உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

05 January 2013

அமெரிக்க பார்லிமென்ட்டில் பகவத் கீதை படித்து எம்.பி.,யாக பதவி ஏற்ற பெண்


வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவில், நவம்பரில் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு,31, பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.

துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:

என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு துளசி கூறினார். ஹவாய் சட்டசபை உறுப்பினராக, 21 வயதில் பதவி ஏற்றவர் துளசி. வளைகுடா போரில் பங்கேற்பதற்காக, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலிபோர்னியாவிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அமி பெராவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை குஜராத்தை சேர்ந்தவர். அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வாகியுள்ள மூன்றாவது இந்தியர் அமி பெரா. 1950ல், தலிப் சிங்கும், 2005ல், குடியரசு கட்சி சார்பில், பாபி ஜின்டாலும், எம்.பி.,யாக பதவி வகித்துள்ளனர்.

19 December 2012

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார்.

இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்புக்கு சட்டம் அனுமதி

டப்ளின்: அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, தாயின் உயிருக்கு ஆபத்து இருக்குமேயானால் கருக்கலைப்பு செய்யலாம் என அறிவுறுத்துகிறது. கருக்கலைப்பு தொடர்பாக சில வாரங்களுக்கு முன் அயர்லாந்தில் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சவீதா மரணமடைந்தத‌ை அடுத்து 7 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்புக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12 August 2012

கடும் நிலநடுக்கத்திற்கு 250 பேர் பலி ; 2 ஆயிரம் பேர் காயம்


டெஹ்ரான்: ஈரான் நாட்டு மக்கள் பலரும் நிலநடுக்கத்தில் சிக்கி 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவில் 2 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 6.3 என பதிவாகியது. கிழக்குஅஜர்பைஷானில் உள்ள வர்ஷகான், தப்ரீஸ் அஹர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் அடியோடு பெரும் தேசத்தை சந்தித்திருக்கிறது. வீடுகளை இழந்தவர்கள் தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு பொருட்களாக ரொட்டித்துண்டுகளும், குடிநீரும் வழங்கப்பட்டன. பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 கிராமங்கள் முழுமையாக பாதிக்ப்பட்டுள்ளதாகவும், ஏனைய 60 கிராமங்கள் 50 சதம் முதல் 80 சதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கடந்த 2003 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 25 ஆயிரம் பேர் பலியாயினர்.

அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி?

டெஹ்ரான்: ஈரானின் வடமேற்கு பகுதியில் அடுத்தடுத்து இரண்டுமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40 முதல் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் டப்ரிஸ் மற்றும் அர்டிபில் நகரில் ஏற்பட்டதாகவும், இதில் 400 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 மற்றும் 6.0 என பதிவானது.

10 August 2012

சீன பெருஞ்சுவரில் பாதிப்பு

பீஜிங்: தொடர் மழை காரணமாக சீன பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நாட்டின்மீது எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குவதை தவிர்ப்பதற்காக (1368-1644) இடைப்பட்ட கால கட்டத்தில் வடக்கு சீனாவில் ஹைபே மாகாணத்தில் இந்த பெருஞ்சுவர் கட்டப்பட்டது. தற்போது இவை உலக அதிசயங்களுள் ‌ஒன்றாக பாதுகாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம் மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழைபெய்துவருதையடுத்து சுமார் 36 மீட்டர் நீள அளவிற்கு பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அ‌திக மழையால் பெரும்பாதிப்பிற்குள்ளாகும்நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

06 August 2012

சீக்கியர்கள் கோயிலில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி: 20 பேர் படுகாயம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில், மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் ‌சீக்கிய கோயிலான குருதுவாராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தின் ஓ-கிரீக் நகரின் மில்வயூக்கி பகுதியில் சீக்கியர்களின் ‌கோயிலான குருத்வாரா உள்ளது. இக்கோயிலில் நேற்று அமெரிக்க உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் இரு நபர்கள் துப்பாக்கியுடன் தி‌டீ‌ரென புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக சுட்டனர்.

இதில் 20 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாயினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த இந்தியா - தொடர்ந்து அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது. சீக்கிய அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.சம்பவம் குறித்து விஸ்கோன்சியஸ் மாகாண கவர்னர் ஸ்காட் வாக்கர் , பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் துப்பாக்கி சூடு : அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி , அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், நுழைந்த ஜேம்ஸ்ஹோம்ஸ் என்ற 24 வயது இளைஞன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இருவாரங்களுக்குள் , விஸ்கோன்சிஸ் மாகாணத்தில் சீக்கிய கோயிலில் மற்ற‌ொரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கோரிக்கை: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், அமெரிக்காவில் குருத்வாரா கோயிலில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தி்ல ஏற்படாமல் மத தலங்களுக்கு அமெரிக்கா தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

எப்.பி.ஐ. விசாரணையை துவக்கியது: விஸ்கோன்சின் மாகாண துப்பாக்கிச்சூடு சம்பவம் குறி்த்து அந்நாட்டு புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கியுள்ளது. அமெரிக்காவின் புலானய்வு அமைப்பான எப்.பி.ஐ. , சம்பவ இடத்தினை பார்வையிட்டு தனது முதல்கட்ட விசாரணையை துவக்க உள்ளது. 

ஒபாமா கண்டனம்: குருத்வாரா கோயில் துப்பாக்கிச்சூட்டிற்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த இரு வாரங்களில் இரண்டாவதுமுறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது வருத்தத்திற்குரியது என்றார்.

9/11 டாட்டூ : இதனிடையே எப்.பி.ஐ., போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில் கண்மூடித்தனமாக சுட்டவன் வெள்ளை நிற டீ-சர்ட்டும், கறுப்பு நிற பேண்ட் அணிந்து இருந்ததாகவும், அவனது கையில் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவ நாளான 9/11 டாட்டூ வரையப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் குருத்வாரா கோயிலுக்கு அருகில் தான் வசித்ததாகவும், அவனது வீட்டை போலீசார் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

செவ்வாயில் வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியது!

நியூயார்க் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று (06.08.12) வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி ஆய்வு மையத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 

பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ., தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் ஊயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கான படங்களையும் வெளியிட்டது நாசா. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், அதில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான சூழல் இருக்கிறதா...? என்பது பற்றி ஆய்வு செய்யவும் ரோவர் என்ற புதிய விண்கலம் ஒன்றை உருவாக்கியது நாசா விண்வெளி மையம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி ‌மையத்தில் இருந்து அட்லஸ் ராக்‌கெட் மூலம் ரோவர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கம் : ரோவர் அனுப்பப்பட்டு சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று (6ம் தேதி) திங்கட்கிழமை, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் புவிவட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது. இந்திய நேரப்படி காலை 11.12 மணியளவில்) ரோவர் தரையிறங்கியது. 

2.5 பில்லியன் டாலர் செலவு : 
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலத்தை உருவாக்க 2.5 பில்லியன் டாலர் செலவு செய்து இருக்கிறது அமெரிக்கா. இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும். ரோவர் விண்கலத்தில் க்யூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த க்யூரியாசிட்டி வாகனத்தில் அதிநவீன தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 6சக்கரம் வாகனம் ‌போன்று வடிவ‌மைக்கப்பட்டுள்ள இந்த க்யூரியாசிட்டியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான ட்ரில்லர், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த க்யூரியாசிட்டியில் உள்ளது. 

30 ஆண்டு கனவு நனவானது: செவ்வாய் கிரகம் தொடர்பாக 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய மைல்கல் :
 ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதன் மூலம், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி : ரோவர் விண்கலத்தில் இருந்து க்யூரியாசிட்டி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் தங்களது மகிழ்ச்சியை கட்டி தழுவி பாராட்டிக்கொண்டனர்.

நேரடி ஒளிப்பரப்பு:
 ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் காட்சியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது நாசா விண்வெளி மையம். செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமானபேர் நேரில் பார்த்தனர்.

2 ஆண்டுகள் ஆய்வு : செவ்வாயில் தரையிறங்கிய க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம் ‌குறித்து மு‌ழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பான தகவல்களை நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது. 

31 July 2012

புகையி‌லைக்கு தடை

ரியாத்: சவூதியில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டது.இதனால் பொது இடங்களில் இனி சிகரெட் பிடிக்கவும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடான சவூதி அரேபியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையினை பொருட்களை விற்க கூடாது, அரசு அலுவலகங்கள் ,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.உலகிலேயே ‌புகையிலை பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி நான்காவது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் டாலர் புகையிலைக்கு சவூதி செலவிடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.இந்நிலையில் சவூதி இளவரசர் அகமது பின் அப்துலஜீஸ் கூறுகையில், சவூதி மக்களின் சுகாதார நலன் காக்க, புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌கடந்த ஆண்டு தான் முதன்முறையாக விமான நிலையங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது.தற்போது நாடு முழுவதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

23 July 2012

"மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை'விளம்பரம் கொடுத்த கணவன்

"மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை' என, விளம்பரம் கொடுத்த கணவனை, அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண், அடையாளம் தெரியாத நபர், தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக, போலீசுக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள், அந்த நபர், அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்நிலையில், இதே பெண்ணிடமிருந்து, போலீசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. "மற்றொரு நபர், என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்; விரைந்து வாருங்கள்' என, கூறினார். போலீசார் சென்ற போது, துப்பாக்கி முனையில், ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்த போது, கற்பழிக்க வந்தவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது. தனக்கு, இ-மெயில் மூலம், ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில், இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க, தகுந்த ஆள் தேவை என, கூறியிருந்ததாகவும், மைக்கேல் கோம்ஸ், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். "என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு கற்பழிக்க முயற்சிக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்' என, இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளில், வழக்கு போடப்பட்டுள்ளது.

20 July 2012

மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு; சினிமா பார்த்து கொண்டிருந்த 14 பேர் பலியாயினர்


வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 14பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 14 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.

10 July 2012

குழந்தைகளை நாய்களோடு விளையாட விடுங்கள்

வாஷிங்டன் : குழந்தைகளை, நாய்களோடு சேர்ந்து விளையாடவிட்டால், பல்வேறு ‌தொற்றுநோய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் நலன் தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பீடியாட்ரீக்ஸ் ஜர்னலில், இந்த ஆய்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாய்களுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் தொற்றுகள், சுவாசப்பா‌தையில் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும்,மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கையை குறைக்கும் பேஸ்புக், டு‌விட்டர்

லண்டன் : பேஸ்புக், டு‌விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அதை பயன்படுத்துபவர்களின் தன்னம்பிக்கையை குறைப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் சாரிட்டி ஆன்சைட்டி என்ற ஆய்வு நிறுவனம், ஷால்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் 298 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 53 சதவீதம் பேர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் தங்களது வாழ்க்கை மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதாகவும், 51 சதவீதம் பேர், எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தான் வெளியிட்டுள்ள கருத்திற்கு லைக் மற்றும் பதில் டுவிட்டை எதிர்பார்தது காத்துக் கொண்டிருக்கும் ‌போது, எதிர்பார்த்த அளவிற்கு லைக்கோ அல்லது டுவிட்களோ வராதநேரத்தில், தாம் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வதாகவும், இதன்மூலம், அவர்கள் தன்னம்பிக்கையை இழப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

06 July 2012

இறந்த குழந்தையை புத்தக பையில் சுமந்த மாணவி

கோலாலம்பூர்: தனது தோழி கொடுத்த புத்தகப் பையில், இறந்த குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளாள் மலேசிய மாணவி. கோலாலம்பூர் போலீஸ் துணை கமிஷனர் மனோகரன் இதுகுறித்து கூறியதாவது: கோலா டெராங்கானு பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது வகுப்பு தோழி ஒப்படைத்த புத்தகப் பையை, ஒரு நாள் முழுக்க தன்னிடம் வைத்திருக்கிறாள். தோழி புத்தகப் பையை வாங்க வராததால் சந்தேகமடைந்த இந்த மாணவி, பையை திறந்த போது, அதில், இறந்த சிசு ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தாள். உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், பள்ளி மாணவி சக மாணவனுடன் கொண்ட காதலின் விளைவாகக் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள். உயிரோடு பிறந்த குழந்தை, சிறிது நேரத்தில் இறந்திருக்கிறது. இதை மறைக்க புத்தகப் பையில் குழந்தையை போட்டு தோழியிடம் ஒப்படைத்திருக்கிறாள். குழந்தை பெற்ற மாணவி, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு மனோகரன் கூறினார்.

03 July 2012

கடுமையான நில நடுக்கம் 185 பேர் பலியாகினர்

வெலிங்டன்:நியூசிலாந்தில், இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.நியூசிலாந்தில், தலைநகர் வெலிங்டன் உட்பட பல பகுதிகளில், இன்று, 6.2 ரிக்டர் அளவுக்கு, நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் அதிர்ந்தன. எனினும், உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.கடந்த ஆண்டு, நியூசிலாந்தில், 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஏராளமான கட்டடங்கள் நொறுங்கி, 185 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

19 June 2012

பிரபல பாடகி சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரபல பாடகி ஒருவர் தந்தையுடன் மர்மநபர்களால் சுட்டுக்‌‌கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் புகழ்பெற்ற பாஸ்தோ மொழிப்பாடகி கஸாலாஜாவியத்.இவரது தந்தை முகமது ஜாவியத் ஆகியோர் , அழகுநிலையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவர்கள் இருவ‌ரையும் சுட்டுக்கொன்றனர்.
பாஸ்தோ மொழி , மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பாக்.ஈரானிய மக்கள் பேசும் மொழியாகும். இம்மொழியில் சிறந்த பாடகியான கஸாலா ஜாவியத். இவர் தனது தந்தை, மகள் சகோதரியுடன், பெஷாவர் நகரின் தபாகரி பஜாரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர்ஒன்றிற்கு சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில்வந்த மர்ம நபர்கள் பாடகி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கஸாலா மற்றும் அவரது தந்தை முகமது ஜாவியத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ‌சகோதரி பர்ஹத்பீவி காயமடைந்தார்.இச்சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் பெஷாவரைச் சேர்ந்த ஜஹாங்கீர்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT