உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

19 December 2012

மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


"மின் உற்பத்தி, வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின் நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின்வெட்டு குறித்த தகவலை, மீடியாக்கள் மூலம், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இம்மனுவுக்கு, டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன் தாக்கல் செய்த பதில் மனு:
மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை, விரைந்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில், மின்சார நிலைமை மேம்படும். மின்வெட்டுப் பிரச்னையை குறைக்க, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டி அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையெனில், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

"முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ள திட்டங்களை, அமல்படுத்த வேண்டும். மின் உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான திட்டங்களை அமல்படுத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதில் மனுவில் கூறியுள்ளபடி, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, இவ்வழக்கு நிலுவையில் வைக்கப்படுகிறது. விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

01 September 2012

வரதட்சணை கேட்டால் ஏழு ஆண்டு சிறை தண்டனை

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

25 July 2012

பிரிந்த காதல் மனைவியை/கணவரை சேர சட்டம் உதவுமா?


ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.

பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குபின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.

திருமணத்திற்குபின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.


கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.


மணவாழ்வுரிமை மீட்பு சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.


மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.


இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத்தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

நன்றி:  ADV பி. சுந்தரராஜன்

சட்டப்படி திருமணம் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது.

சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல்போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது.

இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு சிறப்பு திருமணச் சட்டம் (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்/தகுதிகள்:

  1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும்தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

நன்றி:  ADV பி. சுந்தரராஜன்

திருமணப்பதிவு செய்வது எப்படி?


திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.
இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.

எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது.

மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.

இந்து திருமணத்தை பதிவு செய்தல்.

இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள்வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது.

உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.

அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.

இஸ்லாமியத் திருமணங்கள்

இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.

திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? DIVORCE


இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்குநடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது. 

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே என்பதை புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ,புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் மணவிலக்குஎன்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.
இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.
உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்கமணவாழ்வுரிமை மீட்பு சட்டம் பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை
என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குகைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா?என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy),விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோஇல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்தகணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும்மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே தலாக் எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலேகூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி

  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,


  1. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

  1. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

  1. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

  1. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால்
    பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.
அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!

இந்திய பெண்ணுரிமையும், திருமண வயதும் ..!


குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.
நன்றி: - இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

தற்கொலை சட்டம் என்ன சொல்கிறது



இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் அல்லது உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், 1980லிருந்த தற்கொலை விகிதத்தை விட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகமாகும் என்றும், அதிகப்படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதே போல 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 41% சுய தொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில் இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8% இதர பிரிவினர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 2.5 விழுக்காடு தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைகள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” (National Crime Record Bureau) தனது அறிக்கையில் கூறுகிறது. 

தற்கொலைக்கான காரணங்கள்:


மன அழுத்தம், மன சிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடு செய்யமுடியாத இழப்பு, தாங்கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப்பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக, வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பது போன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன. 




மதங்களும் தற்கொலைகளும்:


அகித்தொப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.” என்று புனித வேதாகமத்தின், 2 சாமுவேல் அதிகாரம் 17, வசனம் 23லும், “அப்பொழுது அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து விட்டு, புறப்பட்டுபோய், நான்று கொண்டு செத்தான்” என்று மத்தேயு அதிகாரம் 27, வசனம் 5ல் கூறப்பட்டுள்ளது.


இருப்பினும் கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொலைகளை கண்டிக்கின்றன.


வரலாற்றில் தற்கொலைகள்:


சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய காலகட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் என்பவரும், நாட்டின் விடுதலைப்போரில் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி இறந்தபோது அவரது தகனத்தின் போது, அவரது மனைவிகள் 56 பேரும் அந்த நெருப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழ மக்கள் தங்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தற்கொலைப் படையை உருவாக்கினார்கள்.


இந்திய தண்டனைச் சட்டம்,1860:


பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 


“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி  அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.   


பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 


“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும்  பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.


பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி: 


“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து  தண்டிக்கப்படுதல் வேண்டும்”.




இந்திய அரசியல் சாசனம்,1950:


சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது”.


இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை:


1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கையானது,   “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது. 




தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:


1986ஆம் ஆண்டு, ‘தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 


மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான  ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக,  மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.


அவரது தர்ப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால்  அதேவேளையில்  அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.


ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது.
    
தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:


மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச  நீதிமன்றமும் உறுதி செய்தது.


தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்:


வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.


தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமையை தவிர்த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சனைகளின் போது தனக்குப்பிடித்தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். 


தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவிர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரியவைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். 


ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகையாகும். இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.  
நன்றி: - இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT