Tuesday, July 31, 2012
Unknown
புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஆதரவு வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரையும் வலியுறுத்த உள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Tuesday, July 17, 2012
Unknown

புதுச்சேரி : "வீடில்லாத சாலையோரவாசிகளுக்காக, புதுச்சேரியின் பிரதான இடத்தில் புதிய பாதுகாப்பு இல்லம் கட்டப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்
புகள்:
பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவில், புதுச்சேரி மாநிலத்தை குடிசையில்லாத மாநிலமாக அறிவிக்கும் தொலைநோக்குடன், ராஜிவ் அவாஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தை செயல்படுத்த, குடிசை இல்லா நகரச் செயல் திட்டம் ஒன்றினை உருவாக்கும்பொருட்டு, வீட்டு வசதி மற்றும் நகரக வறுமை ஒழிப்பு அமைச்சகமானது குடிசையில்லா நகரத் திட்டம் என்ற முழுமையான மத்திய அரசு ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் அவர்களின் வாழ்க்தைத் தொழில் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். வீடில்லாத சாலையோரவாசிகளுக்காக, புதுச்சேரியின் பிரதான இடத்தில் புதிய பாதுகாப்பு இல்லம் கட்டப்படும். புதுச்சேரியின் நகர குடிசைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் 6250 குடிசைவாசிகள் பயன் பெறுவர்.
கடந்த 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதுச்சேரிக்கான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும்.
Tuesday, July 17, 2012
Unknown

புதுச்சேரி : ராஜிவ் சிலை சந்திப்பில், ரூ.48 கோடியில் சந்திப்பு சாலைகளுடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
பட்ஜெட் உரையில் கூறியுள்ளதாவது:
சுதானா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணியை ரூ.34.56 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்போடு மீண்டும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பாலம்
ராஜிவ் சிலை சந்திப்பில் மேம்பாலத்துடன் கூடிய சந்திப்பு சாலைகள் அமைக்க ரூ.48 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, இப் பணியை மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக நிதியின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
காமராஜர் மணிமண்டபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சிமையம் மற்றும் நூலகத்துடன் சென்டாக் அலுவலகம் அமைத்திட, அதன் உள் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, ரூ.42 கோடி செலவில் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.
மேற்கு பைபாஸ் சாலை
காரைக்கால் வடக்குப் பகுதியில் 49.95 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வழங்கல் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருநள்ளார் கோவில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்ரூ.2056 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாகியில் செருக்கல்லாயி அம்பலபரம்பா இடையே ரூ.1.54 கோடி செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, மாகி கடற்கரை மற்றும் ஆற்றுப் பகுதியை அழகுபடுத்தும் பணியின் மூன்றாம் கட்டப் பணிகள் ரூ.5.67 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. ஏனாம் அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 17, 2012
Unknown
புதுச்சேரி : கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 67 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டிலிருந்து புதுச்சேரிக்கு கிடைக்கும் என பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரை விபரம் வருமாறு:
தடையின்றி மின்சாரம் வழங்க, கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 67 மெகா வாட், நெய்வேலி விரிவாக்க அனல் மின் நிலையத்திலிருந்து 15 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டிலிருந்து புதுச்சேரிக்கு கிடைக்கும்.
மின் நிதிக் கழகத்திடமிருந்து ரூ.4.50 கோடி கடன் பெற்று, தகவல் துறை உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு ஓராண்டில் முடிக்கப்படும்.
110 கிலோ வாட்
மின்துறையில் நாள் முழுவதும் செயல்படும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க 1.30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள தெரு விளக்குகள் பழுதாகாமல் எரியும் வகையில் ஒரு புதிய திட்டம் தனியார் பங்களிப்போடு மேற்கொள்ளப்படும்.
Thursday, June 21, 2012
Unknown
புதுச்சேரி : அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சேர்க்கை முறை கன்வீனர் சவுந்தர வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் சொசைட்டி கல்லூரிகளில், 2102 -13ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த சேர்க்க முறையில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஒருங்கிணைந்த சேர்க்கை முறையில் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. -krk network-