சந்தைக்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவுவதை தொழிலாக கொண்டுள்ளவர்கள், ஐ.டி., துறையில் உள்ளவர்களை விட, அதிகம் சம்பாதிக்கின்றனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழக அளவில் ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு அருகே மோர்ப்பாளையம், கரூர் அருகே உப்பளமங்கலம், பொள்ளாச்சி சந்தைகளைப் போல், ஈரோடு மாட்டுச் சந்தையும் பிரபலமானது.
சந்தையில் மாடு வியாபாரம் ஒருபுறம் நடக்கிறது என்றால், மாடுகளுக்கு தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப்பட்டைகள் போன்றவை விற்பனையும் களை கட்டும். அதுபோல், மாடுகளுக்கு கொம்பு சீவுதல், லாடம் கட்டும் தொழிலும் அமோகமாக நடக்கிறது.
சந்தையில் மாடு வியாபாரம் ஒருபுறம் நடக்கிறது என்றால், மாடுகளுக்கு தேவையான மணிக்கயிறு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிகள், கழுத்துப்பட்டைகள் போன்றவை விற்பனையும் களை கட்டும். அதுபோல், மாடுகளுக்கு கொம்பு சீவுதல், லாடம் கட்டும் தொழிலும் அமோகமாக நடக்கிறது.
மாடுகளுக்கு கொம்பு சீவி, லாடம் கட்டும் தொழிலாளி காளிமுத்து கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாட்டுச் சந்தைகளுக்கு வாரந்தோறும் செல்வேன். அங்கு வரும் மாடுகளுக்கு கொம்பு சீவி வருகிறேன். கத்தி, அரம், ரம்பம், கட்டிங் மிஷின் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வேன். மாடுகளின் கொம்புகளில் ஏற்கனவே பூசப்பட்டுள்ள பழைய பெயின்டை அரத்தால் சுரண்டிவிட்டு, பின் கொம்புகளை தேவைக்கேற்ப செதுக்கியும், நறுக்கியும் அழகுபடுத்துவேன்.ஒரு மாட்டுக்கு, 50 ரூபாய் கூலி வாங்குகிறேன். ஒரு மணி நேரத்தில் எட்டு மாடுகள் வீதம், ஒரு நாளைக்கு, 70 மாடுகள் வரை கொம்பு சீவுவேன். பெரும்பாலும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு கொம்பு சீவி வாங்கிச் செல்வர். காளைகளுக்கு காலில் லாடம் கட்ட, 300 ரூபாய் வாங்குகிறேன். இத்தொழிலில் பத்து பேர் ஈடுபட்டுள்ளனர். சந்தை முடிந்ததும், மறுநாள் சந்தை கூடும் ஊருக்கு சென்று விடுவோம். வாரம் ஐந்து நாள் இத்தொழிலில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கொம்பு சீவும் தொழில் வெளித்தோற்றத்துக்கு சாதாரணமாக தெரிந்தாலும், கொம்பு சீவுபவர் ஒரு நாளைக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். தற்போதைய நிலையில் இன்ஜினியரிங் படித்து விட்டு, ஐ.டி., துறையில் சம்பாதிப்பவர்களை விட, மாட்டுக்கு கொம்பு சீவுபவர்கள் சம்பாதிப்பது அதிகம் தான்.
நன்றி: தினமலர்