உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

25 July 2012

திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? DIVORCE


இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்குநடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது. 

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே என்பதை புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ,புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் மணவிலக்குஎன்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.
இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.
உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்கமணவாழ்வுரிமை மீட்பு சட்டம் பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை
என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குகைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா?என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy),விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோஇல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்தகணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும்மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே தலாக் எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலேகூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி

  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,


  1. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

  1. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

  1. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

  1. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால்
    பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.
அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT