புதுடில்லி: பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்கள் இருந்த போதும், நாட்டின் பொருளாதாரம் மீண்டுவரும் என தான் நம்புவதாக தெரிவித்த பிரணாப், நாட்டின் கிழக்குப்பகுதிகளுக்கும் பசுமைப்புரட்சி சென்றடையவேண்டும் என்று குறிப்பிட்டார். நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் நாடு மிக அதிகமாக சாதித்துள்ள போதும், இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளதாக கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சராசரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மிகவும் பின்தங்கிய பகுதிகள் தேசிய நீரோட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார். நாட்டில் நோய், பசி மற்றும் வறுமையை ஒழிக்க 2வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரணாப் அழைப்பு விடுத்துள்ளார்.