வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 14பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 14 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.