தெலுங்கு, தமிழில் வெளியான நான் ஈ படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் பெரும் வசூலைக் குவித்தது. இதனால் இந்தப் படத்தின் பார்ட்-2 வரும் என்று பரவலாக பேச்சு இருந்து வந்தது. இப்போது அதற்கு படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், நடிகர் சுதீப்பும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாட சென்னை வந்த சுதீப் "இயக்குனர் ராஜமவுலி எப்போதுமே ஒரே வேலையை இரண்டாவது முறை செய்ய மாட்டார். அதனால் நான் ஈ பார்ட்-2 வுக்கு சாத்தியமே இல்லை. அதோடு நான் ஈ உருவாக்க பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தால் இனி அப்படி ஒரு படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" என்றார். இதேபோன்று ராஜமவுலி ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "ரீமேக், பார்ட்-1 கான்செப்டில் எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொரு படமும் புதிதாக இருக்க வேண்டும் என்ற விரும்புவேன். அதற்காக கடுமையாக உழைப்பேன். எனது அடுத்த படமும் இதுவரை இயக்கிய 9 படங்களிலிருந்து நிச்சயம் மாறுபட்டு இருக்கும். ரஜினி நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதும், மகாபாரத்தை உலக ரசிகர்கள் பார்க்கும் வகையில் இயக்க வேண்டும் என்பதும் என் கனவு" என்றார். இதனால் நான் ஈ பார்ட்-2 இல்லை என்பது தெளிவாகிவிட்டது.