Monday, July 09, 2012
Unknown
புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Friday, July 06, 2012
Unknown
பொறியியல் கவுன்சிலிங் நாளை (ஜூலை 7) துவங்கும் நிலையில், இதற்கான புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் இன்று மாலை அறிவித்தார். அதன்படி, அரசு ஒதுக்கீட்டு கட்டணம் 32,500 ரூபாயில் இருந்து, 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 62,500 ரூபாயில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கட்டண நிர்ணயக்குழுவிடம் மனுக்களை அளித்திருந்தன. கல்லூரிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களைப் பெற்று, அவர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்களை குழு கேட்டறிந்தது. இதனடிப்படையில், புதிய கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பை, கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிவித்தார். அவர் கூறியதாவது:
உயர்வு: பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகிய பட்டப் படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள் சமர்ப்பித்த விவரங்கள், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் சங்கங்களின் கருத்துக்கள் உட்பட, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழு ஆராய்ந்தது. அதனடிப்படையில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம், நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். எட்டு ஆண்டுகளுக்குப் பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரி தரப்பில், அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், கல்லூரியை நடத்த, தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே போதும் என முடிவு செய்து, அறிவித்துள்ளோம். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
60 கல்லூரிகள் மீது புகார்: தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரும், அண்ணா பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினருமான ரமேஷ்சந்த் மீனா கூறியதாவது: அதிக கட்டணம் வசூலித்ததாக, 60 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் வந்தன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதில், 25 கல்லூரிகள் மட்டுமே பதிலளித்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏ.ஐ.சி.டி.இ., 72 கல்லூரிகளில் போதிய வசதியில்லை எனக் கூறி, நோட்டீஸ் அனுப்பியது. விசாரணைக்குப் பின், ஒவ்வொரு கல்லூரியும், ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை 15 கல்லூரிகள் மீண்டும் அனுமதியைப் பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எவ்வித பிரச்னையும் இல்லை. இவ்வாறு மீனா கூறினார்.
Monday, June 25, 2012
Unknown
TNEA 2012 - RANDOM NUMBER CLICK HERE
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் இன்றுவெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பொறியியல் மற்றும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் மொத்தம் 2 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.இன்று பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவக்கலவி இயக்குனரகத்தில் இன்று மருத்துவப்படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. 28,245 மணவர்கள் ரேண்டம் எண்ணில் இடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று மருத்துவப்படிப்பி்ற்கான ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தர் மன்னர்ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், தமிழகத்தில் 6 பல்கலை.களில் துணைவேந்தர்கள் நியமிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்
Saturday, June 23, 2012
Unknown

ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என்ற நிலையில், கவுன்சிலிங்கில் உள்ள, 17 ஆயிரத்து, 98 இடங்களுக்கு, நேற்றுடன் வெறும், 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கவுன்சிலிங் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 14 ஆயிரத்து 128 இடங்களும் போணியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 13ம் தேதி முதல், 110 மையங்களில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில், 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீண்ட ஆளில்லை:இந்த பயிற்சியைப் பெற, மாணவ, மாணவியர் ஒரு காலத்தில் முட்டி, மோதிய நிலையில், இன்று, சீண்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 2,970 இடங்களுக்கு, நேற்று வரை வெறும் 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அளவிற்குக் கூட விண்ணப்பம் வராதது, துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் சரிய வாய்ப்பு:விண்ணப்பித்தவரில், எத்தனை பேர் உறுதியாக வருவர் என்பதும் தெரியாது; பல பேர், கலந்தாய்விற்கே வர மாட்டார்கள் என்பதால், இந்த எண்ணிக்கை, மேலும் சரிய வாய்ப்புள்ளது.அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கே இந்த நிலை என்பதால், அரசு உதவி பெறும் ஆசிரியர்பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 1,758 இடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 12 ஆயிரத்து, 370 என, மொத்தம் 14 ஆயிரத்து, 128 இடங்கள் போணியாகாத நிலை உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லை:ஆசிரியர் பயிற்சியைப் பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போதைய நிலவரப்படி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.பதிவு மூப்பு என வரும்போது, ஏற்கனவே ஒரு லட்சம் பேர் வரை காத்திருப்பது தான், ஆர்வமின்மைக்கு காரணமாக உள்ளது. முதலில், மாவட்ட அளவிலான பதிவு மூப்பு என்ற நிலை இருந்தபோது, உடனுக்குடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. தற்போது, அது போன்ற நிலை இல்லை. இதுவும், மாணவர்கள்புறக்கணிப்பிற்கு காரணம்.
புதிய திட்டம் வருமா?கடந்த ஆண்டு, 85 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், இந்த ஆண்டு, 50 பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்.ஆசிரியர் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு உருவாக்கினால் மட்டுமே, இந்த பயிற்சிக்கு மீண்டும் புத்துயிர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.