கோல்கட்டா: ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என திரிணமுல் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. பிரணாப்பை ஆதரிப்பது என்பது விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவு என அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நாட்டின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல், இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பிஜூ ஜனதா தள கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் பி ஏ சங்மாவை வேட்பாளராக களமிறக்கிய நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரபரப்பு நிலவிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் உடன் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை ஆதரித்தார். ஆனால், அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், மம்தாவுடன் இணைந்து செயல்பட்ட முலாயம் சிங், திடீரென, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், சங்மாவிற்கு ஆதரவு அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்தது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தங்களது ஓட்டு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்க திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று கோல்கட்டாவில் நடந்தது. கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, “ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிப்பது என முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக தேர்தலில் போட்டியிட அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. விருப்பமின்றி எடுக்கப்பட்ட முடிவும் கூட. எங்களிடம் உள்ள 50 ஆயிரம் ஓட்டுகளை வீணாக்க விரும்பவில்லை. எனது முடிவு குறித்து பிரதரிடமும், பிரணாப் முகர்ஜியிடமும் தெரிவித்து விட்டேன்” என்று தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிரணாப் நன்றி: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதை வரவேற்றுள்ள பிரணாப் முகர்ஜி, இதற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிரணாபுக்கு ஆதரவு ஏன்? பிரணாபை ஆதரிப்பது என்ற மம்தாவின் முடிவு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நிம்மதியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. மம்தாவின் இந்த முடிவு, அவர் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்க விரும்புவதை காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் களத்தில் தான் தனித்து விடப்படுவதை அவர் விரும்பவில்லை என்பதையும் இம்முடிவு காட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமலர்