சென்னை: மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதை, சென்னையில் நடந்த சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மூன்று மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பர்மா பஜார், இரண்டாவது கடற்கரை சாலை, பாரிமுனை ரத்தன் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். இதில் புதுப்பட மற்றும் ஆபாசப் பட "சிடி'க்கள் சிக்கின. பர்மா பஜாரில் முகமது சகி கடையில் நடந்த சோதனையில், மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அலைபேசியில் பயன்படுத்தப்படும் மெமரி கார்டுகளில் பதிவு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த வகையான மெமரி கார்டுகள், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், பென் டிரைவ்கள் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக முகமது சகி மற்றும் சையத் இப்ராகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எட்டாயிரம் ரூபாய்: மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்த விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. இவற்றில் சில பர்மா பஜார் சந்தையில், 10 ஆயிரம் ரூபாய் வரையில் விலை வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் வியாபாரிகள், அதிக விலைக்கும், ஆபாசப் படக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். தற்போது அரசின் விலையில்லா மடிக்கணினிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக, பர்மா பஜார் பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.