புதுடில்லி: ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது மத்திய அரசை ஒரு ஆட்டு ஆட்டுவித்தது. எதிர்கட்சிகள் தங்களுக்கு கிடைத்த அவலை ஒரு சேர அரைத்து ஸ்பெக்ட்ரம் என்ற ஊழல் பலூனை ஊதி மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் மற்றொரு ( நிலக்கரி சுரங்க ) மெகா ஊழல் இன்று வெளி உலகிற்கு வெளிவந்தது. இது ஸ்பெக்ட்ரத்தை ( 1 . 76 லட்சம் கோடி ) கொஞ்சம் மிஞ்சியுள்ளது.
இந்த அறிக்கையை மத்திய தலைமை கணக்காயர் குழு பார்லி.,யில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டில்லி இந்திராகாந்தி விமான நிலையங்கள் செயல்பாட்டில் - தனியார் இணைந்ததில் கடந்த 60 ஆண்டு கால இழப்பும் வெளிவருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் அரசியலில் ஒரு புயலை பார்க்க முடியும். இந்த போக்கில் வரும் கால அரசியல் பாதை இருக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
ஏற்கனவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் லீக்கானது ( நம்ம ஊருல டி.என்.பி.எஸ்.சி.,வினாத்தாள் மாதிரி ) . இது எப்படி வெளியானது என்ற சர்ச்சை கடந்த பார்லி., கூட்டத்தொடரில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லி வந்தாலும் சில பிரச்னைகளை காரணம் காட்டி தள்ளிப்போடப்பட்டு வந்தது.