சமீபத்தில் வெளிவந்த படம் மதுபானக்கடை. ஒரு டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாருக்கு மது அருந்தவரும் விதவிதமான மனிதர்களின் செயல்பாடுகளை நகைச்சுவையாக காட்டி அதற்குள் ஒரு காதல் கதையை சொல்கிறார்கள். இந்தப் படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்து அமைப்பு பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பாருக்கு மது அருந்த வரும் நபர்களில், அனுமன், ராமர் வேடமணிந்து பிச்சை எடுக்கும் இரண்டு பேரும் உண்டு. இவர்கள் அனுமன், ராமர் வேடத்திலேயே பாருக்குள் வந்து மது அருந்துவதோடு, அசைவமும் சாப்பிடுகிறார்கள். புகைபிடிக்கிறார்கள். மதுவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அனுமன் வேடத்தில் இருப்பவரிடம் ஒருவர் வந்து அவரை வணங்கி, "எனக்கு 40 வயதாகிறது இதுவரை திருணம் நடக்கவில்லை, பெண்ணும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் ஆசீர்வாதம் செய்து விரைவில் திருமணம் நடக்க உதவ வேண்டும்" என்கிறார். அதற்கு அனுமன் வேடத்தில் இருப்பவர் "நானே திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருக்கிறேன். நீ இந்த கோரிக்கையை முருகன், கிருஷ்ணனிடம்தான் வைக்க வேண்டும்" என்பார். அதற்கு அந்த நபர் "அவர்கள் எல்லாம் இரண்டு மூன்று திருமணம் பண்ணினவர்கள். எனக்கு பார்த்த பெண்ணையும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்கிறார். இதில் சில வார்த்தைகள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் வசனம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் அவர்கள் கடவுள் வேடத்தை கலைத்து விட்டு மது அருந்துவதாக காட்டியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இது திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பது போலவே தெரிகிறது" என்றார்
இந்து கடவுள்களை கிண்டல் செய்வதும், அவமானப்படுத்துவதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்து அமைப்பு நிர்வாகிகள்.