கோலாலம்பூர்: தனது தோழி கொடுத்த புத்தகப் பையில், இறந்த குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளாள் மலேசிய மாணவி. கோலாலம்பூர் போலீஸ் துணை கமிஷனர் மனோகரன் இதுகுறித்து கூறியதாவது: கோலா டெராங்கானு பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது வகுப்பு தோழி ஒப்படைத்த புத்தகப் பையை, ஒரு நாள் முழுக்க தன்னிடம் வைத்திருக்கிறாள். தோழி புத்தகப் பையை வாங்க வராததால் சந்தேகமடைந்த இந்த மாணவி, பையை திறந்த போது, அதில், இறந்த சிசு ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தாள். உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், பள்ளி மாணவி சக மாணவனுடன் கொண்ட காதலின் விளைவாகக் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள். உயிரோடு பிறந்த குழந்தை, சிறிது நேரத்தில் இறந்திருக்கிறது. இதை மறைக்க புத்தகப் பையில் குழந்தையை போட்டு தோழியிடம் ஒப்படைத்திருக்கிறாள். குழந்தை பெற்ற மாணவி, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு மனோகரன் கூறினார்.