மேலூர்: மதுரை மேலூர் பகுதியில், அரசு புறம்போக்கு, கண்மாயை ஆக்கிரமித்த குவாரி உரிமையாளர்கள், மயானத்தையும் விட்டு வைக்கவில்லை. மயானம் மற்றும் கண்மாயை ஆக்கிரமித்திருந்த கிரானைட் குவாரிக்கு சொந்தமான, ஒரே பதிவெண் கொண்ட இரு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது வரை கிரானைட் குவாரிகளில் நடந்த சோதனைகளில், அனைத்து குவாரிகளுமே முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்களது பட்டா இடத்தின் அருகில் உள்ள வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், களங்கள் என எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவற்றை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்த அவர்கள், அதிகாரிகள் சோதனையால், தோண்டிய பள்ளங்களில் மண்ணை கொட்டி மூடினர். எவ்வளவு தூரம் வெட்டப்பட்டது, எவ்வளவு வருவாய் இழப்பு என்பதை அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை. கற்களை வெட்டிய பிறகு வெற்றிடமாக உள்ள இடங்களை மட்டுமே 'டோட்டல் ஸ்டேஷன்' உதவியுடன் அளக்கின்றனர். பல இடங்களில் முறைகேடாக வெட்டி எடுத்து வரப்பட்ட கற்களை பதுக்கி வைத்ததையும் கண்டுபிடித்தனர். அவற்றையும் அளக்கும் பணி ஒரு இடத்தில் மட்டும் நடக்கிறது. "ஸ்டாக் யார்டு' என கூறப்படும் இது போன்ற இடங்கள் கீழவளவைச் சுற்றி பல உள்ளன. இவற்றை முழுமையாக அளக்க சில நாட்களாகும்.
மயானம் ஆக்கிரமிப்பு: நேற்று கீழவளவு பெட்ரோல் பங்க் எதிர்புறம் உள்ள மதுரா கிரானைட்டில் துணை கலெக்டர் குணசேகரன், கனிம வளத்துறை துணை தாசில்தார் சிவபாலன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மயானம் மற்றும் குளத்தை, இக்குவாரி ஆக்கிரமித்து இருந்தது ஆய்வில் தெரிந்தது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கழிவு கற்களை அடுக்கி வைத்திருந்ததும், ஊழியர்களுக்கான ஓய்வறையை அரசு இடத்தில் கட்டியிருந்ததும் தெரிந்தது. இவ்வளாகத்தில் இரு டிப்பர் லாரிகளுக்கு ஒரே பதிவெண் எண் (டி.என் 30 இசட் 1679) இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பின், லாரிகள் மற்றும் கட்டிங் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
சாக்கு மூடையில் கிரானைட் குவாரி ஆவணங்கள்:வாகனங்களில் பதுக்கல்: மதுரை மேலூரில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், குவாரிக்கு சொந்தமான இரு வாகனங்களில், மூடைகளில் கட்டப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மதுரை மேலூர் பகுதியில் சட்ட விரோத குவாரிகளால், அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதன்படி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சிறப்பு குழுக்களை நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 குவாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது வரை 22 பேரைகைதுசெய்துள்ளனர். மதுரா கிரானைட் நிறுவன வாகனங்கள் சில, சந்தேகத்தின்படி, கீழவளவு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டன. நேற்று முன் தினம், இரவு 11 மணிக்கு, கொடுக்கம்பட்டி வீரையா என்பவரது வீடு அருகில், இவ்வாகனங்கள் நின்றன.
பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அம்பாசிடர் கார் (டி.என்.59 எப் 7177), மாருதி வேனை (டி.என்.20 ஏபி 9616) சோதனையிட்டார். மாற்று சாவி மூலம், வாகனங்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார். அந்த வாகனங்களில், சில சாக்கு மூடைகள் கிடந்தன. மேலும் குவாரி ஆவணங்கள் குவிந்து கிடந்தன. இதுதொடர்பாக, வீரையாவிடம் விசாரணை நடக்கிறது.