ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் முழுவதும் ஜீன்ஸ் அணியும் பெண்கள் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி சங்கம் சார்பில் கைகளால் எழுதப்பட்ட இந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் காணப்படுகிறது. ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பிறகு பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது எனவும், மீறி அணியும் பெண்கள் மீது ஆசிட் வீசப்படும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நிலங்களை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள் மீதும் இது போன்ற தாக்குதல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற எச்சரிக்கை போஸ்டர்களை தாங்கள் முதல் முறையாக இப்போது தான் பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.