உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

17 July 2012

விருப்பமின்றி ஜனாதிபதி தேர்தலில் பிரணாபுக்கு மம்தா ஆதரவு


கோல்கட்டா: ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என திரிணமுல் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. பிரணாப்பை ஆதரிப்பது என்பது விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவு என அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல், இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பிஜூ ஜனதா தள கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் பி ஏ சங்மாவை வேட்பாளராக களமிறக்கிய நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரபரப்பு நிலவிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் உடன் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை ஆதரித்தார். ஆனால், அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், மம்தாவுடன் இணைந்து செயல்பட்ட முலாயம் சிங், திடீரென, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், சங்மாவிற்கு ஆதரவு அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தங்களது ஓட்டு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்க திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று கோல்கட்டாவில் நடந்தது. கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, “ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிப்பது என முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக தேர்தலில் போட்டியிட அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவும் கூட. எங்களிடம் உள்ள 50 ஆயிரம் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை. எனது முடிவு குறித்து பிரதரிடமும், பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவித்து விட்டேன்” என்று தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரணாப் நன்றி: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதை வரவேற்றுள்ள பிரணாப் முகர்ஜி, இதற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பிரணாபுக்கு ஆதரவு ஏன்? பிரணாபை ஆதரிப்பது என்ற மம்தாவின் முடிவு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நிம்மதியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. மம்தாவின் இந்த முடிவு, அவர் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்க விரும்புவதை காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் களத்தில் தான் தனித்து விடப்படுவதை அவர் விரும்பவில்லை என்பதையும் இம்முடிவு காட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமலர் 

03 July 2012

ஆகஸ்ட் 7ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்


புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வரும் ஜூலை 6ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள ஜூலை 20ம் தேதி கடைசிநாள். அதற்கு அடுத்த நாள் வேட்பு மனு பரீசிலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள ஜூலை 23ம் தேதி. துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஆகஸ்ட் 7ம் தேதி அன்றே நடைபெறும். லோக்சபா மற்றும் ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களும் இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் தகுதி பெறுகின்றனர். இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது 20 பேர் முன் மொழிய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பிரணாப் முகர்ஜி வேட்பு மனு செல்லுமா? சங்மா புதிய ஜனாதிபதி ஆகிவிடும் நிலை உள்ளது.


"ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது' என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிவு பெற்று, நேற்று வேட்புமனுக்கள் பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பார்லிமென்ட் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான ராஜ்யசபா செயலாளர் அலுவலகத்தில் இதற்கான பணிகள் காலை 11 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன. அப்போது முற்றிலும் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.

புகார் மனு: சங்மா தரப்பில் சங்மாவும் அவரது வழக்கறிஞர் சத்யபால் ஜெயினும் நேரில் ஆஜராகி ஒரு புகார் மனுவை அளித்தனர். கோல்கட்டாவில் உள்ள இந்திய புள்ளியில் மையத்தில் தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி நீடிக்கிறார். ஆதாயம் பெறும் இன்னொரு பதவியில் நீடிக்கும் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லத்தக்கதல்ல. எனவே அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நிராகரிக்க கோரிக்கை:சங்மா தரப்பில் இதுபோன்ற ஒரு அதிரடி கோரிக்கை கிளம்பியவுடன் பிரணாப் முகர்ஜியின் தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிரணாப் முகர்ஜியின் சார்பில் பவன் குமார் பன்சலும், சிதம்பரமும் உடனடியாக விரைந்தனர். தேர்தல் அதிகாரியான அக்னிகோத்ரி, இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்தார். அப்போது வழக்கறிஞர் சத்யபால் ஜெயின், அரசியல் சட்ட விதிமுறைகளை எடுத்துச் சொல்லி, ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் பிரணாப் நீடித்துக் கொண்டே, ஜனாதிபதி தேர்தலுக்கும் மனுதாக்கல் செய்திருப்பது முற்றிலும் தவறானது. எனவே அவரது வேட்புமனுவை எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது. உடனடியாக நிராகரிக்க வேண்டுமென்று வலியுத்தினார்.

காலஅவகாசம்:இதுகுறித்து விளக்கம் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டுமென பவன்குமார் பன்சாலும், சிதம்பரமும் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஒருநாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து தேர்தல் அதிகாரியான அக்னி கோத்ரியிடம் நிருபர்கள் விளக்கம் கேட்டுப் பார்த்தனர். எவ்வளவோ முயன்றும் அவர் விரிவாக எதையும் பேச மறுத்து விட்டார். தொடர்ந்து விடாப்பிடியாக கேட்டபோது, "வேட்புமனு பரிசீலனை இன்னும் முடியவில்லை. அந்த பணி தொடர்கிறது. இந்த பிரச்னையில் ஒரு தரப்பு விளக்கத்தை மட்டுமே இன்று கேட்டுள்ளேன். எதிர்தரப்பு விளக்கத்தை நாளை (இன்று)கேட்க வேண்டியுள்ளது. அதன்பிறகு எனது முடிவை நான் அறிவிப்பேன்' என்றார்.

சட்ட விரோதம்:பிரணாப் மனுவை நிராகரிக்க வேண்டுமென புகார் மனு அளித்துள்ள வழக்கறிஞர் சத்யபால் ஜெயினை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: சட்டத்திற்கு விரோதமாக பிரணாப் முகர்ஜி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆதாயம் அடையும் பதவியில் அவர் நீடிக்கிறார். அது முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். நாங்கள் எங்களது புகாரை மூன்று பக்கங்களில் கடிதமாக அளித்துள்ளோம். புகாரை ஏற்றுக் கொண்டு எதிர்தரப்பிடம் தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார். தங்களுக்கு இரண்டு நாட்கள் கால அவகாம் வேண்டுமென சிதம்பரமும், பவன்குமார் பன்சாலும் கேட்டனர். அது கூடாது என்றும் இரண்டு நாட்கள் கால அவகாசம் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்தோம்.இதனால், ஒருநாள் மட்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் இரண்டு மணிக்கு மீண்டும் வேட்புமனு பரிசீலனை தொடங்கும். மூன்று மணி வாக்கில் எங்களது புகார் மீது தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத்தை படிக்கட்டும்: வேட்புமனு பரிசீலனையின்போது இதுபோன்ற எதிர்ப்பை தெரிவிப்பதற்கு காரணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என, காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறதே என கேட்டபோது, " வேட்பு மனுதாக்கல் செய்து பரிசீலனையின் போதுதான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். இதுதான் சட்டம். காங்கிரஸ்காரர்கள் முதலில் சட்டத்தை படித்து விட்டு வரட்டும்' என்றார். வேட்புமனு பரிசீலனையின்போது கிளம்பியுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக, ஜனாதிபதி தேர்தலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காரணம் இந்திய வரலாற்றிலேயே இதுபோன்ற பிரச்னை ஜனாதிபதி தேர்தலில் இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவர், ஆதாயம் பெறும் இன்னொரு பதவியில் இருக்கிறார் என்ற புகாரை மையமாக வைத்து கிளம்பியுள்ள இதுபோன்ற பிரச்னை இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை.

முன்பே ராஜினாமா:இந்த பிரச்னை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த ஒருசில மணி நேரங்களிலேயே கோல்கட்டாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,"பிரணாப் முகர்ஜி தன் பதவியை பல நாட்களுக்கு முன்பே ராஜினாமா செய்து விட்டார்' என அறிவித்துள்ளது. இருப்பினும், என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஜனாதிபதி தேர்தலை தொற்றிக் கொண்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட் போக வாய்ப்பு :பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தபோது, "இவ்விஷயத்தில் தேர்தல் அதிகாரியின் நிலை மிகவும் தெளிவற்றதாக உள்ளது. அரசியல் சட்டத்தில் கூறியுள்ளபடி, ஆதாயம் பெறும் பதவியில் இருந்தால் அவர் போட்டியிடும் தகுதியை இழப்பார் என்றே உள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல்களுக்கான விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை. தவிர வேட்பு மனுவின்போது பணம் பற்றாக்குறையாக கட்டுதல், போதிய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதம் அளிக்காதது போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கும் முடிவை, தேர்தல் அதிகாரியே எடுக்க முடியும். ஆனால், அரசியல் சட்டவிதிகளை மையமாக கொண்ட சிக்கல் எழுந்தால் அதை சுப்ரீம் கோர்ட்தான் தீர்மானிக்க முடியும். எனவே, இந்த விவகாரம் கோர்ட்டிற்கு போவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.

டம்மி வேட்பாளர்இல்லவே இல்லை:இப்போது வேடிக்கை என்னவெனில், ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளரை தவிர எப்போதுமே டம்மி வேட்பாளர்கள் இருவரை காங்கிரஸ் நியமிப்பது வழக்கம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டவுடன், இதுகுறித்த ஆலோசனையும் காங்கிரசில் நடந்துள்ளது. மூத்த தலைவர்கள் கரண்சிங், மோஷினா கித்வாய் ஆகிய இருவரையும் டம்மி வேட்பாளர்களாக நியமிக்கும் திட்டம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இம்முறை என்ன காரணத்தினாலோ காங்கிரஸ் அதை செய்ய தவறிவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி, காங்கிரஸ் சார்பில் களத்தில் உள்ள வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஒருவர் மட்டுமே. டம்மி வேட்பாளர் யாரும் இல்லை. ஒருவேளை வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், தடங்கல் ஏதுமின்றி சங்மா புதிய ஜனாதிபதி ஆகிவிடும் நிலையும் உள்ளது.

மற்றவர்களின் மனு நிராகரிப்பு : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகிய இருவரது வேட்பு மனுவைத் தவிர, மற்ற அனைவரது வேட்பு மனுக்களும் நேற்றைய பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களின் பரிசீலனைக்காக நேற்று இவர்களில் பலர் வந்திருந்தனர். எல்லாம் முடிந்து கடைசியாக கிளம்பும் நேரத்தில், ஒருவர் திடீரென தனது பைக்குள் இருந்த சங்கை எடுத்து, ப்பூ....ங் என ஊத ஆரம்பித்தார். பிரணாப் மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய பிரச்னைக்காக, அப்போது தான் அந்த பக்கமாக சிதம்பரம் வேறு வந்தார். சங்கு ஊதுவதைப் பார்த்தவுடன், பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த நபரைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

28 June 2012

தமிழக தேர்தல் மன்னன் பத்மராஜன் ஜனாதிபதி' பதவிக்கு போட்டி: இதுவரை, 133 முறை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

மேட்டூர்:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், வழிமொழிவோருக்கு வழியின்றி தவிக்கிறார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன் (55). பாராளுமன்ற தேர்தல் முதல் உள்ளூர் கூட்டுறவு சங்க தேர்தல் வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட பத்மராஜன் மனுதாக்கல் செய்வது வழக்கம். ஜனாதிபதி தேர்தல், லோக்சபா, ராஜ்யசபா தேர்தல், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பீகார் உள்பட பல்வேறு மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட இதுவரை, 133 முறை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இதுவரை மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன், முன்மொழிவோர், வழிமொழிவோர் இல்லாததால் தவிக்கிறார்.

23 June 2012

நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் பிரணாப்

மத்திய நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி, தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வசதியாக, நாளை தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் பிரணாப் முகர்ஜி.

22 June 2012

பிஏ.சங்மா எந்த தேர்தலிலும் தோற்றதில்லை

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் போட்டியில் வெற்றிபெறுவேன் என முன்னாள் மக்களவைத் தலைவர் பிஏ.சங்மா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் தோற்றதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுவரை நான் போட்டியிட்ட தேர்தல்களில் ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய வெற்றி வித்தியாசம் கூடித்தான் வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
போட்டி இருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்காகத்தான் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டபோது, இது வெறும் அடையாளப் போட்டி அல்ல. தீவிரமான போட்டி. குடியரசுத் தலைவர் தேர்தலை அடையாளத் தேர்தலாக கருத முடியாது. இது கடுமையானது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இதர கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவின் மூலம் இது கடுமையான தேர்தல் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என சங்மா தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. எனவே இப்போதே எண்ணிக்கை விவரங்கள் குறித்த கேள்வியை எழுப்ப முடியாது. மனசாட்சிப்படி விழும் வாக்குகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என சங்மா தெரிவித்தார்.
மேலும் மமதா பானர்ஜியும் எனக்கு ஆதரவளிப்பார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT