புனே:தேசியக் கொடியை அவமதித்ததாக அளித்த புகாரின் பேரில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மீது, புனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புனே நகரின், சாதுஷிரிங்கி போலீஸ் நிலையத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு எதிராக, லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலர் ரவி பிராமி, புகார் ஒன்றை அளித்தார். அதில், "யூடியூப் வலைதளத்தில், நடிகர் ஷாரூக்கான், "அப்லோடிங்' செய்த வீடியோ காட்சியில், தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஷாரூக்கான் மீது, "தேசிய கவுரவ சின்னங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், 1971'ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "14ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் விசாரணைக்காக, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது' என, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஷாரூக்கானுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமாக, சில புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும், போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நடிகர் ஷாரூக்கான் மீது புகார் தெரிவித்த, ரவி பிராமி, ஏற்கனவே மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஜெக்னா வாசிஷ்ட் என்பவர் மீதும், சமீபத்தில் புகார் கொடுத்தார். அதில், "தேசிய கொடியை, பிகினியாக (நீச்சல் உடையாக), ஜெக்னா வாசிஷ்ட் அணிந்து நடித்துள்ளார்' என, தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து, 18ம் தேதி, மாடல் அழகியை புனே போலீசார் கைது செய்தனர். மறுநாள் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.