சென்னை: "சட்டசபை தேர்தலில் தனது வெற்றியை எதிர்த்து தாக்கலான மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட, சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இதையடுத்து, தனது வேட்பு மனுவை நிராகரித்தது சரியல்ல என்றும், தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரியும், சென்னை ஐகோர்ட்டில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, விஜயகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "வழக்கு தொடுத்திருக்கும் ஜெயந்தி என்பவர், ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள வாக்காளர் அல்ல. அவரது வேட்பு மனுவை, அந்த தொகுதியில் உள்ள 10 பேர் முன்மொழியவில்லை. ஜெயந்தியின் வேட்பு மனுவை நிராகரித்ததற்கு நான் எந்தவிதத்திலும் காரணமல்ல. எனக்கு எதிராக அவர் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.