"ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது' என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிவு பெற்று, நேற்று வேட்புமனுக்கள் பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பார்லிமென்ட் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான ராஜ்யசபா செயலாளர் அலுவலகத்தில் இதற்கான பணிகள் காலை 11 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன. அப்போது முற்றிலும் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
புகார் மனு: சங்மா தரப்பில் சங்மாவும் அவரது வழக்கறிஞர் சத்யபால் ஜெயினும் நேரில் ஆஜராகி ஒரு புகார் மனுவை அளித்தனர். கோல்கட்டாவில் உள்ள இந்திய புள்ளியில் மையத்தில் தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி நீடிக்கிறார். ஆதாயம் பெறும் இன்னொரு பதவியில் நீடிக்கும் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லத்தக்கதல்ல. எனவே அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
நிராகரிக்க கோரிக்கை:சங்மா தரப்பில் இதுபோன்ற ஒரு அதிரடி கோரிக்கை கிளம்பியவுடன் பிரணாப் முகர்ஜியின் தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிரணாப் முகர்ஜியின் சார்பில் பவன் குமார் பன்சலும், சிதம்பரமும் உடனடியாக விரைந்தனர். தேர்தல் அதிகாரியான அக்னிகோத்ரி, இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆரம்பித்தார். அப்போது வழக்கறிஞர் சத்யபால் ஜெயின், அரசியல் சட்ட விதிமுறைகளை எடுத்துச் சொல்லி, ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் பிரணாப் நீடித்துக் கொண்டே, ஜனாதிபதி தேர்தலுக்கும் மனுதாக்கல் செய்திருப்பது முற்றிலும் தவறானது. எனவே அவரது வேட்புமனுவை எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது. உடனடியாக நிராகரிக்க வேண்டுமென்று வலியுத்தினார்.
காலஅவகாசம்:இதுகுறித்து விளக்கம் அளிக்க தங்களுக்கு காலஅவகாசம் வேண்டுமென பவன்குமார் பன்சாலும், சிதம்பரமும் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஒருநாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து தேர்தல் அதிகாரியான அக்னி கோத்ரியிடம் நிருபர்கள் விளக்கம் கேட்டுப் பார்த்தனர். எவ்வளவோ முயன்றும் அவர் விரிவாக எதையும் பேச மறுத்து விட்டார். தொடர்ந்து விடாப்பிடியாக கேட்டபோது, "வேட்புமனு பரிசீலனை இன்னும் முடியவில்லை. அந்த பணி தொடர்கிறது. இந்த பிரச்னையில் ஒரு தரப்பு விளக்கத்தை மட்டுமே இன்று கேட்டுள்ளேன். எதிர்தரப்பு விளக்கத்தை நாளை (இன்று)கேட்க வேண்டியுள்ளது. அதன்பிறகு எனது முடிவை நான் அறிவிப்பேன்' என்றார்.
சட்ட விரோதம்:பிரணாப் மனுவை நிராகரிக்க வேண்டுமென புகார் மனு அளித்துள்ள வழக்கறிஞர் சத்யபால் ஜெயினை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: சட்டத்திற்கு விரோதமாக பிரணாப் முகர்ஜி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆதாயம் அடையும் பதவியில் அவர் நீடிக்கிறார். அது முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். நாங்கள் எங்களது புகாரை மூன்று பக்கங்களில் கடிதமாக அளித்துள்ளோம். புகாரை ஏற்றுக் கொண்டு எதிர்தரப்பிடம் தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார். தங்களுக்கு இரண்டு நாட்கள் கால அவகாம் வேண்டுமென சிதம்பரமும், பவன்குமார் பன்சாலும் கேட்டனர். அது கூடாது என்றும் இரண்டு நாட்கள் கால அவகாசம் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்தோம்.இதனால், ஒருநாள் மட்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் இரண்டு மணிக்கு மீண்டும் வேட்புமனு பரிசீலனை தொடங்கும். மூன்று மணி வாக்கில் எங்களது புகார் மீது தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டத்தை படிக்கட்டும்: வேட்புமனு பரிசீலனையின்போது இதுபோன்ற எதிர்ப்பை தெரிவிப்பதற்கு காரணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என, காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறதே என கேட்டபோது, " வேட்பு மனுதாக்கல் செய்து பரிசீலனையின் போதுதான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். இதுதான் சட்டம். காங்கிரஸ்காரர்கள் முதலில் சட்டத்தை படித்து விட்டு வரட்டும்' என்றார். வேட்புமனு பரிசீலனையின்போது கிளம்பியுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக, ஜனாதிபதி தேர்தலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காரணம் இந்திய வரலாற்றிலேயே இதுபோன்ற பிரச்னை ஜனாதிபதி தேர்தலில் இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவர், ஆதாயம் பெறும் இன்னொரு பதவியில் இருக்கிறார் என்ற புகாரை மையமாக வைத்து கிளம்பியுள்ள இதுபோன்ற பிரச்னை இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை.
முன்பே ராஜினாமா:இந்த பிரச்னை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த ஒருசில மணி நேரங்களிலேயே கோல்கட்டாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,"பிரணாப் முகர்ஜி தன் பதவியை பல நாட்களுக்கு முன்பே ராஜினாமா செய்து விட்டார்' என அறிவித்துள்ளது. இருப்பினும், என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஜனாதிபதி தேர்தலை தொற்றிக் கொண்டுள்ளது.
சுப்ரீம்கோர்ட் போக வாய்ப்பு :பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தபோது, "இவ்விஷயத்தில் தேர்தல் அதிகாரியின் நிலை மிகவும் தெளிவற்றதாக உள்ளது. அரசியல் சட்டத்தில் கூறியுள்ளபடி, ஆதாயம் பெறும் பதவியில் இருந்தால் அவர் போட்டியிடும் தகுதியை இழப்பார் என்றே உள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல்களுக்கான விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை. தவிர வேட்பு மனுவின்போது பணம் பற்றாக்குறையாக கட்டுதல், போதிய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதம் அளிக்காதது போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கும் முடிவை, தேர்தல் அதிகாரியே எடுக்க முடியும். ஆனால், அரசியல் சட்டவிதிகளை மையமாக கொண்ட சிக்கல் எழுந்தால் அதை சுப்ரீம் கோர்ட்தான் தீர்மானிக்க முடியும். எனவே, இந்த விவகாரம் கோர்ட்டிற்கு போவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.
டம்மி வேட்பாளர்இல்லவே இல்லை:இப்போது வேடிக்கை என்னவெனில், ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளரை தவிர எப்போதுமே டம்மி வேட்பாளர்கள் இருவரை காங்கிரஸ் நியமிப்பது வழக்கம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டவுடன், இதுகுறித்த ஆலோசனையும் காங்கிரசில் நடந்துள்ளது. மூத்த தலைவர்கள் கரண்சிங், மோஷினா கித்வாய் ஆகிய இருவரையும் டம்மி வேட்பாளர்களாக நியமிக்கும் திட்டம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இம்முறை என்ன காரணத்தினாலோ காங்கிரஸ் அதை செய்ய தவறிவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி, காங்கிரஸ் சார்பில் களத்தில் உள்ள வேட்பாளர் பிரணாப் முகர்ஜி ஒருவர் மட்டுமே. டம்மி வேட்பாளர் யாரும் இல்லை. ஒருவேளை வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், தடங்கல் ஏதுமின்றி சங்மா புதிய ஜனாதிபதி ஆகிவிடும் நிலையும் உள்ளது.
மற்றவர்களின் மனு நிராகரிப்பு : ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பிரதான வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகிய இருவரது வேட்பு மனுவைத் தவிர, மற்ற அனைவரது வேட்பு மனுக்களும் நேற்றைய பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களின் பரிசீலனைக்காக நேற்று இவர்களில் பலர் வந்திருந்தனர். எல்லாம் முடிந்து கடைசியாக கிளம்பும் நேரத்தில், ஒருவர் திடீரென தனது பைக்குள் இருந்த சங்கை எடுத்து, ப்பூ....ங் என ஊத ஆரம்பித்தார். பிரணாப் மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய பிரச்னைக்காக, அப்போது தான் அந்த பக்கமாக சிதம்பரம் வேறு வந்தார். சங்கு ஊதுவதைப் பார்த்தவுடன், பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த நபரைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.