புதுடில்லி : ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 8800 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது 8430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது 5026 வழக்குகளும், டில்லி நிர்வாக அதிகாரிகள் மீது 4783 ஊழல் வழக்குகளும், நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீது 3921 வழக்குகளும் 2011ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 2960 வழக்குகளும், தொலைதொடர்பு துறை பணியாளர்கள் மீது 1918 வழக்குகளும், பெட்ரோலியத்துறை அமைச்சக பணியாளர்கள் மீது 1877 வழக்குகளும், உணவுத் துறை அதிகாரிகள் மீது 1544 வழக்குகளும், சுங்கம் மற்றும் கலால் வரி துறை பணியாளர்கள் மீது 1296 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.