புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த உள்துறை பொறுப்பை மின்துறை அமைச்சர் ஷிண்டே கவனிப்பார்.
நிதியமைச்சராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, அவரது பதவி தற்போது காலியாக உள்ளது. தற்காலிகமாக பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த பேச்சால் மீண்டும் அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்க கூடும் என்றும், ஏற்கனவே சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததால் அவருக்கு அந்த பதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அப்போதே டில்லி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக இன்று, தற்போது உள்துறை அமைச்சர் பதவி வகித்து வரும் சிதம்பரத்தின் பதவி மாற்றப்பட்டு, அவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பதவி வகித்து வரும் உள்துறை அமைச்சர் பதவி, தற்போதைய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் கவனித்து வந்த மின்துறை, தற்போது கம்பெனி விவகாரங்களை கவனித்து வரும் வீரப்ப மொய்லியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் சிறிய அளவிலானது மட்டும் தான் என்றும், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி: தினமலர்