"அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, வரும், 22ம் தேதி பார்லிமென்டில் கொண்டு வரப்படும்,'' என, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ராஜ்யசபா நேற்று துவங்கியதும், கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள, சபைத் தலைவர் ஹமீது அன்சாரி முயன்றபோது, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் எழுந்தனர். அப்போது மாயாவதி பேசியதாவது: அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வு அளிப்பதில், பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். பதவி உயர்வு அளிப்பதில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது. "இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்' என, கடந்த கூட்டத்தொடரின் போதே, அரசு உறுதியளித்தது. அதன் பின், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்விஷயத்தில், காலம் தாழ்த்தும் தந்திரத்தை அரசு கையாள்கிறது; இதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே பார்லிமென்டில், முழு அளவில் விவாதம் நடந்து முடிந்து விட்டது. ஏறத்தாழ எல்லா கட்சிகளுமே, ஆதரவும் தெரிவித்து விட்டன. இனியும் காலம் தாழ்த்தப் பார்த்து, சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை எனில், சபையை நடத்த விட மாட்டோம். இவ்வாறு மாயாவதி பேசினார்.
அமளி: இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர். அப்போது, அரசு தரப்பில் பதிலளித்த அமைச்சர் நாராயணசாமி, ""இந்தக் கூட்டத்தொடரிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார். இந்தப் பதிலால் திருப்தி அடையாத, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இந்த நேரத்தில், "கறுப்புப் பண விவகாரம் குறித்து பேச வேண்டும் எனக் கூறி, பா.ஜ., - எம்.பி.,க்களும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அமைச்சர் உறுதி: மீண்டும் சபை கூடிய போதும், இதே போல் அமளி தொடரவே, அரசு சார்பில் பேசிய, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: பதவி உயர்வுகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, வரும், 21ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் கூட்டுவார். மறுநாள் இந்த கோரிக்கை தொடர்பான, அரசியல் சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார். இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்து, சபையில் அமைதி திரும்பியது.
லோக்சபா நிலவரம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், சபையின் மையத்திற்கு வந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் தங்களின் இருக்கைக்கு திரும்ப மறுக்கவே, இந்த விவகாரம் தொடர்பாக, சிலர் பேச, சபாநாயகர் மீராகுமார் அனுமதித்தார். இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சைலேந்திர குமார், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாராசிங் சவுகான், காங்கிரசைச் சேர்ந்த பன்னா லால் புனியா ஆகியோர் பேசினர்.