களில், மூடைகளில் கட்டப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மதுரை மேலூர் பகுதியில் சட்ட விரோத குவாரிகளால், அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதன்படி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சிறப்பு குழுக்களை நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 குவாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது வரை 22 பேரைகைதுசெய்துள்ளனர். மதுரா கிரானைட் நிறுவன வாகனங்கள் சில, சந்தேகத்தின்படி, கீழவளவு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டன. நேற்று முன் தினம், இரவு 11 மணிக்கு, கொடுக்கம்பட்டி வீரையா என்பவரது வீடு அருகில், இவ்வாகனங்கள் நின்றன.

பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அம்பாசிடர் கார் (டி.என்.59 எப் 7177), மாருதி வேனை (டி.என்.20 ஏபி 9616) சோதனையிட்டார். மாற்று சாவி மூலம், வாகனங்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார். அந்த வாகனங்களில், சில சாக்கு மூடைகள் கிடந்தன. மேலும் குவாரி ஆவணங்கள் குவிந்து கிடந்தன. இதுதொடர்பாக, வீரையாவிடம் விசாரணை நடக்கிறது.

12 August 2012

கடும் நிலநடுக்கத்திற்கு 250 பேர் பலி ; 2 ஆயிரம் பேர் காயம்


டெஹ்ரான்: ஈரான் நாட்டு மக்கள் பலரும் நிலநடுக்கத்தில் சிக்கி 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவில் 2 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 6.3 என பதிவாகியது. கிழக்குஅஜர்பைஷானில் உள்ள வர்ஷகான், தப்ரீஸ் அஹர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் அடியோடு பெரும் தேசத்தை சந்தித்திருக்கிறது. வீடுகளை இழந்தவர்கள் தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு பொருட்களாக ரொட்டித்துண்டுகளும், குடிநீரும் வழங்கப்பட்டன. பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 கிராமங்கள் முழுமையாக பாதிக்ப்பட்டுள்ளதாகவும், ஏனைய 60 கிராமங்கள் 50 சதம் முதல் 80 சதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கடந்த 2003 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 25 ஆயிரம் பேர் பலியாயினர்.

இந்தியாவுக்கு 6வது பதக்கம்; வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில்குமார்


லண்டன்: ஒலிம்பிக்போட்டி நிறைபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான அரையிறுதி பலப்பரீட்சையில், சுஷில்குமார் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். இதில் 3-0, 03, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தங்கம் வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனை நடந்தது. தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு இனி தடையில்லை!


சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. நடிகர்களைத் தாண்டி, நடிகைகளும் ஏகாந்தமாக தம்மடிப்பது போல காட்சிகளை வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால், திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னணி நடிகர் நடிகைகளும் கண்டித்தனர். ஆனால் தடை உத்தரவை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.

நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அத்தகைய காட்சிகள் இடம்பெறக்கூடாது என அரசும் சமூக நல ஆர்வலர்களும் கூறினர். ஆனால் இப்போது தனது உத்தரவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கதைக்கு தேவை என்றால் புகை பிடிக்கும் காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. படம் துவங்கும் போது புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும். இடைவேளை விட்டு படம் துவங்கும் போதும் இந்த வாசகம் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் காட்சி வரும் போதும் நன்றாக பெரிய எழுத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

காதலிக்க 7 நாட்கள் போதும்!

இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை; ஏழு நாட்கள் போதும்... என்ற லவ் மெசேஜூடன் உருவாகி வருகிறது நந்தனம் படம். இன்றைய பெண்களும் சரி, ஆண்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். இவர் டைரக்டர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார். சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன். நாயகியாக நடிகை மித்ரா குரியன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ.எல்.அழகப்பன். முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச்.சி.எல். போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது.

மாட்டுக்கு கொம்பு சீவுவோருக்கு: ஐ.டி., தொழிலை விட கூடுதல் வருமானம்


சந்தைக்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவுவதை தொழிலாக கொண்டுள்ளவர்கள், ஐ.டி., துறையில் உள்ளவர்களை விட, அதிகம் சம்பாதிக்கின்றனர்.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழக அளவில் ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு அருகே மோர்ப்பாளையம், கரூர் அருகே உப்பளமங்கலம், பொள்ளாச்சி சந்தைகளைப் போல், ஈரோடு மாட்டுச் சந்தையும் பிரபலமானது.
சந்தையில் மாடு வியாபாரம் ஒருபுறம் நடக்கிறது என்றால், மாடுகளுக்கு தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப்பட்டைகள் போன்றவை விற்பனையும் களை கட்டும். அதுபோல், மாடுகளுக்கு கொம்பு சீவுதல், லாடம் கட்டும் தொழிலும் அமோகமாக நடக்கிறது.

மாடுகளுக்கு கொம்பு சீவி, லாடம் கட்டும் தொழிலாளி காளிமுத்து கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாட்டுச் சந்தைகளுக்கு வாரந்தோறும் செல்வேன். அங்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவி வருகிறேன். கத்தி, அரம், ரம்பம், கட்டிங் மிஷின் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வேன். மாடுகளின் கொம்புகளில் ஏற்கனவே பூசப்பட்டுள்ள பழைய பெயின்டை அரத்தால் சுரண்டிவிட்டு, பின் கொம்புகளை தேவைக்கேற்ப செதுக்கியும், நறுக்கியும் அழகுபடுத்துவேன்.ஒரு மாட்டுக்கு, 50 ரூபாய் கூலி வாங்குகிறேன். ஒரு மணி நேரத்தில் எட்டு மாடுகள் வீதம், ஒரு நாளைக்கு, 70 மாடுகள் வரை கொம்பு சீவுவேன். பெரும்பாலும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு கொம்பு சீவி வாங்கிச் செல்வர். காளைகளுக்கு காலில் லாடம் கட்ட, 300 ரூபாய் வாங்குகிறேன். இத்தொழிலில் பத்து பேர் ஈடுபட்டுள்ளனர். சந்தை முடிந்ததும், மறுநாள் சந்தை கூடும் ஊருக்கு சென்று விடுவோம். வாரம் ஐந்து நாள் இத்தொழிலில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கொம்பு சீவும் தொழில் வெளித்தோற்றத்துக்கு சாதாரணமாக தெரிந்தாலும், கொம்பு சீவுபவர் ஒரு நாளைக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். தற்போதைய நிலையில் இன்ஜினியரிங் படித்து விட்டு, ஐ.டி., துறையில் சம்பாதிப்பவர்களை விட, மாட்டுக்கு கொம்பு சீவுபவர்கள் சம்பாதிப்பது அதிகம் தான்.
நன்றி: தினமலர் 

அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி?

டெஹ்ரான்: ஈரானின் வடமேற்கு பகுதியில் அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40 முதல் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் டப்ரிஸ் மற்றும் அர்டிபில் நகரில் ஏற்பட்டதாகவும், இதில் 400 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 மற்றும் 6.0 என பதிவானது.

இலங்கை எம்.பி்க்கள் டெசோ மாநாட்டில் பங்கேற்காது என அறிவித்துள்ளது

கொழும்பு: ‌டெ‌சோ கூட்டமைப்பு மாநாட்டில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவித்துள்ளது. அவ்வமைப்பை சேர்ந்த சம்மந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து கட்சிகளும் இணைந்து நடத்தினால் பங்கேற்போம் என தமிழ் தேசியகூட்டமைப்பு மாநாடு தெரிவித்துள்ளது. மாநாட்டு முடிவை அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கம்.


லண்டன்: லண்டன் ஒலிம்பிக் 60 கிலோ, மல்யுத்த போட்டியின் ரீபேஜ் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் யோகேஷ்வர் தத், வட கொரியாவின் ரி ஜாங் மியாங்கை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய யோகேஷ்வர் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் வெண்கலம் வென்றார். இது லண்டன் ஒலிம்பிக்ல் இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கமாகும்.

11 August 2012

டெசோ மாநாடு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்: கருணாநிதி


சென்னை: டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். காலை 10 மணிக்கு ஆய்வரங்கமும், மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.மேலும் அவர், டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் என்றும், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி ஆகஸ்ட் 20 முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக டெசோ மாநாடு ‌தொடர்பான வழக்கில் தீர்ப்பும் சொல்லாமல் நீதிபதி கைவிரித்து விட்டார். இந்த வழக்கு தொடர்பான மனு ஒன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் தாம் தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை என்றும் இந்த வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும், நீதிபதி பால்வசந்தகுமார் கை விரித்து விட்டார்.

நாளை டெசோ மாநாடு நடத்தும் ஆயத்த பணிகள் படுமும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாநாடு நடத்த தமிழக போலீசார் தடை விதித்தனர். இதனால் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்த தி.மு.க., அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம், தடையை மீறி மாநாடு நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்ற ஆலோசனையில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி விவாதித்தது. ஒரே நாள் இருப்பதால் இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை கொடுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வநதது.

இலங்கை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்னர் அறிவித்தார். இதற்கான பணிகளை திட்டமிட்டு தி.மு.க,. தலைவர் மிக விறு, விறுப்பாக ஈடுபட்டு வந்தார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் இதற்கென உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வந்தார். இந்த மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் இருக்காது என்று கருணாநிதி என மத்திய அரசுக்கு சமரசம் ஏற்படுத்தும்படி தெரிவித்தாலும், மடிந்தது போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வின் புனரமைப்புக்காகவே இந்த மாநாடு என கருணாநிதி அறிவித்தார். 

இலங்கை தமிழர் விவகாரம் என்பதால் காங்கிரஸ் எந்தவொரு கருத்தும் சொல்லமால் இருந்து வந்தது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் ஆதரவாக இந்த மாநாடு அமைந்து விடுமோ என்ற அச்சம் இருந்ததா<லும், கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மாநாடு என்பது அந்தந்த அரசியல் கட்சியின் கொள்கை ரீதியிலானது என்ற அளவோடு காங்,. ஒதுங்கி கொண்டது. 

டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிப்பு ! இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை என பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு தயாராக காத்திருக்கிறது. இம்மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என நேற்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை பொறுத்தவரை அனுமதி வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது குறித்து தமிழக போலீசாரே முடிவு எடுத்து கொள்ளலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து நேற்று நள்ளிரவில் போலீஸ் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி மாநாட்டுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து விட்டனர்.

கருணாநிதி அவசர ஆலோசனை : மாநாட்டை நடத்துவதா சட்டரீதியாக எவ்வாறு இதனை சமாளிப்பது என்பது குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுசெயலர் அன்பழகன், மு.க.,ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, மற்றும் மாவட்டசெயலர்கள், பங்கேற்றேனர். கூட்டத்தில் என்னமாதிரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை கட்சியினர் இதுவரை வெளியே யாரும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் மாநாடு நடக்குமா ரத்து ஆகுமா என்ற கேள்வி சஸ்பென்சாகவே போய்க்கொண்டிருக்கிறது.

சென்னையை தவிர வெளி மாவட்டத்தில் ஏதாவது நடத்தி கொள்ளலாம் என போலீசார் நேற்று கோர்ட்டில் கருத்து தெரிவித்ததால் அவசரகதியில் வெளிமாவட்டத்தில் மாநாட்டை நடத்த தி.மு.க., முயற்சிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை தி.மு.க, தாக்கல் செய்துள்ளது. மாநாட்டிற்கு தடை விதித்த காவல்துறை ஆணையர் உத்தரவை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு எதுவும் சொல்லாமல் ஆவணஙகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.


அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு: இன்றைய வாதத்தின்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமது வாதுரையில்; உளவுத்துறை ரிப்போர்ட்படி ஒரு லட்சம் பேர் கூடுவர் என தெரிய வந்துள்ளது. அருகில் மருத்துவமனை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். அசம்பாவிதம் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது. என்றும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் 2 ஆயிரத்து 500 அழைப்பிதழ்கள் மட்டுமே கொடுத்துள்ளோம், 8 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பர். மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் உள்ளது. என்று ஈழத்தமிழர் மாநாடு அமைப்பாளர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தின்போது தெரிவித்தனர்.

நாளை விசாரணை: இந்நிலையில் இந்த வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெறுகிறது. நீதிபதிகள் வேணுகோபால் தர்மராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு மதியம் 12 மணியளவில் விசாரணை நடைபெறும்.

டெசோ மாநாடு: போலீசார் அறிவுரை:உள்அரங்கில் நடைபெறும் கூட்டங்களுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என சென்னை போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகன நிறுத்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். வாகன நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். உள்அரங்கிற்கு வெளியே ஒலி பெருக்க பயன்படுத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

10 August 2012

துப்பாக்கி விஜய் படத்தை கைப்பற்றியது விஜய் தொலைக்காட்சி

கோச்சடையான், விஸ்வரூபம் திரைப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துப்பாக்கி. விஜய் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். முதன் முறையாக இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பு, ஒரு புறம் பிரச்னையாக இருந்தாலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை பெருந்தொகை கொடுத்து விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் முந்தைய படமான நண்பன் திரைப்படத்தையும் விஜய் தொலைக்காட்சி ரூ.12 கோடி கொடுத்து பெற்றிருந்தது. தற்போது அந்த தொகையை விட பெருந்தொகை கொடுத்து துப்பாக்கி படத்தை கைப்பற்றியுள்ளது.

ஈழம் என்ற வார்த்தைக்கு தடை : மத்திய உள்துறை அமைச்சகம்

டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்தியா சுதந்திரப்போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்த கடிதத்தின் தாக்கம் உள்ளது. டெசோ என்பது தமழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல. ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஊழலில் இந்தியா தங்கம் வெல்லும்

ஆக., 10 : ஒலிம்பிக்கில் ஊழலுக்கு பதக்கம் வெல்வதாக இருந்தால் இந்தியா நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்லும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.


ராம்லீலா மைதானத்தில் தனது போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ராம்தேவ, ஊழலில் இந்தியா தங்கம் வெல்லும் என்று கூறியதும், கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டினர். இதற்கு இது கைதட்ட வேண்டிய விஷயமல்ல என்று கூறினார்.

டெசோ மாநாடு நடக்குமா ?


சென்னை: இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் தரப்பில் கேட்கப்படும் விளக்கத்திற்கு உரிய பதில் தி.மு.க., அளிக்கவில்லை என்றும் இதனால் சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் ஆஜராக வக்கீல் சென்னை கோர்ட்டில் தெரிவித்தார்.

டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரும் வழக்கு சென்னை கோர்ட்டில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் நவநீதகிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்ததாவது: சென்னை ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் எத்தனை பேர் வருவர் என்றும், எத்தனை வாகனங்கள் வரும் என்றும் தி.மு.க.,விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சரியான பதில் எதுவும் இல்லை. சென்னையை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் மாநாட்டை நடத்தட்டும் என தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான உத்தரவை பிறப்பித்த நீதிபதி இது தொடர்பாக தமிழக போலீசாரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.


காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் :தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதற்கிடையில் இம்மாநாட்டில் ஈழம் ‌என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தி.மு.க., தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் தி. மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு தனிக்கொள்கை உண்டு. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இக்கட்சி மாநாடு நடத்துகிறது. இது போன்ற மாநாடு நடத்துவதற்கு அரசியல்கட்சிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இந்த மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். ராம்தேவ் போராட்டம் குறித்த கேள்விக்கு இது விளம்பர நோக்கம் கொண்டது என்றார். 

தமிழ் ஈழம் என்ற வார்த்தை கூடாது: இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது இம்மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தமிழ்தலைவர்கள் வரவுள்ளனர். இவர்களுக்கான விசா தொடர்பான அனுமதி கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மாநாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று பதில் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெசோ என்பதன் முழு விளக்கத்தின்படி தமிழ் ஈழம் சப்போர்ட்டிங் ஆர்‌கனிசேஷன் என்று வருகிறது. அப்படியானால் இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT