உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label சம்பவம். Show all posts
Showing posts with label சம்பவம். Show all posts

05 January 2013

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு

தேனி: தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது. பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.
டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

19 December 2012

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார்.

இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு


கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.

ரயில்வே துறையில்: 8800 ஊழல் வழக்குகள் பதிவு

புதுடில்லி : ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 8800 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது 8430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது 5026 வழக்குகளும், டில்லி நிர்வாக அதிகாரிகள் மீது 4783 ஊழல் வழக்குகளும், நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது 3921 வழக்குகளும் 2011ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 2960 வழக்குகளும், தொலைதொடர்பு துறை பணியாளர்கள் மீது 1918 வழக்குகளும், பெட்ரோலியத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 1877 வழக்குகளும், உணவுத் துறை அதிகாரிகள் மீது 1544 வழக்குகளும், சுங்கம் மற்றும் கலால் வரி துறை பணியாளர்கள் மீது 1296 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரதமருக்கு பள்ளி மாணவி நோட்டீஸ்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்தது குறித்து பிரதமருக்கு பள்ளி மாணவி ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்த பிரதமர், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வயதாகும் ஊர்வசி ஷர்மா, பள்ளி மாணவி மட்டுமல்ல, ஆர்ஐடி சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்


அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தி்ல் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரி்ல்லியன் டன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22 ஆம் தேதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர்.

மாணவிக்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம்


புதுடில்லி: தனது ஆண் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு, சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலமாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பஸ் டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பஸ்சை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். பஸ்சில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பஸ் முனிர்கா பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் ஆண் நண்பருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் என்ன செய்கிறாய் என கும்பல் கேள்வி எழுப்ப, அதற்கு நண்பர் பதிலளிக்க, ஒரு கட்டத்தில் கும்பல் ஆண் நண்பரை தாக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கும்பலின் கோபம் இளம்பெண்ணை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அந்த கும்பல். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கும்பல் இளம்பெண்ணை பஸ்சில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பஸ்சில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பஸ்சில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

24 August 2012

சாதனை 50 வாலிபர்களை மணந்த பெண்


காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக த்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள்.

புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வாரம் வரை எனது மனைவி என்றே நினைத்திருந்தேன். கடந்த வாரம்தான் அவள் ஒரு மோசடி ராணி என்ற அந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.
சகானா செல்போன் மூலம்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனாள். எடுத்த எடுப்பிலேயே உங்கள் குரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது என்றுதான் சகானா ஆரம்பித்தாள். ஆனால் நான் அவளை நேரில் பார்த்தபிறகுதான், அவளது காதலை ஏற்றேன். வக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் செய்வதாகவும் சொன்னாள்.
அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாக சொன்னாள். முதலில் பெற்றோருக்கு தெரியாமல் அவளை ரகசிய திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு எனது பெற்றோர் ஆசியுடன் முறையாக அவளை, தாலி கட்டி மணந்தேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து அவளை கைப்பிடித்தேன்.
தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ளது என்றும் எனது பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் அவள் சொன்னாள். இதை நம்பினேன்.

2 மாதம் அவள் என்னோடு நல்ல மனைவியாக வாழ்ந்தாள். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை வேண்டும் என்று சொல்லி, சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தாள். அதன்பிறகு அவளை விடுதிக்குச் சென்று பார்த்து வந்தேன்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விடுதியை காலி செய்துவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசி வந்தாள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத போய்விட்டதாக சொன்னாள். அவளால் நான் இழந்தது பல லட்சம் இருக்கும்’’ என்று கூறினார்.



இன்னொரு வாலிபர் பிரசன்னாவும், கேரள அழகியிடம் மோசம் போனது பற்றி கண்ணீருடன் விளக்கினார். நானும் டிப்ளமோ என்ஜினீயர்தான். புளியந்தோப்பில் நான் வசிக்கிறேன். கால்பந்து வீரராகவும் உள்ளேன்.

நான் சகானாவை புரசைவாக்கத்தில் ஒரு கடையில் சந்தித்தேன். முதலில் காதலை சொன்னாள். அடுத்து ரகசிய திருமணத்தில் விழவைத்தாள். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டேன். 2 மாதம் மட்டும் என்னோடு மனைவியாக வாழ்ந்தாள். எனக்கு நல்ல மனைவியாக இன்பத்தையும் வழங்கி, சமைத்து கூட போட்டாள்.

அதன்பிறகு வக்கீலுக்கு படிக்கிறேன் என்று சொல்லி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசுவாள்.


எனக்கு தெரியாமல் எங்கள் வீட்டுக்கு, பக்கத்து தெருவில் வசிக்கும் எனது உறவினர் சுரேசையும் இதுபோல் ஏமாற்றி மணந்து இருக்கிறாள். ஒரு நாள் எனது தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்றாள். அங்கு சுரேசின் தாயார் சகானாவை பார்த்து, எனது தாயாரிடம், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறாள். எனது தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறார். உடனே சகானா, சுரேசின் தாயாரை பார்த்து, மிரட்டி இருக்கிறாள். நான் பிரசன்னாவின் மனைவிதான் என்று அடித்து கூறிவிட்டு வந்துவிட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் நிலையத்திற்கும் வந்து, பிரசன்னாதான் எனது கணவர் என்று சகானா சத்தியம் செய்தாள். அவளை மாயக்காரி என்று தான் சொல்ல வேண்டும். நானும் அவளால் ரூ.5 லட்சத்தை இழந்து நிற்கிறேன் என்று கூறினார்.

மோசக்காரி சகானா சட்டையை கழற்றுவதுபோல, மாப்பிள்ளைகளை கழற்றி இருக்கிறாள். இதுவரை அவளது மாப்பிள்ளை கணக்கை பார்த்தால், 50-ஐ தொடும் என்று சொல்லுகிறார்கள். கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் அல்லாது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு போன்ற போலீஸ் நிலையங்களிலும் அவளது மாப்பிள்ளைகளின் புகார்கள் உள்ளன.

மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த புருஷன்கள் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று, சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கேரளாவிலும் அவளிடம் ஏமாந்த கணவன்கள் உள்ளனர். இப்போது இந்த புகார்கள் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். மாயக்காரி சகானாவை போலீசார் தேடி வருகிறார்கள். 
நன்றி: நக்கீரன் 

22 August 2012

தேசிய கொடியை அவமதித்த பிரபல நடிகர் மீது வழக்கு


புனே:தேசியக் கொடியை அவமதித்ததாக அளித்த புகாரின் பேரில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மீது, புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புனே நகரின், சாதுஷிரிங்கி போலீஸ் நிலையத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு எதிராக, லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலர் ரவி பிராமி, புகார் ஒன்றை அளித்தார். அதில், "யூடியூப் வலைதளத்தில், நடிகர் ஷாரூக்கான், "அப்லோடிங்' செய்த வீடியோ காட்சியில், தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஷாரூக்கான் மீது, "தேசிய கவுரவ சின்னங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், 1971'ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "14ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் விசாரணைக்காக, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது' என, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஷாரூக்கானுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமாக, சில புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும், போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஷாரூக்கான் மீது புகார் தெரிவித்த, ரவி பிராமி, ஏற்கனவே மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஜெக்னா வாசிஷ்ட் என்பவர் மீதும், சமீபத்தில் புகார் கொடுத்தார். அதில், "தேசிய கொடியை, பிகினியாக (நீச்சல் உடையாக), ஜெக்னா வாசிஷ்ட் அணிந்து நடித்துள்ளார்' என, தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து, 18ம் தேதி, மாடல் அழகியை புனே போலீசார் கைது செய்தனர். மறுநாள் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

14 August 2012

தமிழகத்தில் பெட்ரோல் கண்டுபிடிப்பு

புதுடில்லி: தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அருகே பெட்ரோல் வளம் இருப்பதை எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் கண்டுபிடித்துள்ளது. மதனம் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் வயல், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கே 14 கி.மீ., தொலைவில் காவிரி படுகையில் உள்ளது. இந்த எண்ணெய் வயல் மூலம் நாள் ஒன்றிற்கு 115 கியூபிக் மீட்டர் எண்ணெயும், 11 ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் எரிவாயுவும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஓ.என்.ஜி.சி., தெரிவித்துள்ளது.

13 August 2012

குரூப்-2 தேர்வு கேள்வித்தாள் லீக்ஆனது எப்படி பரபரப்பு தகவல் !


ஈரோடு: கேள்வித்தாள் வெளியானதையடுத்து டி.என்.பி.எஸ்.சி.,குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநத கேள்வித்தாள் எப்படி வெளியானது என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும் பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதில் பல்வேறு திடுக் தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் குரூப் -2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 6 . 4 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நேற்று தேர்வு நடந்தபோது ஈரோட்டில் மாணவி தனக்கொடி ஒருவர் வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். தேர்வு முடிந்ததும், வெளியே வந்தவர்கள், தனக்கொடியை கண்புபிடித்தனர். அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். உண்மையிலேயே கேள்வித்தாள் லீக்கானதா என விசாரிக்கப்பட்டது. இது போன்று கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லீக்கானது கண்டுபிடிக்கப்பட்டது . 

இது தொடர்பாக இன்று ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் தனக்கொடியிடம் டி.ஆர்.ஓ., கணேசன், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர், இதில் தனக்கொடி தனது கணவன் செந்தில் மூலம் கிடைத்ததாக தெரிவித்தார். செந்திலை விசாரித்த போது , நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த சுதாகர்மூலம் கிடைத்ததாக தெரிவித்தார்.சுதாகர் இப்போது ஈரோட்டை சேர்ந்த வரதராஜன் என்பவைர கை காட்டியுள்ளார். தொடர்ந்து இது சங்கிலி தொடர் போல போய்க்கொண்டிருப்பதால் உண்மை குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

மெயில் மூலம் வினாத்தாள்: கேள்வித்தாள் பரிமாற்றம் மெயில் மூலமாகவே வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை , திருச்சி மற்றும் நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மெயில் பரிமாற்றம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் பிடிபட்டவர்களிடம் அவர்களது மெயில் ஐ.டி.,யை ஓப்பன் செய்ய போலீசார் கூறியபோது அவர்கள் தங்களின் பாஸ்வேர்டு மறந்து விட்டதாகவும்,மெயிலை திறக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். 

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நட்ராஜ் பேட்டி: முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தேர்வு ரத்து செய்யப்படுவது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நட்ராஜ் கூறியதாவது, வினாத்தாள் தயாரிப்பு பணி போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் லீக் ஆகி இருப்பது வேதனை தருகிறது. மக்கள் மற்றும் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். விரைவில் புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, குழு அமைக்கப்பட உள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, அதை தேர்வுமையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

12 August 2012

மாட்டுக்கு கொம்பு சீவுவோருக்கு: ஐ.டி., தொழிலை விட கூடுதல் வருமானம்


சந்தைக்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவுவதை தொழிலாக கொண்டுள்ளவர்கள், ஐ.டி., துறையில் உள்ளவர்களை விட, அதிகம் சம்பாதிக்கின்றனர்.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழக அளவில் ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு அருகே மோர்ப்பாளையம், கரூர் அருகே உப்பளமங்கலம், பொள்ளாச்சி சந்தைகளைப் போல், ஈரோடு மாட்டுச் சந்தையும் பிரபலமானது.
சந்தையில் மாடு வியாபாரம் ஒருபுறம் நடக்கிறது என்றால், மாடுகளுக்கு தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப்பட்டைகள் போன்றவை விற்பனையும் களை கட்டும். அதுபோல், மாடுகளுக்கு கொம்பு சீவுதல், லாடம் கட்டும் தொழிலும் அமோகமாக நடக்கிறது.

மாடுகளுக்கு கொம்பு சீவி, லாடம் கட்டும் தொழிலாளி காளிமுத்து கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாட்டுச் சந்தைகளுக்கு வாரந்தோறும் செல்வேன். அங்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவி வருகிறேன். கத்தி, அரம், ரம்பம், கட்டிங் மிஷின் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வேன். மாடுகளின் கொம்புகளில் ஏற்கனவே பூசப்பட்டுள்ள பழைய பெயின்டை அரத்தால் சுரண்டிவிட்டு, பின் கொம்புகளை தேவைக்கேற்ப செதுக்கியும், நறுக்கியும் அழகுபடுத்துவேன்.ஒரு மாட்டுக்கு, 50 ரூபாய் கூலி வாங்குகிறேன். ஒரு மணி நேரத்தில் எட்டு மாடுகள் வீதம், ஒரு நாளைக்கு, 70 மாடுகள் வரை கொம்பு சீவுவேன். பெரும்பாலும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு கொம்பு சீவி வாங்கிச் செல்வர். காளைகளுக்கு காலில் லாடம் கட்ட, 300 ரூபாய் வாங்குகிறேன். இத்தொழிலில் பத்து பேர் ஈடுபட்டுள்ளனர். சந்தை முடிந்ததும், மறுநாள் சந்தை கூடும் ஊருக்கு சென்று விடுவோம். வாரம் ஐந்து நாள் இத்தொழிலில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கொம்பு சீவும் தொழில் வெளித்தோற்றத்துக்கு சாதாரணமாக தெரிந்தாலும், கொம்பு சீவுபவர் ஒரு நாளைக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். தற்போதைய நிலையில் இன்ஜினியரிங் படித்து விட்டு, ஐ.டி., துறையில் சம்பாதிப்பவர்களை விட, மாட்டுக்கு கொம்பு சீவுபவர்கள் சம்பாதிப்பது அதிகம் தான்.
நன்றி: தினமலர் 

10 August 2012

ஈமு கோழிகள் இறக்கும் பரிதாபம்


ஈரோடு:பெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனம் மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, பெருந்துறையில் இயங்கி வந்த, ஐந்துக்கும் மேற்பட்ட, ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவு, தண்ணீரின்றி இந்நிறுவனங்களில் உள்ள ஈமு கோழிகள் பரிதாபமாக இறக்க ஆரம்பித்துள்ளன.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிக அளவு ஈமு கோழி நிறுவனங்களும், பண்ணைகளும் உள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், ஈமு வளர்ப்பு திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், "சுசி' ஈமு நிறுவனத்தில், கடந்த மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படாததால், முதலீட்டு தொகையை திருப்பி கேட்டு, முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"சுசி' ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை, மூன்று நாட்களாக முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், பெருந்துறை பகுதியில் இயங்கி வந்த, பிற ஈமு நிறுவனங்களும், மூடுவிழா காணத் துவங்கி உள்ளன.

தலைமறைவு:"சக்தி டிரேடர்ஸ், சக்தி ஈமு பார்ம்ஸ், ஸ்ரீ ஈமு பார்ம்ஸ், நிதி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ்' உட்பட, 10க்கும் மேற்பட்ட ஈமு கோழி நிறுவனங்களில், நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.பெருந்துறை, "குயின்' ஈமு பார்ம்ஸ் அலுவலகத்தில், நேற்று காலை முதலீட்டாளர்கள் குவிந்தனர். அந்நிறுவனத்தின் அனைத்து தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களும் துண்டிக்கப்பட்டு விட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை, "குயின்' ஈமு அலுவலகத்தில், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

உணவில்லை...இதே போல், பெருந்துறை - குன்னத்தூர் ரோடு, கிரே நகரில் உள்ள, "குயின்' ஈமு பண்ணையில் பராமரிப்பாளர்களும் மாயமாகி விட்டனர். இதனால், தண்ணீர், உணவின்றி அங்குள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஈமு கோழிகள், இறக்கும் நிலையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடக்கின்றன.உணவு வழங்கப்படாததால், இறந்த கோழிகளின் உடலை, மற்ற கோழிகள் கொத்தித் தின்று பசியாறும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோழிகள் இறந்து கிடப்பதால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

07 August 2012

பேஸ் புக் மூலம் ஏமாந்தது எப்படி? : பாதிக்கப்பட்ட பெண்கள் கதறல்

பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள், மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, "பேஸ்புக்' மூலம், வேலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவருடன், உல்லாசமாக இருந்து, கற்பை இழந்தார். பின், வேலூர் கூடுதல் எஸ்.பி., முருகேசனிடம் புகார் செய்தார். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பேஸ் புக் மூலம் கற்பை இழந்த, மேலும் சில பெண்கள், புகார் கொடுக்க வேலூர் வந்திருந்தனர். அவர்கள் கூறியதாவது: காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது.
இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார். பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர். லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்த்ராஜ், பெங்களூருக்கும், சில பெண்களை அழைத்து கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றுள்ளனர். உல்லாசமாக இருக்கும்போது, அதை வீடியோவில் படம் எடுத்தவர் லூயிஸ். இவர் வேலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜீன்ஸ் அணியும் பெண்கள் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் முழுவதும் ஜீன்ஸ் அணியும் பெண்கள் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி சங்கம் சார்பில் கைகளால் எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் காணப்படுகிறது. ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பிறகு பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது எனவும், மீறி அணியும் பெண்கள் மீது ஆசிட் வீசப்படும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நிலங்களை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள் மீதும் இது போன்ற தாக்குதல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற எச்சரிக்கை போஸ்டர்களை தாங்கள் முதல் முறையாக இப்போது தான் பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

06 August 2012

தமிழக அரசுக்கு ரூ16,338 கோடி இழப்பு

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு
தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
6 மாதங்களில் சுமார் 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப்பட்டு வருகிறது என்று தினபூமி நாளிதழின் ஆசிரியர் தமது புகார் மனுவில் கூறியிருந்தார். இப்புகார் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 14,24, ஜனவரி 28, பிப்ரவரி 3 ஆகிய நாட்களில் இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. தினபூமி ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் 6 மாதத்தில் ரூ1650 கோடி மதிப்பிலான கிரானைட் கற்ககள் கடத்தப்படவில்லை. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 13-ந் தேதி மேலூர் தாசில்தாரால் ஒரு கிரானைட் கல் வாகனம் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒலிம்பஸ் நிறுவனம்
தினபூமி நாளிதழ் ஆசிரியர் தமது புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கீழவளவு கிராமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கீழவளவு மற்றும் கீழையூரில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. 3 குவாரிகளில் மட்டும் ரூ23.42 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
ரூ16,338 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் எஞ்சிய 91 குவாரிகளிலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் டாமின் குவாரிகளில் இருந்து சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. மேலும் கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது
கனிம வள அதிகாரிகள் உடந்தை
பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற கிராமங்களில் கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் இதற்காகப் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர்.
கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர் மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

சீக்கியர்கள் கோயிலில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி: 20 பேர் படுகாயம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில், மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் ‌சீக்கிய கோயிலான குருதுவாராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தின் ஓ-கிரீக் நகரின் மில்வயூக்கி பகுதியில் சீக்கியர்களின் ‌கோயிலான குருத்வாரா உள்ளது. இக்கோயிலில் நேற்று அமெரிக்க உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் இரு நபர்கள் துப்பாக்கியுடன் தி‌டீ‌ரென புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக சுட்டனர்.

இதில் 20 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாயினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த இந்தியா - தொடர்ந்து அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது. சீக்கிய அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.சம்பவம் குறித்து விஸ்கோன்சியஸ் மாகாண கவர்னர் ஸ்காட் வாக்கர் , பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் துப்பாக்கி சூடு : அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி , அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், நுழைந்த ஜேம்ஸ்ஹோம்ஸ் என்ற 24 வயது இளைஞன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இருவாரங்களுக்குள் , விஸ்கோன்சிஸ் மாகாணத்தில் சீக்கிய கோயிலில் மற்ற‌ொரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கோரிக்கை: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், அமெரிக்காவில் குருத்வாரா கோயிலில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தி்ல ஏற்படாமல் மத தலங்களுக்கு அமெரிக்கா தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

எப்.பி.ஐ. விசாரணையை துவக்கியது: விஸ்கோன்சின் மாகாண துப்பாக்கிச்சூடு சம்பவம் குறி்த்து அந்நாட்டு புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கியுள்ளது. அமெரிக்காவின் புலானய்வு அமைப்பான எப்.பி.ஐ. , சம்பவ இடத்தினை பார்வையிட்டு தனது முதல்கட்ட விசாரணையை துவக்க உள்ளது. 

ஒபாமா கண்டனம்: குருத்வாரா கோயில் துப்பாக்கிச்சூட்டிற்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த இரு வாரங்களில் இரண்டாவதுமுறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது வருத்தத்திற்குரியது என்றார்.

9/11 டாட்டூ : இதனிடையே எப்.பி.ஐ., போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில் கண்மூடித்தனமாக சுட்டவன் வெள்ளை நிற டீ-சர்ட்டும், கறுப்பு நிற பேண்ட் அணிந்து இருந்ததாகவும், அவனது கையில் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவ நாளான 9/11 டாட்டூ வரையப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் குருத்வாரா கோயிலுக்கு அருகில் தான் வசித்ததாகவும், அவனது வீட்டை போலீசார் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

30 July 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ;தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த பரிதாபம்;50 பேர் பலி

புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு பெட்டியில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர்.

புது தில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்,  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்‌கு விரைந்த‌ார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோது, இந்த விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது...என்றார்.

நெல்லூர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து குறித்து அறிய உதவி எண்கள்:

நெல்லூர் உதவி எண்கள்: 0861-2345863, 2345864, 2345865, 2345866

28 July 2012

இந்தியாவின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை

இந்தியாவின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்ற பெருமையை ரமேஷ் - ரஜினி தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தை தட்டிச் சென்றது. அது பிறக்கும் போது வெறும் 565 கிராம் (அரை கிலோ) மட்டுமே இருந்துள்ளது.


மே 21ம் தேதி பிறந்த இந்த பெண் குழந்தை 3 மாதமாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று தனது பெற்றோருடன் வீட்டுக்குச் சென்றுள்ளது.

27 July 2012

கனமழை கரை புரண்டு ஓடுகிறது வெள்ளம்: பூஜைக்கு கிடைத்தது பலன்


பெங்களூரு: கர்நாடகாவில் மழை வேண்டி, அரசு சார்பில், 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையின் பலனாக, கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் மழை பெய்தது.
கர்நாடகாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழை இல்லாமல், மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, 123 தாலுகாக்கள் வறட்சி தாலுகா என, அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, 23 தாலுகாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாவாக கூடுதலாக மாநில அரசு அறிவித்தது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும், ஜூன், ஜூலை மாதங்களில் பருவ மழை பெய்யும். இந்தாண்டு கோடை மழையும் இல்லை, பருவ மழையும் பெய்ய வில்லை. இதையடுத்து, கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி, மாநிலம் முழுவதுமுள்ள, 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தார். இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மழை வேண்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு கோவில்களுக்கு தலா, 5,000 ரூபாய் செக்குடன் கோவில்களில் காலை முதல் மாலை வரை நடத்த வேண்டிய பூஜைகள், ஹோமங்கள் குறித்து விளக்கத்துடன் அனைத்து கோவில்களுக்கு ஒரு சுற்றிக்கையாக அனுப்பப்பட்டது. இதற்காக மாநில அரசு, 17.5 கோடி ரூபாய் செலவு செய்தது. இதற்கு சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர். இப்பணத்தை வைத்து, தண்ணீர் திட்டம் அல்லது வேறு எதாவது திட்டம் செயல்படுத்தியிருக்கலாம். இது தேவையில்லாத செலவு என, கூறினர். இன்று காலை முதல் மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் தொடங்கியது. மாநிலத்திலுள்ள, 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆரம்பமானது. சுவாமிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, மழைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. சில கோவில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.

மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலில் இன்று காலை சிவாச்சார்யார்கள் கலசத்தில் நீர் எடுத்து, ஊர்வலமாக சென்று சாமுண்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் மழைக்காக சிறப்பு பூஜை செய்தனர். அதே போன்று, நஞ்சன்கோடு நஞ்சுண்டேஸ்வரா, மங்களூரு குக்கே சுப்பிரமணியா கோவில், ஹலசூரு சோமேஸ்வரர் கோவில் உட்பட ஹாசன், சிக்மகளூரு, தாவணகரே, பீதர், கொப்பால், குல்பர்கா, ஷிமோகா உடபட மாநிலத்தில் அனைத்து கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று காலை 11 மணியளவில் இருந்து லேசான மழை பெய்தது. தென் கர்நாடகா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அதே போன்று தாவணகரே, குடகு உட்பட மூன்று மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மூன்று மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. மேல் பத்ரா அணைகட்டு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. சிக்மகளூரு, ஷிமோகா, மடிகேரி, தாவணகரே, சோமவார்பேட், வீராஜ்பேட், சக்லேஷ்புர், மங்களூரு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பூஜைக்காக சிறப்பு பூஜை செய்தால், மழை வந்தாக பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT