பொறியியல் கவுன்சிலிங் நாளை (ஜூலை 7) துவங்கும் நிலையில், இதற்கான புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் இன்று மாலை அறிவித்தார். அதன்படி, அரசு ஒதுக்கீட்டு கட்டணம் 32,500 ரூபாயில் இருந்து, 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 62,500 ரூபாயில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கட்டண நிர்ணயக்குழுவிடம் மனுக்களை அளித்திருந்தன. கல்லூரிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களைப் பெற்று, அவர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்களை குழு கேட்டறிந்தது. இதனடிப்படையில், புதிய கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்பை, கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிவித்தார். அவர் கூறியதாவது:
உயர்வு: பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகிய பட்டப் படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள் சமர்ப்பித்த விவரங்கள், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் சங்கங்களின் கருத்துக்கள் உட்பட, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழு ஆராய்ந்தது. அதனடிப்படையில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம், நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். எட்டு ஆண்டுகளுக்குப் பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரி தரப்பில், அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், கல்லூரியை நடத்த, தற்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே போதும் என முடிவு செய்து, அறிவித்துள்ளோம். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
60 கல்லூரிகள் மீது புகார்: தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரும், அண்ணா பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினருமான ரமேஷ்சந்த் மீனா கூறியதாவது: அதிக கட்டணம் வசூலித்ததாக, 60 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் வந்தன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதில், 25 கல்லூரிகள் மட்டுமே பதிலளித்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏ.ஐ.சி.டி.இ., 72 கல்லூரிகளில் போதிய வசதியில்லை எனக் கூறி, நோட்டீஸ் அனுப்பியது. விசாரணைக்குப் பின், ஒவ்வொரு கல்லூரியும், ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை 15 கல்லூரிகள் மீண்டும் அனுமதியைப் பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எவ்வித பிரச்னையும் இல்லை. இவ்வாறு மீனா கூறினார்.