லண்டன் : பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அதை பயன்படுத்துபவர்களின் தன்னம்பிக்கையை குறைப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் சாரிட்டி ஆன்சைட்டி என்ற ஆய்வு நிறுவனம், ஷால்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் 298 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 53 சதவீதம் பேர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் தங்களது வாழ்க்கை மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதாகவும், 51 சதவீதம் பேர், எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தான் வெளியிட்டுள்ள கருத்திற்கு லைக் மற்றும் பதில் டுவிட்டை எதிர்பார்தது காத்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பார்த்த அளவிற்கு லைக்கோ அல்லது டுவிட்களோ வராதநேரத்தில், தாம் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வதாகவும், இதன்மூலம், அவர்கள் தன்னம்பிக்கையை இழப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.