உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

05 January 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம்


புதுடில்லி: "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும்படி உத்தரவிட முடியாது. இதற்கான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் டிவிஷன், "பெஞ்ச்' தெரிவித்துள்ளது.

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரமிளா சங்கர் என்பவரும், சமூக ஆர்வலர் ஒமிதா துபே என்பவரும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், அவர்கள் கூறியிருந்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை, பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கவும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணைகளை, பெண் நீதிபதிகளே நடத்தவும் உத்தரவிட வேண்டும்.பெண்களின் பாதுகாப்பிற்காக, தற்போது உள்ள சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அவற்றை அமல்படுத்தும்படி, ஆணையிட வேண்டும்.பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில், பெண்களின் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். :

இந்த மனுக்கள் நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், டிவிஷன், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, உத்தரவிடும் அதிகாரம், சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை. எனவே, மனுவில் விடுக்கப்பட்டுள்ள, அது தொடர்பான வேண்டுகோள் குறித்து விசாரிக்க முடியாது.
அதேநேரத்தில், அரசியல்வாதிகளுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.அத்துடன், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தற்போதுள்ள சட்டத்தை கடுமையாக்குவது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டியின், விசாரணை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தை போல சட்டம்:

"பாலியல் பலாத்காரங்களை தடுக்க, பார்லிமென்ட் சட்டம் இயற்றும் என்று காத்திராமல், மகாராஷ்டிரா மாநில அரசே, தற்போதுள்ள தன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று தாக்கல் செய்த, பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி மோகித் ஷா மற்றும் நீதிபதி மோக்தா ஆகியோர் அடங்கிய, மும்பை ஐகோர்ட், "பெஞ்ச்' இந்த உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, சட்டங்களை திருத்துவது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்; இதுதொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். "ஈவ்-டீசிங்'கை தடுக்க, தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது; அதேபோல், இங்கும் இயற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

20 December 2012

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி!! நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!


பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ‌லை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ‌தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

16 September 2012

இனி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான்


புதுடில்லி: மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வரும் என, தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, மானிய விலையில் விற்பதால், நடப்பு நிதியாண்டில் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன், டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படா விட்டாலும், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது, சிலிண்டர் ஒன்றுக்கு, 347 ரூபாய் வரை, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், இதைத் தவிர்க்கும் வகையில், இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த கட்டுப்பாடு, எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றிய, அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்துக்கான கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வரும். மானிய விலையில் அல்லாமல், சந்தை விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை குறித்து, சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, மாதம் தோறும் அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றன.
நன்றி: தினமலர் 

17 August 2012

சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை: விரைவில்


சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்' தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு' தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.

இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்' என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்ட போது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது. இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்' தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

14 August 2012

வறுமை, பசியை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டம்


புதுடில்லி: பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்கள் இருந்த போதும், நாட்டின் பொருளாதாரம் மீண்டுவரும் என தான் நம்புவதாக தெரிவித்த பிரணாப், நாட்டின் கிழக்குப்பகுதிகளுக்கும் பசுமைப்புரட்சி சென்றடையவேண்டும் என்று குறிப்பிட்டார். நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் நாடு மிக அதிகமாக சாதித்துள்ள போதும், இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளதாக கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சராசரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மிகவும் பின்தங்கிய பகுதிகள் தேசிய நீரோட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார். நாட்டில் நோய், பசி மற்றும் வறுமையை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரணாப் அழைப்பு விடுத்துள்ளார்.

13 August 2012

பார்லி.,முற்றுகை; ராம்தேவ் கைது


புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவர வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் யோகாகுரு பாபா ராம்தேவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசினர். 
பார்லி., முன்பு தொண்டர்களுடன் தர்ணா போர் நடத்தப்போவதாக அறிவித்தத‌ையடுத்து இங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது . ‌‌தொடர்ந்து பார்லி., நோக்கி புறப்பட்ட அவரை ஆதரவாளர்களுடன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கடந்த 9ம் தேதி முதல் 3 நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மத்திய அரசிடம் இருந்து முடிவை கேட்டார். ஆனால் அரசு தரப்பில் எவ்வித பதில் அறிக்கையும் இல்லை. இதனால் கோபமுற்ற ராம்தேவ் பார்லி.,யை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்.

பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஆதரவு:இன்று போராட்ட மேடைக்கு பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், ஜனதாகட்சி தலைவர் சு.சாமி, தெலுங்குதேசம், சிவசேனா, சி.பி.ஐ.,, நிர்வாகிகள், ஆகியோர் பங்கேற்றனர்.

மேடையில் நிதின் கட்காரி பேசுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைளே, நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது. கறுப்புப் பணம் குறித்து பேசுபவர்கள் மீது, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, கறுப்புப்பணம் குறித்துப் பேசிய ராம்தேவின் உதவியாளர் பால்கிருஷ்ணா மீது போலி பாஸ்போர்ட் வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்தேவ் போராட்டத்திற்கு பா.ஜ.,முழு ஆதரவு அளிக்கும் .இவ்வாறு கட்காரி பேசினார்.

கொடுமை மயானத்தையும் விட்டு வைக்கவில்லை


மேலூர்: மதுரை மேலூர் பகுதியில், அரசு புறம்போக்கு, கண்மாயை ஆக்கிரமித்த குவாரி உரிமையாளர்கள், மயானத்தையும் விட்டு வைக்கவில்லை. மயானம் மற்றும் கண்மாயை ஆக்கிரமித்திருந்த கிரானைட் குவாரிக்கு சொந்தமான, ஒரே பதிவெண் கொண்ட இரு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது வரை கிரானைட் குவாரிகளில் நடந்த சோதனைகளில், அனைத்து குவாரிகளுமே முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்களது பட்டா இடத்தின் அருகில் உள்ள வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், களங்கள் என எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவற்றை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்த அவர்கள், அதிகாரிகள் சோதனையால், தோண்டிய பள்ளங்களில் மண்ணை கொட்டி மூடினர். எவ்வளவு தூரம் வெட்டப்பட்டது, எவ்வளவு வருவாய் இழப்பு என்பதை அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை. கற்களை வெட்டிய பிறகு வெற்றிடமாக உள்ள இடங்களை மட்டுமே 'டோட்டல் ஸ்டேஷன்' உதவியுடன் அளக்கின்றனர். பல இடங்களில் முறைகேடாக வெட்டி எடுத்து வரப்பட்ட கற்களை பதுக்கி வைத்ததையும் கண்டுபிடித்தனர். அவற்றையும் அளக்கும் பணி ஒரு இடத்தில் மட்டும் நடக்கிறது. "ஸ்டாக் யார்டு' என கூறப்படும் இது போன்ற இடங்கள் கீழவளவைச் சுற்றி பல உள்ளன. இவற்றை முழுமையாக அளக்க சில நாட்களாகும்.

மயானம் ஆக்கிரமிப்பு: நேற்று கீழவளவு பெட்ரோல் பங்க் எதிர்புறம் உள்ள மதுரா கிரானைட்டில் துணை கலெக்டர் குணசேகரன், கனிம வளத்துறை துணை தாசில்தார் சிவபாலன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மயானம் மற்றும் குளத்தை, இக்குவாரி ஆக்கிரமித்து இருந்தது ஆய்வில் தெரிந்தது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கழிவு கற்களை அடுக்கி வைத்திருந்ததும், ஊழியர்களுக்கான ஓய்வறையை அரசு இடத்தில் கட்டியிருந்ததும் தெரிந்தது. இவ்வளாகத்தில் இரு டிப்பர் லாரிகளுக்கு ஒரே பதிவெண் எண் (டி.என் 30 இசட் 1679) இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பின், லாரிகள் மற்றும் கட்டிங் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

சாக்கு மூடையில் கிரானைட் குவாரி ஆவணங்கள்:வாகனங்களில் பதுக்கல்: மதுரை மேலூரில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், குவாரிக்கு சொந்தமான இரு வாகனங்களில், மூடைகளில் கட்டப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மதுரை மேலூர் பகுதியில் சட்ட விரோத குவாரிகளால், அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதன்படி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சிறப்பு குழுக்களை நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 குவாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது வரை 22 பேரைகைதுசெய்துள்ளனர். மதுரா கிரானைட் நிறுவன வாகனங்கள் சில, சந்தேகத்தின்படி, கீழவளவு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டன. நேற்று முன் தினம், இரவு 11 மணிக்கு, கொடுக்கம்பட்டி வீரையா என்பவரது வீடு அருகில், இவ்வாகனங்கள் நின்றன.

பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அம்பாசிடர் கார் (டி.என்.59 எப் 7177), மாருதி வேனை (டி.என்.20 ஏபி 9616) சோதனையிட்டார். மாற்று சாவி மூலம், வாகனங்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார். அந்த வாகனங்களில், சில சாக்கு மூடைகள் கிடந்தன. மேலும் குவாரி ஆவணங்கள் குவிந்து கிடந்தன. இதுதொடர்பாக, வீரையாவிடம் விசாரணை நடக்கிறது.

12 August 2012

இலங்கை எம்.பி்க்கள் டெசோ மாநாட்டில் பங்கேற்காது என அறிவித்துள்ளது

கொழும்பு: ‌டெ‌சோ கூட்டமைப்பு மாநாட்டில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காது என அறிவித்துள்ளது. அவ்வமைப்பை சேர்ந்த சம்மந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து கட்சிகளும் இணைந்து நடத்தினால் பங்கேற்போம் என தமிழ் தேசியகூட்டமைப்பு மாநாடு தெரிவித்துள்ளது. மாநாட்டு முடிவை அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

10 August 2012

ஈழம் என்ற வார்த்தைக்கு தடை : மத்திய உள்துறை அமைச்சகம்

டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்தியா சுதந்திரப்போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்த கடிதத்தின் தாக்கம் உள்ளது. டெசோ என்பது தமழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல. ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஊழலில் இந்தியா தங்கம் வெல்லும்

ஆக., 10 : ஒலிம்பிக்கில் ஊழலுக்கு பதக்கம் வெல்வதாக இருந்தால் இந்தியா நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்லும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.


ராம்லீலா மைதானத்தில் தனது போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ராம்தேவ, ஊழலில் இந்தியா தங்கம் வெல்லும் என்று கூறியதும், கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டினர். இதற்கு இது கைதட்ட வேண்டிய விஷயமல்ல என்று கூறினார்.

06 August 2012

தமிழக அரசுக்கு ரூ16,338 கோடி இழப்பு

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு
தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
6 மாதங்களில் சுமார் 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப்பட்டு வருகிறது என்று தினபூமி நாளிதழின் ஆசிரியர் தமது புகார் மனுவில் கூறியிருந்தார். இப்புகார் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 14,24, ஜனவரி 28, பிப்ரவரி 3 ஆகிய நாட்களில் இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. தினபூமி ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் 6 மாதத்தில் ரூ1650 கோடி மதிப்பிலான கிரானைட் கற்ககள் கடத்தப்படவில்லை. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 13-ந் தேதி மேலூர் தாசில்தாரால் ஒரு கிரானைட் கல் வாகனம் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒலிம்பஸ் நிறுவனம்
தினபூமி நாளிதழ் ஆசிரியர் தமது புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கீழவளவு கிராமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கீழவளவு மற்றும் கீழையூரில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. 3 குவாரிகளில் மட்டும் ரூ23.42 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
ரூ16,338 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் எஞ்சிய 91 குவாரிகளிலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் டாமின் குவாரிகளில் இருந்து சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. மேலும் கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது
கனிம வள அதிகாரிகள் உடந்தை
பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற கிராமங்களில் கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் இதற்காகப் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர்.
கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர் மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

05 August 2012

மீண்டும் வன்முறை : பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

கவுகாத்தி : கடந்த சில நாட்களாக அமைதி திரும்பியிருந்த அசாம் மாநிலத்தில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. இன்று நடந்த வன்முறையில் சிக்கி 5 பேர் பலியாயினர். இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

அச்சத்தில் அசாம்: அசாம் மாநிலத்தில் இருபிரிவினருக்கிடையே நடைபெற்ற மோதல், பெரும் வன்முறையாக வெடித்தது. சிறிய அளவில் பரவிய வன்முறை, சிராங், கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களையே புரட்டிப் போட்டது. இந்த வன்முறையில் சிக்கி 56 பேர் பலியாயினர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அவர்கள் பாதுகாப்பிற்காக மாற்று இடத்திற்கு புலம்பெயர்ந்தனர்.

நாட்டின் களங்கம் - பிரதமர் : அசாம் மாநிலத்தில் நிலவிய வன்முறை, நாட்டின் களங்கம் என, அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநில மறுசீரமைப்பிற்கு ரூ. 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ‌அதில் முதற்கட்டமாக, கோக்ராஜ்ஹர் மாவட்ட மறுசீரமைப்பு பணிக்காக ரூ. 100 கோடியும், வன்முறையில் பலியானவர்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மீண்டும் வன்முறை : இந்நிலையில், அமைதி திரும்பிய நிலையில், இன்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது. கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் நிலவிய வன்முறையில் 2 பேரும், சிராங் மாவட்டத்தில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு : இன்று நிகழ்ந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

விரைவில் லோக்பால் மசோதா

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். தலைநகர் டில்லியில், தனியார் டிவி சேனலுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது, அன்னா குழுவினர் மேற்கொண்ட போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இப்போராட்டம், தங்களை மேலும் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க ஏதுவாக இருந்தது. 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ‌லோக்பால் மசோதா‌வை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

காந்திக்கு 11 லட்சம், காமராசர்க்கு 37 லட்சம் ஒதுக்கீடு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"" என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பாரதம் பெற்ற தவப்புதல்வர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் நினைவினை போற்றும் வகையில் 
சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின்  திருவுருவச் சிலை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை பராமரிக்க 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்
இதன்படி, மகாத்மா காந்தியடிகளின் சிலையின் பீடத்தில் தற்போதுள்ள சலவை கற்கள் அகற்றப்பட்டு, புதிய சலவை கற்கள் பொருத்தப்படும்.  மேலும், சிலையின் பீடத்திற்கு மேலுள்ள சுவற்றினை புனரமைப்பது, சிலையின் பின்புறம் துருப்பிடிக்காத இரும்பில்  கைப்பிடியுடன்  கூடிய ஏணி அமைப்பது, கூடுதலாக மின் விளக்குகள் அமைப்பது, சிலையை சுற்றி பூந்தொட்டிகள் வைப்பது, சிலையிலுள்ள சிறு சிறு குறைபாடுகளை சரி செய்து வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

""""தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" என்பதையும் தாண்டி தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும் என்ற பெருநோக்கோடு தமிழகத்தில் 
கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவினை போற்றும் வகையில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள  
மணி மண்டபத்தை புதுப்பிக்க  37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து   தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார்

இதன்படி, பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தில் தற்போதுள்ள சுவர் மற்றும் தரைத் தளத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் அகற்றப்படுதல், புதியதாக சிமெண்ட் பூசுதல், கிரில் பணிகள்,ஆன கைப்பிடிகள் அமைக்கும் பணிகள் 28 லட்சத்து 
32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தண்ணீர் வசதிகளுடன் கூடிய தோட்டம் 2 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலும், மின் பணிகள் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்,   ஆன  சட்டம் மற்றும் தேக்கு மரத்திலான அலங்காரப் பணிகள் 
1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் இதர செலவினங்கள் 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்  என மொத்தம் 37 லட்சம் ரூபாய் செலவில் பணிகள்  மேற்கொள்ளப்படும்.

31 July 2012

வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை

புதுடில்லி : வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் ஒரு மாத கால அவகாசம் அளித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி செலுத்த ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைவருக்கும் ஒரு மாத கால அவகாசம் அளித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

30 July 2012

45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளது


இந்தியன் பில்லர்ஸ் என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது,

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக இந்த கால் சென்டர் செயல்பட்டுவருகிறது. இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் இரத்த கால்சென்டருக்கான திட்ட இயக்குனர் ரேணுகாதேவி தெரிவித்தது:
ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது, இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வளங்கிஉள்ளோம் இது எங்களுக்கு பெருமையாக உள்ளது, இந்த பெருமைக்கு முழு காரணம் உரிய நேரத்தில், உரிய இடத்திற்கு வந்து இரத்தம் கொடுக்கும் தன்னர்வலர்களே.

தினமும் இரத்த தேவைக்காக இருபது முதல் முப்பத்தைந்து இதில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தினமும் குறைந்தது ஒரு அலைபேனும் வருகிறது, அதிகமாக இருதைய அறுவை சிகிச்சை, டெங்கு காய்ச்சல், தலசிமிய, பிரசவம் மற்றும் விபத்து போன்றவற்றிற்கான அழைப்புகள் வருகிறது.

சரியான விபரங்களை கொடுத்தால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் எந்த பகுதியாக இருந்தாலும், பாசிடிவ் வகை இரத்தம் எனில் இரத்தம் கொடுக்க கொடையாளர் மிகஅதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த இடத்தை வந்து விடுகின்றனர். இதே நெகட்டிவ் வகை இரத்தம் எனில் ஒரு அரை மணி நேரம் கூடுதல் ஆகலாம்.

தருமபுரி, ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரத்தம் கேட்ட ஐந்து நிமிடங்களில் எல்லாம் இரத்த கொடையாளர் அந்த மருத்துவமணை-ஐ அடைந்துள்ளனர்  இரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம், இதற்காக அந்த மருத்துவமனைகள், மருத்துவர்கள், இரத்த வங்கிகள் அளித்துள்ளனர் (தங்கள் பார்வைக்க சிலவற்றை இணைத்துள்ளோம்)

கால் சென்டர் துவங்கிய அன்று எங்களிடம் மாநில அளவில் சுமார் 60,000 தன்னார்வலர்களின் விபரங்கள் தான் இருந்தது, ஆனால் இந்த 45 நாட்களில் மட்டும் புதியதாக மாநில அளவில் எஸ்.எம்.எஸ். , மின்னஞ்சல், மூலம் 42,180 பேர் பதிவு செய்துள்ளனர், மொத்தம் இன்று வரை எங்களிடம் இரத்தம் கொடுக்க எங்களிடம் 1,02,180பேர் பதிவு செய்துள்ளனர், இதில் சுமார் 80% பேர் 18 - 28 வயதுடைய இளைஞர்கள், எனினும் இதில் ஒ (O) பாசிடிவ் மற்றும் பி(B) பாசிடிவ் தான் அதிக அளவில் உள்ளனர். நெகட்டிவ் வகை இரத்தம் உடைய தன்னார்வலர்கள் மிக குறைவாகவே உள்ளனர்,

கோரிக்கை:
இனி இரத்தம் தேவைபடுபவர்கள் எங்களை அழைக்கும் பொது நோயாளி பெயர், வயது, அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை விபரங்கள், தேவையான இரத்த வகை ஆகிய விபரங்களை சரியாக கொடுக்க வேண்டுகிறோம்.
மேலும் ஒருவருக்கே இரத்தம் வேண்டி பல பேர் அழைக்கின்றனர், இதனை தவிர்க்க வேண்டுகிறோம்.

புதியதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர், வயது, இரத்த வகை, முகவரி, மாவட்டம் ஆகிய விபரங்களை 94888-48222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்,எஸ், அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் அல்லதுblood@indianpillars.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் வினோத் கூறியது:
இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் சார்பில் இரத்த தானத்திற்காக துவங்கப்பட்ட கால் சென்டருக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்ப்பு உள்ளது,

இரத்த தானத்தினை  தொடர்ந்து இந்த மாதம் (ஆகஸ்ட்) கண் தானத்திர்க்கான மாநிலம் தழுவிய கால் சென்டர் துவங்க திட்டமிட்டு உள்ளோம், இந்த எண் வெளியிடுவதோடு மட்டுமல்லாது கண் தானத்தினை அதிகபடுத்தும் விதமாக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ள உள்ளோம், இவை இரண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட உள்ளோம்.

26 July 2012

கார்களுக்கு கேஸ் கட்டாயமாகிறது


 குஜராத் ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று, அம்மாநிலத்தில் கார் வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க குஜராத் மாநிலத்தில் இயங்கும் அனைத்து ரக கார்களையும் இன்னும் ஒரு வருட காலத்திற்கு இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் காராக மாற்றுவதற்கு புதிய சட்டம் கொண்டு வரும்படி மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு, தனியார் மற்றும் பொதுமக்கள் என அனைவர்களின் கார்களுக்கும் இது பொருந்தும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் வழக்கு திடீர் திருப்பம்

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை அரசு மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


இருதரப்பு வாதங்களும்  கேட்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இன்று தீர்ப்பளிப்பதாக இருந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அளிக்க மறுப்புத் தெரிவித்துள்ள நீதிபதிகள்,  இந்த வழக்கை வேறு நீதிபதியின் முன் மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை,  பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக்க தற்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

23 July 2012

திறந்த வெளியில் கழிவுகளை வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: புதிய சட்டம்

திறந்த வெளியில் கழிவுகளை வீசினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஆறுகள் மற்றும் பொது இடங்கள் உட்பட சுற்றுப்புறங்கள் மாசுபடுவதை தடுப்பதற்கு, கேரள அரசு பதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளது.அதன்படி பொது இடங்களில் சிறு நீர் கழித்தால், 100 ரூபாய் அபராதமும், இந்த தவறு தொடர்ந்தால், தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீரை பொது இடங்களில் திறந்து விட்டாலோ, திறந்த வெளியில் கழிவுகளை வீசினாலோ, குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்காத பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். வீடுகளில் உள்ள கழிப்பறை கழிவுகளை ஓடைகளில் திறந்து விட்டால், 500 ரூபாயும், குடி நீர் மற்றும் துணி துவைக்கும் கழிவு நீர் போன்றவற்றை பொது இடங்களில் திறந்து விட்டால், 2,500 ரூபாயும், அபராதமாக வசூலிக்கப்படும். ஓட்டல்களில் இருந்து கழிவு நீரை நேரடியாக ஆறுகளில் திறந்து விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால், 500 ரூபாயும், அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகளை வாடகைக்கு கொடுத்தால், 250 ரூபாயும், அபராதமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

20 July 2012

மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில் ஆபாசக் காட்சிகள்


சென்னை: மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதை, சென்னையில் நடந்த சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மூன்று மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பர்மா பஜார், இரண்டாவது கடற்கரை சாலை, பாரிமுனை ரத்தன் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். இதில் புதுப்பட மற்றும் ஆபாசப் பட "சிடி'க்கள் சிக்கின. பர்மா பஜாரில் முகமது சகி கடையில் நடந்த சோதனையில், மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அலைபேசியில் பயன்படுத்தப்படும் மெமரி கார்டுகளில் பதிவு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த வகையான மெமரி கார்டுகள், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், பென் டிரைவ்கள் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக முகமது சகி மற்றும் சையத் இப்ராகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எட்டாயிரம் ரூபாய்: மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்த விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. இவற்றில் சில பர்மா பஜார் சந்தையில், 10 ஆயிரம் ரூபாய் வரையில் விலை வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் வியாபாரிகள், அதிக விலைக்கும், ஆபாசப் படக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். தற்போது அரசின் விலையில்லா மடிக்கணினிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக, பர்மா பஜார் பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT