சென்னை: டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். காலை 10 மணிக்கு ஆய்வரங்கமும், மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.மேலும் அவர், டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் என்றும், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி ஆகஸ்ட் 20 முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக டெசோ மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பும் சொல்லாமல் நீதிபதி கைவிரித்து விட்டார். இந்த வழக்கு தொடர்பான மனு ஒன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் தாம் தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை என்றும் இந்த வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும், நீதிபதி பால்வசந்தகுமார் கை விரித்து விட்டார்.
நாளை டெசோ மாநாடு நடத்தும் ஆயத்த பணிகள் படுமும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாநாடு நடத்த தமிழக போலீசார் தடை விதித்தனர். இதனால் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்த தி.மு.க., அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம், தடையை மீறி மாநாடு நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்ற ஆலோசனையில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி விவாதித்தது. ஒரே நாள் இருப்பதால் இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை கொடுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வநதது.
இலங்கை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்னர் அறிவித்தார். இதற்கான பணிகளை திட்டமிட்டு தி.மு.க,. தலைவர் மிக விறு, விறுப்பாக ஈடுபட்டு வந்தார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் இதற்கென உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வந்தார். இந்த மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் இருக்காது என்று கருணாநிதி என மத்திய அரசுக்கு சமரசம் ஏற்படுத்தும்படி தெரிவித்தாலும், மடிந்தது போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வின் புனரமைப்புக்காகவே இந்த மாநாடு என கருணாநிதி அறிவித்தார்.
இலங்கை தமிழர் விவகாரம் என்பதால் காங்கிரஸ் எந்தவொரு கருத்தும் சொல்லமால் இருந்து வந்தது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் ஆதரவாக இந்த மாநாடு அமைந்து விடுமோ என்ற அச்சம் இருந்ததா<லும், கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மாநாடு என்பது அந்தந்த அரசியல் கட்சியின் கொள்கை ரீதியிலானது என்ற அளவோடு காங்,. ஒதுங்கி கொண்டது.
டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிப்பு ! இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை என பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு தயாராக காத்திருக்கிறது. இம்மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என நேற்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை பொறுத்தவரை அனுமதி வழங்குவதா அல்லது மறுப்பதா என்பது குறித்து தமிழக போலீசாரே முடிவு எடுத்து கொள்ளலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து நேற்று நள்ளிரவில் போலீஸ் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி மாநாட்டுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து விட்டனர்.
கருணாநிதி அவசர ஆலோசனை : மாநாட்டை நடத்துவதா சட்டரீதியாக எவ்வாறு இதனை சமாளிப்பது என்பது குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுசெயலர் அன்பழகன், மு.க.,ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, மற்றும் மாவட்டசெயலர்கள், பங்கேற்றேனர். கூட்டத்தில் என்னமாதிரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை கட்சியினர் இதுவரை வெளியே யாரும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் மாநாடு நடக்குமா ரத்து ஆகுமா என்ற கேள்வி சஸ்பென்சாகவே போய்க்கொண்டிருக்கிறது.
சென்னையை தவிர வெளி மாவட்டத்தில் ஏதாவது நடத்தி கொள்ளலாம் என போலீசார் நேற்று கோர்ட்டில் கருத்து தெரிவித்ததால் அவசரகதியில் வெளிமாவட்டத்தில் மாநாட்டை நடத்த தி.மு.க., முயற்சிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் அவசர மனு ஒன்றை தி.மு.க, தாக்கல் செய்துள்ளது. மாநாட்டிற்கு தடை விதித்த காவல்துறை ஆணையர் உத்தரவை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு எதுவும் சொல்லாமல் ஆவணஙகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு: இன்றைய வாதத்தின்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமது வாதுரையில்; உளவுத்துறை ரிப்போர்ட்படி ஒரு லட்சம் பேர் கூடுவர் என தெரிய வந்துள்ளது. அருகில் மருத்துவமனை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். அசம்பாவிதம் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது. என்றும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் 2 ஆயிரத்து 500 அழைப்பிதழ்கள் மட்டுமே கொடுத்துள்ளோம், 8 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பர். மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் உள்ளது. என்று ஈழத்தமிழர் மாநாடு அமைப்பாளர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தின்போது தெரிவித்தனர்.
நாளை விசாரணை: இந்நிலையில் இந்த வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெறுகிறது. நீதிபதிகள் வேணுகோபால் தர்மராவ் தலைமையிலான பெஞ்ச் முன்பு மதியம் 12 மணியளவில் விசாரணை நடைபெறும்.
டெசோ மாநாடு: போலீசார் அறிவுரை:உள்அரங்கில் நடைபெறும் கூட்டங்களுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என சென்னை போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகன நிறுத்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். வாகன நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். உள்அரங்கிற்கு வெளியே ஒலி பெருக்க பயன்படுத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.