உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

25 July 2012

இந்திய பெண்ணுரிமையும், திருமண வயதும் ..!


குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.
நன்றி: - இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT