புதுடில்லி: தனது ஆண் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு, சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வாக்குமூலமாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், பஸ் டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பஸ்சை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார். பஸ்சில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பஸ் முனிர்கா பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் ஆண் நண்பருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் என்ன செய்கிறாய் என கும்பல் கேள்வி எழுப்ப, அதற்கு நண்பர் பதிலளிக்க, ஒரு கட்டத்தில் கும்பல் ஆண் நண்பரை தாக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கும்பலின் கோபம் இளம்பெண்ணை நோக்கி திரும்பியுள்ளது. அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்கவே பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது அந்த கும்பல். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கும்பல் இளம்பெண்ணை பஸ்சில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பஸ்சில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பஸ்சில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.