உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

08 September 2013

2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது

பியூனோஸ் ஏர்ஸ்:2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது.இதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும்.இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964-ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964-ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு அப்போதுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.1940-ல் டோக்கியோவில் நடத்த போட்டியிட்டது ஆனால் அப்போது அங்கு புகுஷிமா அணு உலை பிரச்சினை பெரிய தடையாக இருந்தது.

ஜப்பான் பிரதம் ஷின்‌ஷோ அபே கூறுகையில்.புகுஷிமா அணு உலை இங்கு இருந்தாலும் டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாதுகாப்பாகவே உள்ளது. அணு உலை, டோக்கியோவிலிருந்து 150 மைல் ‌தொலைவில் உள்ளது.2011-ல் பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானின் வட-கிழக்கு பகுதிகளை தாக்கியது.ஆனால் அது போல இங்கு நடக்காது. டோக்கியாவில் எந்தவித ‌பாதிப்பும் ஏற்படாது என்றும் புகுஷிமா அணு உலையால் எந்தவித கதிரியக்க நீர் கசிவும் ஏற்படாது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

05 January 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம்


புதுடில்லி: "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும்படி உத்தரவிட முடியாது. இதற்கான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் டிவிஷன், "பெஞ்ச்' தெரிவித்துள்ளது.

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரமிளா சங்கர் என்பவரும், சமூக ஆர்வலர் ஒமிதா துபே என்பவரும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், அவர்கள் கூறியிருந்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை, பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கவும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணைகளை, பெண் நீதிபதிகளே நடத்தவும் உத்தரவிட வேண்டும்.பெண்களின் பாதுகாப்பிற்காக, தற்போது உள்ள சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அவற்றை அமல்படுத்தும்படி, ஆணையிட வேண்டும்.பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில், பெண்களின் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். :

இந்த மனுக்கள் நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், டிவிஷன், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, உத்தரவிடும் அதிகாரம், சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை. எனவே, மனுவில் விடுக்கப்பட்டுள்ள, அது தொடர்பான வேண்டுகோள் குறித்து விசாரிக்க முடியாது.
அதேநேரத்தில், அரசியல்வாதிகளுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.அத்துடன், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தற்போதுள்ள சட்டத்தை கடுமையாக்குவது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டியின், விசாரணை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தை போல சட்டம்:

"பாலியல் பலாத்காரங்களை தடுக்க, பார்லிமென்ட் சட்டம் இயற்றும் என்று காத்திராமல், மகாராஷ்டிரா மாநில அரசே, தற்போதுள்ள தன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று தாக்கல் செய்த, பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி மோகித் ஷா மற்றும் நீதிபதி மோக்தா ஆகியோர் அடங்கிய, மும்பை ஐகோர்ட், "பெஞ்ச்' இந்த உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, சட்டங்களை திருத்துவது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்; இதுதொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். "ஈவ்-டீசிங்'கை தடுக்க, தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது; அதேபோல், இங்கும் இயற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சோனியா 49 முறை இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம்

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்துள்ள விவரம், தெரியவந்துள்ளது.

பிரதமர், துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோர் மட்டுமே, விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணிக்க முடியும். பிரதமருக்கு மட்டும், இதில் விலக்கு உண்டு.இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் வர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில், காங்., தலைவர் சோனியா, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆகியோர், பயணம் செய்ததன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார். 


ராணுவ அமைச்சகம் பதில்: சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துள்ளார். இவற்றில், 28 முறை, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், ஆறு பயணங்கள் அரசுத் துறை தொடர்பானவையும் ஆகும். காங்., பொதுச் செயலர் ராகுல், மூன்று ஆண்டுகளில், எட்டு முறை பயணித்துள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட "நித்தி' முடிவு


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு

தேனி: தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது. பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.
டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

அமெரிக்க பார்லிமென்ட்டில் பகவத் கீதை படித்து எம்.பி.,யாக பதவி ஏற்ற பெண்


வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவில், நவம்பரில் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு,31, பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.

துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:

என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு துளசி கூறினார். ஹவாய் சட்டசபை உறுப்பினராக, 21 வயதில் பதவி ஏற்றவர் துளசி. வளைகுடா போரில் பங்கேற்பதற்காக, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலிபோர்னியாவிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அமி பெராவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை குஜராத்தை சேர்ந்தவர். அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வாகியுள்ள மூன்றாவது இந்தியர் அமி பெரா. 1950ல், தலிப் சிங்கும், 2005ல், குடியரசு கட்சி சார்பில், பாபி ஜின்டாலும், எம்.பி.,யாக பதவி வகித்துள்ளனர்.

20 December 2012

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி!! நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!


பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ‌லை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ‌தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம்: பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை

"நம்பிக்கை, நெஞ்சில் வை, தித்திக்கும் வாழ்க்கை' என்ற பாடல் வரிக்கேற்ப, உழைப்பும், திறமையும் இருந்தால், நாமும் ஜெயிக்கலாம் என, சாதித்து காட்டியிருக்கிறார், ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.

பி.எட்., படித்து தேர்ச்சி: 

"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். ரஞ்சனாவுக்கு பின் பிறந்தவர்கள் பிரவீணா, விஜயன்.ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.பிளஸ் 2வில் சாதனைஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார்.சிறு வயதில் இருந்தே ஆசிரியை கனவு ரஞ்சனாவை துரத்த, சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார். சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து அவர், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினார்.பி.ஏ., - பி.எட்., முடித்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு, நாமும் ஆசிரியையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, ரஞ்சனாவுக்கு ஏற்படுத்தியது. இதற்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார்.பார்வை பெற்றது போல் மகிழ்ச்சிமுதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். தன்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறிய மகிழ்ச்சி, இழந்த கண்கள் மீண்டும் வந்தது போல், அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியது.தற்போது, வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக, மாணவியரும், சக ஆசிரியர்களும் பாராட்டு வண்ணம், பணியாற்றி வருகிறார். நேற்று வரை மாணவியாக இருந்தவர், இன்று ரஞ்சனா டீச்சர் என பெருமை பெற்றுள்ளார்!
"முடியாதது எதுவுமில்லை' ரஞ்சனா கூறியதாவது:
அம்மா இல்லை என்றால், இங்கு நான் இல்லை. சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போதும், "முடியாது' என, கைவிரித்து விட்டனர்.முழுமையாக தெரியாத போதும், ஓசை வரும் திசையை வைத்து, அங்கு ஆட்கள் நிற்பதை தெரிந்து கொள்வேன். பிரெய்லி முறையில், பி.எட்., வரை படித்து, ஆடியோ மூலமாக, தகுதித் தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதினேன்.இரண்டாவது முறையாக நடந்த தகுதி தேர்வில், 95 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கிலும் வெற்றி பெற்று, வலசையூர் அரசு பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக உள்ளேன். என்னுடைய அம்மா, தம்பி, தங்கை, தோழிகள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம்மால் முடியாது என்று நினைக்காமல், முடிந்தவரை முயற்சிக்கும் பழக்கத்தை, மாற்றுத்திறனாளியான ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ரஞ்சனா கூறினார்.காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு, சோம்பித் திரியும் இன்றைய இளைஞர் கூட்டத்துக்கு, பார்வையிழந்த நிலையிலும், ஆசிரியையாக உயர்ந்துள்ள ரஞ்சனா போன்றோர் வழிகாட்டி என்றால் மிகையாகாது.

திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி படித்தவர்கள் அரசு வேலை

பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

19 December 2012

கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!! எலுமிச்சை ஸ்கரப் இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது. எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார்.

இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு


கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று ஊடகங்களும் காணொளிகளும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. பத்தில் ஒரு அமரிக்கர் உலகம் அழியப் போவதாக நம்புவதாகக் கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. மாயா 2012 என்ற குறிச் சொல்லைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் மட்டும் 700 மில்லியன் பேர் தேடியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அமரிக்காவின் நாசா ஆராச்சி நிலையம் இதனால் இளைஞர்கள் தற்கொலை மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருப்தாகவும் பல குழந்தைகளின் ஆழ்மனதில் பய உணர்வும் விரக்தியும் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றது.
மத்தியதர வர்க்கத்தின் குப்பை மேடு போன்ற சமூக வலைத் தளங்களான பேஸ் புக் போன்றவை இதற்கான பிரச்சாரத்தை முன்னிலைப் படுத்தியது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அமரிக்க ஐரோப்பிட பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஒத்திவைக்கும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகின்றதா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
சீனாவில் உலக அழிவு நாளில் தங்கியிருப்பதற்கு என பாதுகாப்பு உருண்டைகளை புதிய பணக்காரர்கள் வாங்கி வருகிறார்கள்.
மாயன் கலண்டரின் அடிப்படையில் புதிய சூரியன் இன்னும் 5200 வருடங்களுக்கு உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறுவதாக மத்திய அமரிக்காவில் இன்னும் மாயனை பின்பற்றும் குழுவின் தலைவர் கூறுகிறார். அதில் எப்போதும் உலகம் அழிவதாகக் கூறப்படவில்லை என்கிறார்.

ரயில்வே துறையில்: 8800 ஊழல் வழக்குகள் பதிவு

புதுடில்லி : ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 8800 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது 8430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது 5026 வழக்குகளும், டில்லி நிர்வாக அதிகாரிகள் மீது 4783 ஊழல் வழக்குகளும், நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது 3921 வழக்குகளும் 2011ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 2960 வழக்குகளும், தொலைதொடர்பு துறை பணியாளர்கள் மீது 1918 வழக்குகளும், பெட்ரோலியத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 1877 வழக்குகளும், உணவுத் துறை அதிகாரிகள் மீது 1544 வழக்குகளும், சுங்கம் மற்றும் கலால் வரி துறை பணியாளர்கள் மீது 1296 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள்

மும்பை : டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மும்பையில் 1000 இடங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக கொடுமைகள் குறித்த புகார்களை பெண்களும், பொதுமக்களும் அதில் பதிவு செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இந்த புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டி போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன

ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன. கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் டி.டி.எச் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட இருந்தது. தற்போது அந்த நிலை மாறி ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் தேதி இரவே ஒளிபரப்பபடுகிறது. இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரதமருக்கு பள்ளி மாணவி நோட்டீஸ்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்தது குறித்து பிரதமருக்கு பள்ளி மாணவி ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலர் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்துத் தெரிவித்த பிரதமர், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வயதாகும் ஊர்வசி ஷர்மா, பள்ளி மாணவி மட்டுமல்ல, ஆர்ஐடி சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VISHNUVARDHAM FILM AJITH ACCIDENT - EXCLUSIVE VIDEO


Shooting Spot Accident Of Ajith During Vishnuvardhan Film - EXCLUSIVE VIDEO

தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

பாதாளச்சாக்கடை திட்டம் ஈரோட்டில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நல்லது தான். பாராட்டுவோம்.. ஆனால் அதை முறையாக செய்கிறார்களா என்றால் .....இந்த திட்டத்தை ஏன் செய்கிறார்களோ என்று வேதனை பட செய்கிறது. நகரத்திலோ மரங்கள் இல்லை.நகரத்தின் காலனிப்பகுதிகளில் பெரும்பாலோர் பல வருடங்களாக மரம் வளர்த்து வருகிறார்கள். அதையும் இந்த திட்டத்தால் எல்லா மரங்களையும் வெட்டி வேரோடு பிடுங்கி விடுகிறார்கள். மரத்தின் அருமை தெரியாதவர்கள் இல்லை...இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னுமே ஏறாது..எல்லாம் பணம் ...தண்ணீருக்கு பதிலாக பணத்தையா எதிர்காலத்தில் குடிப்பார்கள்.

- பிரதீப் நிர்மலா, ERODE

FACEBOOK சிறந்த பதிவுகள் - 09


Mohamed Ali
19/12/2012

கடவுள் ரசித்து செதுக்கிய உலகமிது, இது ஒரே நாளில் தோன்றியதில்லை ஒருவர் இருவராகி இருவர் பலராகி உருவான 
உலகமிது. 2012ல உலகம் அழியப்போகுதாம், என்னங்கடா நக்கல் பண்றீங்க, மாயன் எல்லாம் ஒன்னுமில்ல,உலகமும் ஒரே நாளில்
அழிவதுமில்லை,உலகத்தை ரசி...உறவுகளை நேசி...

விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்!

டி.டி.எச்.,-ல் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ‌ரிலீஸ் ஆவது சிக்கலாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் பாணியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.,ல் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கமல் தரப்பிலும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கமல் தமது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதேபோல் தியேட்டர் உரிமையாளர் தங்களது முடிவில் பின்வாங்கவில்லை. இதனிடையே விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிட் ஏர்டெல், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் 80க்கும் மேற்பட்ட தி‌யேட்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்றும், விஸ்வரூபம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் எந்த படமும் இதுபோன்று டி.டி.எச்.ல் ஒளிப்பரப்பபட்டால் அந்த படங்களையும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவால் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT