உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

17 August 2012

மீண்டும் ஒரு ஸ்பெக்ட்ரம்: நிலக்கரி சுரங்கத்தில் 1 . 86 லட்சம் ‌கோடி இழப்பு !


புதுடில்லி: ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது மத்திய அரசை ஒரு ஆட்டு ஆட்டுவித்தது. எதிர்கட்சிகள் தங்களுக்கு கிடைத்த அவலை ஒரு சேர அரைத்து ஸ்பெக்ட்ரம் என்ற ஊழல் பலூனை ஊதி மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் மற்றொரு ( நிலக்கரி சுரங்க ) மெகா ஊழல் இன்று வெளி உலகிற்கு வெளிவந்தது. இது ஸ்பெக்ட்ரத்தை ( 1 . 76 லட்சம் கோடி ) கொஞ்சம் மிஞ்சியுள்ளது.

இந்த அறிக்கையை மத்திய தலைமை கணக்காயர் குழு பார்லி.,யில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டில்லி இந்திராகாந்தி விமான நிலையங்கள் செயல்பாட்டில் - தனியார் இணைந்ததில் கடந்த 60 ஆண்டு கால இழப்பும் வெளிவருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் அரசியலில் ஒரு புயலை பார்க்க முடியும். இந்த போக்கில் வரும் கால அரசியல் பாதை இருக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் லீக்கானது ( நம்ம ஊருல டி.என்.பி.எஸ்.சி.,வினாத்தாள் மாதிரி ) . இது எப்படி வெளியானது என்ற சர்ச்சை கடந்த பார்லி., கூட்டத்தொடரில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லி வந்தாலும் சில பிரச்னைகளை காரணம் காட்டி தள்ளிப்போடப்பட்டு வந்தது. 

14 August 2012

கருணாநிதியும் டுவிட்டர் இணையதளத்தில் புதிய பக்கம் துவக்கியுள்ளார்

சென்னை: சமூக வலைதளங்களில் பல தலைவர்கள் தங்களுக்கென பக்கங்களை உருவாக்கியுள்ளனர். பா.ஜ., தலைவர் அத்வானி, தனது கருத்துக்களை பேஸ்புக் மற்றும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிக வாசகர்கள் உள்ளனர். பல அரசியல்வாதிகள், இளைஞர்களை கவர பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இணையதளங்களில் தங்களுக்கென பக்கங்களை துவக்கி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் டுவிட்டர் இணையதளத்தில் புதிய பக்கம் துவக்கியுள்ளார். 

11 August 2012

டெசோ மாநாடு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்: கருணாநிதி


சென்னை: டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். காலை 10 மணிக்கு ஆய்வரங்கமும், மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.மேலும் அவர், டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் என்றும், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி ஆகஸ்ட் 20 முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக டெசோ மாநாடு ‌தொடர்பான வழக்கில் தீர்ப்பும் சொல்லாமல் நீதிபதி கைவிரித்து விட்டார். இந்த வழக்கு தொடர்பான மனு ஒன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் தாம் தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை என்றும் இந்த வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும், நீதிபதி பால்வசந்தகுமார் கை விரித்து விட்டார்.

நாளை டெசோ மாநாடு நடத்தும் ஆயத்த பணிகள் படுமும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாநாடு நடத்த தமிழக போலீசார் தடை விதித்தனர். இதனால் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்த தி.மு.க., அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம், தடையை மீறி மாநாடு நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்ற ஆலோசனையில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி விவாதித்தது. ஒரே நாள் இருப்பதால் இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை கொடுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வநதது.

இலங்கை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்னர் அறிவித்தார். இதற்கான பணிகளை திட்டமிட்டு தி.மு.க,. தலைவர் மிக விறு, விறுப்பாக ஈடுபட்டு வந்தார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் இதற்கென உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வந்தார். இந்த மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் இருக்காது என்று கருணாநிதி என மத்திய அரசுக்கு சமரசம் ஏற்படுத்தும்படி தெரிவித்தாலும், மடிந்தது போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வின் புனரமைப்புக்காகவே இந்த மாநாடு என கருணாநிதி அறிவித்தார். 

இலங்கை தமிழர் விவகாரம் என்பதால் காங்கிரஸ் எந்தவொரு கருத்தும் சொல்லமால் இருந்து வந்தது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் ஆதரவாக இந்த மாநாடு அமைந்து விடுமோ என்ற அச்சம் இருந்ததா<லும், கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மாநாடு என்பது அந்தந்த அரசியல் கட்சியின் கொள்கை ரீதியிலானது என்ற அளவோடு காங்,. ஒதுங்கி கொண்டது. 

டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிப்பு ! இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை என பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு தயாராக காத்திருக்கிறது. இம்மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என நேற்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை பொறுத்தவரை அனுமதி வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது குறித்து தமிழக போலீசாரே முடிவு எடுத்து கொள்ளலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து நேற்று நள்ளிரவில் போலீஸ் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி மாநாட்டுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து விட்டனர்.

கருணாநிதி அவசர ஆலோசனை : மாநாட்டை நடத்துவதா சட்டரீதியாக எவ்வாறு இதனை சமாளிப்பது என்பது குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுசெயலர் அன்பழகன், மு.க.,ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, மற்றும் மாவட்டசெயலர்கள், பங்கேற்றேனர். கூட்டத்தில் என்னமாதிரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை கட்சியினர் இதுவரை வெளியே யாரும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் மாநாடு நடக்குமா ரத்து ஆகுமா என்ற கேள்வி சஸ்பென்சாகவே போய்க்கொண்டிருக்கிறது.

சென்னையை தவிர வெளி மாவட்டத்தில் ஏதாவது நடத்தி கொள்ளலாம் என போலீசார் நேற்று கோர்ட்டில் கருத்து தெரிவித்ததால் அவசரகதியில் வெளிமாவட்டத்தில் மாநாட்டை நடத்த தி.மு.க., முயற்சிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை தி.மு.க, தாக்கல் செய்துள்ளது. மாநாட்டிற்கு தடை விதித்த காவல்துறை ஆணையர் உத்தரவை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு எதுவும் சொல்லாமல் ஆவணஙகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.


அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு: இன்றைய வாதத்தின்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமது வாதுரையில்; உளவுத்துறை ரிப்போர்ட்படி ஒரு லட்சம் பேர் கூடுவர் என தெரிய வந்துள்ளது. அருகில் மருத்துவமனை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். அசம்பாவிதம் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது. என்றும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் 2 ஆயிரத்து 500 அழைப்பிதழ்கள் மட்டுமே கொடுத்துள்ளோம், 8 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பர். மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் உள்ளது. என்று ஈழத்தமிழர் மாநாடு அமைப்பாளர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தின்போது தெரிவித்தனர்.

நாளை விசாரணை: இந்நிலையில் இந்த வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெறுகிறது. நீதிபதிகள் வேணுகோபால் தர்மராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு மதியம் 12 மணியளவில் விசாரணை நடைபெறும்.

டெசோ மாநாடு: போலீசார் அறிவுரை:உள்அரங்கில் நடைபெறும் கூட்டங்களுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என சென்னை போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகன நிறுத்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். வாகன நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். உள்அரங்கிற்கு வெளியே ஒலி பெருக்க பயன்படுத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

10 August 2012

டெசோ மாநாடு நடக்குமா ?


சென்னை: இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் தரப்பில் கேட்கப்படும் விளக்கத்திற்கு உரிய பதில் தி.மு.க., அளிக்கவில்லை என்றும் இதனால் சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் ஆஜராக வக்கீல் சென்னை கோர்ட்டில் தெரிவித்தார்.

டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரும் வழக்கு சென்னை கோர்ட்டில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் நவநீதகிருஷ்ணன் கோர்ட்டில் தெரிவித்ததாவது: சென்னை ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் எத்தனை பேர் வருவர் என்றும், எத்தனை வாகனங்கள் வரும் என்றும் தி.மு.க.,விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சரியான பதில் எதுவும் இல்லை. சென்னையை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் மாநாட்டை நடத்தட்டும் என தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான உத்தரவை பிறப்பித்த நீதிபதி இது தொடர்பாக தமிழக போலீசாரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.


காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் :தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதற்கிடையில் இம்மாநாட்டில் ஈழம் ‌என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தி.மு.க., தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் தி. மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு தனிக்கொள்கை உண்டு. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இக்கட்சி மாநாடு நடத்துகிறது. இது போன்ற மாநாடு நடத்துவதற்கு அரசியல்கட்சிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இந்த மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். ராம்தேவ் போராட்டம் குறித்த கேள்விக்கு இது விளம்பர நோக்கம் கொண்டது என்றார். 

தமிழ் ஈழம் என்ற வார்த்தை கூடாது: இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது இம்மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தமிழ்தலைவர்கள் வரவுள்ளனர். இவர்களுக்கான விசா தொடர்பான அனுமதி கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதில் அனுப்பியுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மாநாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று பதில் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டெசோ என்பதன் முழு விளக்கத்தின்படி தமிழ் ஈழம் சப்போர்ட்டிங் ஆர்‌கனிசேஷன் என்று வருகிறது. அப்படியானால் இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

டெசோ மாநாட்டுக்கு தடை இல்லை ; ஆனால் ஈழம் என்ற வார்த்தைக்கு மத்தியஅரசு தடை


சென்னை: தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் தி. மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட்சிக்கென ஒரு தனிக்கொள்கை உண்டு. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இக்கட்சி மாநாடு நடத்துகிறது. இது போன்ற மாநாடு நடத்துவதற்கு அரசியல்கட்சிகளுக்கு உரிமை உண்டு. இருப்பினும் இந்த மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். ராம்தேவ் போராட்டம் குறித்த கேள்விக்கு இது விளம்பர நோக்கம் கொண்டது என்றார். 

தமிழ் ஈழம் என்ற வார்த்தை கூடாது: இதற்கிடையில் இலங்கை தொடர்பான மாநாட்டில் தமிழ் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

07 August 2012

வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன் : விஜயகாந்த்

"அ.தி.மு.க., அரசின் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். நெல்லையில் நடந்த பிறந்த தின விழாவில் அவர் பேசியதாவது: ஜெ., குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு பதில் சொன்னேன். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குகளை கண்டு அஞ்சப்போவதில்லை. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கப்போவதில்லை. தி.மு.க., வை கஷ்டப்பட்டு ஆட்சியில் இருந்து அகற்றினோம். அ.தி.மு.க., ஆட்சியை எளிதில் அகற்றிவிடலாம். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது, என்றார்.

நிருபர்களிடம் கேள்வி : கேள்வி கேட்ட நிருபர்களிடம் கேப்டன் டிவி பார்ப்பதில்லையா என தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் டென்ஷனாக எதிர்கேள்வி கேட்டார். தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பிறந்த தினத்தையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்டபணிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தரப்பினருக்கு நலத்திட்ட பணிகளை செய்துவருகிறார். நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிறிஸ்துவ ஆலயங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்கின்றனர். பாளையங்கோட்டை, புனித செபஸ்தியார் ஆலயத்தில் சீரமைப்பு பணிகளை விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பார்வையிட வந்தனர்.
இதற்காக நிருபர்களையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். அங்கு வந்த விஜயகாந்திடம், நலத்திட்டம் குறித்து கூறுங்களேன் என நிருபர்கள் கேள்வியை துவக்கினர். அதற்கு விஜயகாந்த், "ஏம்பா..நீ கேப்டன் டிவி பார்க்கிறதில்லையா..அதில்தான் டீடெய்லா போடுறோமே..என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என இன்னொரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு விஜயகாந்த், சட்டம் ஒழுங்கா அது எங்கேயிருக்கு..என்றார்.அடுத்த கேள்வி கேட்கும் முன்பாக..எல்லாத்தையும் இங்கேயே கேட்டால் எப்படி.. ராத்திரி பொதுக்கூட்டத்திற்கு வா..என கிளம்பினார். அவ்ளோதானா..பேட்டி.. என நின்றுகொண்டிருந்த நிருபர்களிடம் அவரது மனைவி பிரேமலதா நான் பேட்டியளிக்கிறேன் என ஆரம்பித்தார்.

தமிழகத்தில் தி.மு.க.,அ.தி.மு.க.,ஆகிய இரண்டு கட்சிகளுமே நலத்திட்ட பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை. நாங்கள் ஆஸ்பத்திரிக்கும் மற்ற இடங்களுக்கும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள முன்வந்தால், அதிகாரிகள் எங்களிடம் எழுதி கேட்கிறார்கள்.
எழுதிகேட்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டோம் என எழுதிகொடுக்க தயாரா..நாங்கள் மேற்கொள்ளும் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் அ.தி.மு.க.,வினர் தடுக்கின்றனர் என்றார். இரவில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள "நலிந்த' கிறிஸ்துவ சர்ச்களுக்கும், நலிந்த பாதிரியார்களுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.

அமைச்சர் மீது தேமுதிக எம்.எல்.ஏ., புகார்


கோவை: தமிழக வேளாண் அமைச்சர் தாமோதரன் மீது சூலூர் தேமுதிக எம்.எல்.ஏ., தினகரன் புகார் அளித்துள்ளார். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை தொழில் செய்ய விடாமல் அமைச்சர் தடுப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோவை கலெக்டரின் தினகரன் புகார் மனு அளித்துள்ளார். தேமுதிக போக்குவரத்துறை அலுவலகர்களை இடமாற்றம் செய்வதாகவும், தேமுதிக உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போட சொல்லி போலீசை நிர்பந்திப்பதாகவும் தினகரன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

06 August 2012

விஜயகாந்த் மீது ஜெ., வழக்கு


முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும், அதுகுறித்த செய்தியை அப்படியே வெளியிட்டதற்காகவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அந்த அறிக்கையை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சென்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

31 July 2012

மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் நியமனம்


புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த உள்துறை பொறுப்பை மின்துறை அமைச்சர் ஷிண்டே கவனிப்பார்.
நிதியமைச்சராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, அவரது பதவி தற்போது காலியாக உள்ளது. தற்காலிகமாக பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த பேச்சால் மீண்டும் அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்க கூடும் என்றும், ஏற்கனவே சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததால் அவருக்கு அந்த பதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அப்போதே டில்லி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக இன்று, தற்போது உள்துறை அமைச்சர் பதவி வகித்து வரும் சிதம்பரத்தின் பதவி மாற்றப்பட்டு, அவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பதவி வகித்து வரும் உள்துறை அமைச்சர் பதவி, தற்போதைய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் கவனித்து வந்த மின்துறை, தற்போது கம்பெனி விவகாரங்களை கவனித்து வரும் வீரப்ப மொய்லியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் சிறிய அளவிலானது மட்டும் தான் என்றும், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி: தினமலர் 

முதல்வர் அறிக்கைகள் அறிக்கைகளாகவே இருக்கின்றன: விஜயகாந்த் வருத்தம்


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கவுள்ளார். 

இதுகுறித்து, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் கூறியதாவது:எனது, பிறந்தநாளையொட்டி ஆக., 1ம் தேதி முதல் செப்., 1ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் பணியையும் மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 லட்சம் ரூபாய் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நான் சட்டசபைக்கு செல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அரசு பணி பாதிக்காதா?

முதல்வர் கொடநாட்டில் ஒய்வெடுப்பதால் மட்டும் அரசு பணிகள் பாதிக்காதா? அங்கிருந்து தினமும் 100, 200, 500 கோடி ரூபாய் திட்டங்கள் என முதல்வர் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அறிக்கைகள், அறிக்கைகளாகவே இருக்கின்றன. மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.சட்டசபைக்கு செல்வது எனது தனிப்பட்ட விருப்பம். நான் விருப்பப்பட்டால், எப்போது வேண்டுமோ, அப்போது அங்கு செல்வேன். நாங்கள், உண்மையான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகின்றனர். எதிரில் அமர்ந்திருப்பவர்களே, எங்களை எதிர்க்கட்சியாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றனர். இப்போது, வேறு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்திற்கு நல்லது செய்யும் அரசு வந்தால், நாங்கள் அதற்காக கூட்டணி வைக்கக் கூடாதா?

பலன் இல்லை:
இலங்கையில் தமிழர்கள் கொன்று முடிக்கப்பட்ட பிறகு, "டெசோ' மாநாடு நடத்துவதால், எந்த பலனும் இல்லை. மாநாடு அறிவித்த கருணாநிதி, தனிஈழம் அமைப்போம் என்றார். அதன்பிறகு நான் அப்படி கூறவில்லை என முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். ஆனால், என் மனதில் பட்டதை மட்டுமே நான் கூறுவேன்.

எங்கெங்கும் கட்டிங்
கட்டிங் வாங்கும் கவுன்சிலர்களை அடக்கி விட்டதாக கூறுகின்றனர். கவுன்சிலர்களை கேட்டால், மேலிடமே கட்டிங் வாங்கும்போது, நாங்கள் ஏன் வாங்கக்கூடாது என்கின்றனர். 

சென்னையில் காலரா பரவுவது குறித்து மேயரிடம் கேட்டால், அது வாந்தி, பேதி தான் என்கின்றார். எதுவாக இருந்தாலும், மக்கள்தான் அதில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போல, மக்கள் தேர்தலை புறக்கணித்தால் நாட்டில் மாற்றம் வரும். "டாஸ்மாக்'கை தமிழகத்தில் அறிமுகம் செய்தது ஒரு கட்சி. மதுவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது மற்றொரு கட்சி. மதுவிலக்கை பொருத்தவரை இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது. இரு தரப்பிடமும் கருத்து கேட்டு, அதன்பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

20 July 2012

முதல்வர் போட்ட ஓட்டு செல்லாத ஓட்டு !


புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ஒரு முன்னாள் முதல்வர் போட்ட ஓட்டு செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. கடந்த 19ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப், பா.ஜ., கூட்டணி சார்பில் பி.ஏ,.சங்மாக போட்டியிட்டனர். நாடு முழுவதும் எவ்வித பரபரப்புமின்றி ஓட்டுப்பதிவு முடிந்தது. தற்போது ஒட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக டில்லியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் இல்லாத சமாஜ்வாடி கட்சி , காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. தலைவர் முலாயம்சிங் ஓட்டுபோட வந்த போது தெரியாமல் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டு விட்டார். பின்னர் அங்கிருந்து மற்றொரு ஓட்டுச்சீட்டை வாங்கி பிரணாப்புக்கு ஓட்டு போட்டார். இதனை பத்திரிகைகள் படம் பிடித்து காட்டியது. ஓட்டுக்கள் வரும் 22 ம் தேத எண்ணப்படவிருக்கும் நேரத்தில் முலாயம்சிங் போட்ட ஓட்டு செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. இவர் ரகசியத்தை காக்க மறந்ததமைக்காக இவரது ஓட்டு செல்லாது என்று தேர்தல் ஓட்டை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

ஒரு முன்னாள் முதல்வர் , முன்னாள் மத்திய அமைச்சர் முலாயம்சிங் ஓட்டு செல்லாமல் போனது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது

சென்னை: "சட்டசபை தேர்தலில் தனது வெற்றியை எதிர்த்து தாக்கலான மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட, சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இதையடுத்து, தனது வேட்பு மனுவை நிராகரித்தது சரியல்ல என்றும், தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, விஜயகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "வழக்கு தொடுத்திருக்கும் ஜெயந்தி என்பவர், ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள வாக்காளர் அல்ல. அவரது வேட்பு மனுவை, அந்த தொகுதியில் உள்ள 10 பேர் முன்மொழியவில்லை. ஜெயந்தியின் வேட்பு மனுவை நிராகரித்ததற்கு நான் எந்தவிதத்திலும் காரணமல்ல. எனக்கு எதிராக அவர் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

18 July 2012

ஜெயலலிதா, கருணாநிதி ஒரே இடத்தில் சந்திப்பு

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலும், எம்எல்ஏக்கள் அந்தந்த மாநில தலைமை செயலகத்திலும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. தமிழக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை தலைமை செயலகத்தில்தான் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழு அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சடிக்கப்பட்டு சென்னையில் தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பெட்டி கடந்த 15ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களும் நாளை சென்னையில் வாக்களிக்க உள்ளனர். அதிமுக எம்பிக்கள் 14 பேரும் சென்னையிலேயே வாக்களிக்க அனுமதி வாங்கி உள்ளதால், அவர்களும் நாளை சென்னையில் வாக்களிப்பார்கள். தேமுதிக புறக்கணிக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் தேமுதிக எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலையொட்டி தலைமை செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். பின்னர் 20ம் தேதி, தேர்தல் அதிகாரி ஒருவர் வாக்குப்பெட்டியை டெல்லிக்கு எடுத்துச் செல்வார். விமானத்தில் வாக்குப்பெட்டி தனி இருக்கையில் வைத்து கொண்டு செல்லப்பட உள்ளது.

போச்சி போச்சி பதவி போச்சி

சென்னை 18-7-12: தமிழக வருவாய்த்து‌றை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமிருந்து பதவிபறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக பெருந்துரை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக செங்கோட்டையன் திகழ்ந்தார். இதனைதொடர்ந்து அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தலைமை நிலையச்செயலாளர் பதவி தேடி வந்தன. கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் தொகுதிகளில் 7 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில் முதலில் அவருக்கு வேளாண்மைத்துறை வழங்கப்பட்டது. பின்னர் அநத பதவி மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அந்த பதவியும் பறிக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. 

இன்று ஜனாதிபதி தேர்தல் குறித்து அ.தி.மு.க, எம்.எல்.ஏ.,ககள் மற்றும் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.,களுக்கு முதல்வர் எச்சரி்க்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை செங்கோட்டையன் வகித்த தலைமை நிலையச்செயலாளர் பதவிபறிக்கப்பட்டது. அந்த பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் அவரிடமிருந்து வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. முதல்வர் பரிந்துரையின் பேரில் அமைச்‌சர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய வருவாய்த்துறை அமைச்சராக பெருந்துரை எம்.எல்.ஏ.,வான என்.டி., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

11 July 2012

நடுத்தர மக்களை கிண்டலடிக்கும் சிதம்பரம்

"பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனம்:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 500 வகுப்பறைகள் கட்டியது, புதிதாக 6.8 லட்சம் ஆசிரியர்களை நியமித்தது, ஒவ்வொரு நாளும் 11 கோடி குழந்தைகள் பலன் அடையும் வகையில், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியது போன்றவை எல்லாம், மன்மோகன் சிங் அரசின் சாதனைகள். இலவச கட்டாய கல்வியை அமல்படுத்தியது, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அமைத்தது போன்றவையும், கல்வித் துறையில் மத்திய அரசு படைத்த சாதனைகள்.
மின் துறையில் கூடுதலாக, 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக எட்டாயிரம் கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. உலகில் தொலை தொடர்பு சந்தையில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நெருக்கடியால் பாதிப்பு:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், முதல் இரண்டு ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில், எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. 2008ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்து விட்டாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியால், தற்போது நமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008ல் ஏற்பட்ட நெருக்கடியை விட, ஐரோப்பிய மண்டல நெருக்கடி மிக மோசமானதாக உள்ளது. சீனா மற்றும் சில நாடுகளைப் போல, மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. விரைவில் மிக உயர்வான வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு செல்லும். பிரச்னைகளில் இருந்து மீளும்.

பிரதமர் நடவடிக்கை:
நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த, வருவாயை அதிகரிக்கவும், தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

நன்றி: தினமலர் 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு

விரைவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தமது கட்சி ஆதரவு யாருக்கு என்று தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி தேர்தலோடு சேர்த்து துணை ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல், இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பிஜூ ஜனதா தள கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் பி ஏ சங்மாவை வேட்பாளராக களமிறக்கிய நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரபரப்பு நிலவிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் உடன் சேர்ந்து. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை ஆதரித்தார். ஆனால், அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், மம்தாவுடன் இணைந்து செயல்பட்ட முலாயம் சிங், திடீரென, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், சங்மாவிற்கு ஆ‌தரவு அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்தது.

மம்தா ஆதரவு யாருக்கு ? : பிரணாப்பிற்கும், சங்மாவிற்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் கட்சிகளி்ன் ஆதரவைப் பெற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசத் தயார் என்று இருவரும் அறிவித்துள்ள நிலையில், இதுவரை மம்தா யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது 16ம் தேதி, தனது ஆதரவு யாருக்கு என்பதை ‌தெரிவிக்க உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் அன்சாரி - காங்கிரஸ் : ஜனாதிபதி தேர்தல் பரபரப்பு சற்று அடங்கியநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீத் அன்சாரியையே, மீண்டும் அப்பதவியின் வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. 

மம்தா கடும் எதிர்ப்பு : ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு, மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியத‌ாவது, லோக்பால் மசோதா குறித்து ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஹமீத் அன்சாரி. இவ்வாறு இருக்கையில், அவரை மீண்டும் இப்பதவியில் நீடிக்கச் செய்யும் திட்டம் கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.

மம்தா பரிந்துரை : கோபால் காந்தி மற்றும் கிருஷ்ணபோஸை, துணை ஜனாதிபதி வேட்பாளர் மம்தா பரிந்துரைந்துள்ளார்.

புறக்கணிப்பு? : ஜனாதிபதி தேர்தலில், தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுபடுத்தாத நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தான் பரிந்துரைத்த வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலிக்கப்படாத பட்சத்தில், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்த‌லை மம்தா புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் ‌வெளியாகியுள்ளன.

நன்றி: தினமலர் 

05 July 2012

முதல் ஜனாதிபதியின் வங்கி கணக்கில் ரூ.1,812 இருப்பு

இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் ‌சேமிப்பு வங்கி கணக்கு கடந்த 50 ஆண்டுகளாக பீகாரில் வங்கி ஒன்றில் இன்னும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.இது வரை இருப்பு ரூ. 1,812 உள்ளது. இதனை வங்கி அதிகாரிகள் பராமரித்து வருவதாக பெருமையுடன் கூறி வருகின்றனர். 

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ரா‌ஜேந்திரபிரசாத் கடந்த 1952-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ஷிவான் மாவட்டம் ஜெராதி கிராமத்தில் பிறந்தார். காங்கிரஸ் ஆட்சியி்ல் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர். கடந்த 1952-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இரு முறை ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திரபிரசாத், 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இறந்தார். எனினும் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் 1962-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியன்று பீகார் மாநில தலைநகர் பாட்னா, கண்காட்சி சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பெயரி்ல் சேமிப்பு கணக்கை துவக்கினார். அவரது சேமிப்பு கணக்கு இன்று வரை செயல்பாட்டில்தான் உள்ளது என வங்கி நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

இருப்பு ரூ.1,812: இது குறி்த்து வங்கியின் சீனியர் மேலாளர் எஸ்.எல். குப்தா கூறுகையில், இந்தியாவின் முதல் ஜனாதிபதி, தனது ‌சேமிப்பு வங்கி கணக்கை எங்கள் வங்கியில் வைத்துள்ளது பெருமையாக உள்ளது. தற்போது அவரது சேமிப்பு வங்கி கணக்கு ‘ 0380000100030687 ’-என்ற எண்ணில் அவரது புகைப்படமும் ஓட்டப்பட்டுள்ளது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆடிட்செய்து இவரது கணக்கில் வட்டி தொகையை செலுத்தி வருகிறோம். இதுவரை அவரது கணக்கி்ல ரூ. 1,813 இருப்பு உள்ளது. இத்தொகையிவைன சொந்தம் கொண்டாட இதுவரை யாரும் வரவில்லை என்றார்.

04 July 2012

எதிர்பார்க்காத அளவுக்கு எழுச்சி: கருணாநிதி

திமுக நடத்தும் போராட்டத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிரமாண்டமான அளவில் போராட்டத்தில் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி : தி.மு. கழகம் நடத்தும் இன்றைய அறப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி : உண்மையைச் சொன்னதற்காக நன்றி.
கேள்வி : தமிழக அரசின் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட வந்திருப்பவர்களையெல்லாம் பயமுறுத்துவதைப் போலப் பேசுகிறார்களே?
கருணாநிதி : எதிர்பார்த்தது தான்!
கேள்வி : எழுச்சி எவ்வாறு உள்ளது?
கருணாநிதி : எதிர்பார்க்காத அளவிற்கு உள்ளது. மிகப் பிரமாண்டமான அளவிற்கு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
கேள்வி : அடுத்த கட்டப் போராட்டம் என்ன?
கருணாநிதி : இந்தக் கட்டம் முதலில் முடியட்டும்.
கேள்வி : அ.தி.மு.க. ஆட்சியினர் இந்தப் போராட்டத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?
கருணாநிதி : திருந்துவார்கள் என்று நம்பவில்லை. ஏனென்றால் அண்ணா அவர்களின் பெயரால் உள்ள நூலகம் உலகத் தரத்தோடு கட்டப்பட்டது. அறிஞர்களாலும், சான்றோர்களாலும் வியந்து பாராட்டப்பட்டது. அந்த நூலகத்தை இழிவுபடுத்த வேண்டும், ஆபாசப்படுத்த வேண்டுமென்பதற்காகவே திருமணங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். எனவே இந்த ஆட்சியினர் திருந்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

03 July 2012

தலை விரித்தாடும் லஞ்சம்


உள்ளாட்சி துறையில், அதிகாரிகள் பணி மாற்றம் முதல், சிறு சிறு வேலைகளுக்கும், அதிகாரிகளிடம் இருந்தே கட்டாயமாக லஞ்சம் வாங்கப்படுவதால், அதிகாரிகள் மத்தியில், பெரும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.பணம் பெற்று வேலைகளை செய்வதால், அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நடக்கும் முறைகேடுகளை, தட்டிக் கேட்க முடியாமல், மூத்த அதிகாரிகள் திணறி வருகின்றனர்.பணிகளுக்கான லஞ்சத் தொகையும் அதிகரித்து உள்ளதால், "இந்த ஆட்சியை விட, கடந்த ஆட்சியில் லஞ்சம் குறைவாகத் தான் இருந்தது' என, ஒப்பந்ததாரர்கள் குமுறத் துவங்கி உள்ளனர்.
அதிகாரிகள் குமுறல்:மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில், சென்னை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கமிஷனர்களாக உள்ளனர்.கடந்த ஆட்சியின் போது, மாநகராட்சிகளில், ஐ.ஏ.ஏஸ்., அதிகாரிகளை நியமிக்காததால், பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது, தி.மு.க., பின்பற்றிய அதே நடைமுறையை, அ.தி.மு.க.,வும் கடைபிடித்து வருகிறது.

தற்போது, பல்வேறு விஷயங்களுக்கு, அதிகாரிகள் கொடுக்க வேண்டிய லஞ்சம் மற்றும் மாதந்தோறும் கட்ட வேண்டிய, "கப்பம்' என, லஞ்ச நிலவரம் கட்டுக்கடங்காமல் உள்ளதாக, துறை அதிகாரிகள் குமுறுகின்றனர்.

அதிகாரிகள் தரப்பில் வைக்கப்படும் புகார் பட்டியல்:
*மாநகராட்சிகளில், கமிஷனர்களை நியமிக்க, ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெறப்படுகிறது.
*உள்ளாட்சி துறையில் இருந்து, அயல் பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும், அவரிடம் சில லட்சங்கள் பெறப்பட்ட பிறகே, பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
* சென்னையில், கடந்த ஆட்சியின் போது, பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு, முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று, பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 60 லட்ச ரூபாய் வரை, பணம் கைமாறி உள்ளது.
*மாநகராட்சிகளை போலவே, சென்னையை சுற்றியுள்ள நகராட்சிகளில், கமிஷனர்களை நியமிக்கவும், பணம் பெறப்பட்டு உள்ளது.
*பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில், மண்டல உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கும், பணம் பெறப்பட்டு உள்ளது.
*தி.மு.க., ஆட்சியின் போது, உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து அந்த பதவிகளில் நீடிக்க, பணம் அளித்துள்ளனர்.
* இது தவிர, மாதந்தோறும், மாநகராட்சிகள், ஐந்து லட்ச ரூபாய் வரையும்; நகராட்சிகள், இரண்டு முதல், மூன்று லட்ச ரூபாய் வரையும், அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப பணம் அளிக்கவும், மறைமுகமாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொடுத்த பணத்தை...:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத உள்ளாட்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணி இட மாறுதல்களுக்கு, உள்ளாட்சி துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்தே பணம் கேட்கப்படுகிறது. கொடுத்தால் மட்டுமே, மாறுதல் உத்தரவுகள் அளிக்கப்படுகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், பணி மாறுதல்களுக்கு, இந்த அளவில் பணம் வாங்கவில்லை.லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து, பணி மாறுதல்களைப் பெறும்போது, கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக, உள்ளாட்சி அமைப்புகளில் செய்யப்படும் அனைத்துப் பணிகளிலும், கமிஷன் அடிப்படையில், பணம் வாங்க வேண்டி உள்ளது.வீடு கட்ட அனுமதி அளித்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு எல்லாம், பொதுமக்களிடம் பணம் கேட்க வேண்டி உள்ளது. இதனால், நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியவில்லை. அமைச்சர் அலுவலகம் வரை கொடுக்க வேண்டும் என்பதற்காக, எதைப் பற்றியும் கவலையில்லாமல், பணம் வாங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

15 சதவீதம்!ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகளை ஒதுக்கும்போது, பணம் பெற்ற பின்னரே, பணி ஆணைகள் வழங்கப்படுவதாக, ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பணி ஆணை பெறும் முன்பே பணத்தை அளிப்பதால், பணியின் தரத்தை, அதிகாரிகளால் கண்காணிக்க முடிவதில்லை.

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கூறும்போது, ""கடந்த ஆட்சியில், பணிக்கு, 5 சதவீதம் பணம் வாங்கப்பட்டது. இதில், இரண்டு சதவீதத்தை பணி நடக்கும்போதும், பணி முடிந்து ஒப்பந்தத் தொகையை பெறும்போது, மீதமுள்ள மூன்று சதவீதத்தையும் அளிப்போம். இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது, 10 முதல், 15 சதவீதம் அளிக்கும்போது, நஷ்டம் ஏற்படாமல் இருக்க, பணியில் சமரசம் செய்ய வேண்டி உள்ளது,'' என்றார்.

இது வேறு கணக்கு:ஒப்பந்ததாரர்களிடம் பெறப்படும் கமிஷனில், உள்ளாட்சி அமைப்பின் கவுன்சிலர்களுக்கும், பங்கு அளிக்கப்பட்டு வந்தது. இப்போது, கவுன்சிலர்களுக்கு கொடுக்காமல் இருப்பதால், கவுன்சிலர்கள், தங்கள் இஷ்டம் போல், "கை' நீட்ட ஆரம்பித்து விட்டனர். ஒருபுறம், பணி மாறுதலுக்கு கொடுத்த பணத்தை எடுக்க, அதிகாரிகள் செயல்பட, மற்றொரு புறம், தேர்தலில் செலவு செய்த காசை பார்க்க, கவுன்சிலர்கள் வசூல் வேட்டையைத் துவக்கி உள்ளனர்.இதுமட்டும் அல்லாமல், உள்ளாட்சி துறைகளோடு தொடர்புடைய, குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற துறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கிறது.சென்னை கவுன்சிலர்களை அடக்க, சாட்டையை சுழற்றிய முதல்வர், அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் லஞ்ச வேட்டையை தடுக்க, என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT