உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

31 July 2012

வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை

புதுடில்லி : வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் ஒரு மாத கால அவகாசம் அளித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி செலுத்த ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைவருக்கும் ஒரு மாத கால அவகாசம் அளித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஆதரவு வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரையும் வலியுறுத்த உள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் நியமனம்


புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த உள்துறை பொறுப்பை மின்துறை அமைச்சர் ஷிண்டே கவனிப்பார்.
நிதியமைச்சராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, அவரது பதவி தற்போது காலியாக உள்ளது. தற்காலிகமாக பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த பேச்சால் மீண்டும் அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்க கூடும் என்றும், ஏற்கனவே சிதம்பரம் நிதியமைச்சராக இருந்ததால் அவருக்கு அந்த பதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அப்போதே டில்லி வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக இன்று, தற்போது உள்துறை அமைச்சர் பதவி வகித்து வரும் சிதம்பரத்தின் பதவி மாற்றப்பட்டு, அவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பதவி வகித்து வரும் உள்துறை அமைச்சர் பதவி, தற்போதைய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் கவனித்து வந்த மின்துறை, தற்போது கம்பெனி விவகாரங்களை கவனித்து வரும் வீரப்ப மொய்லியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் சிறிய அளவிலானது மட்டும் தான் என்றும், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி: தினமலர் 

முதல்வர் அறிக்கைகள் அறிக்கைகளாகவே இருக்கின்றன: விஜயகாந்த் வருத்தம்


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கவுள்ளார். 

இதுகுறித்து, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் கூறியதாவது:எனது, பிறந்தநாளையொட்டி ஆக., 1ம் தேதி முதல் செப்., 1ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் பணியையும் மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 லட்சம் ரூபாய் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நான் சட்டசபைக்கு செல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அரசு பணி பாதிக்காதா?

முதல்வர் கொடநாட்டில் ஒய்வெடுப்பதால் மட்டும் அரசு பணிகள் பாதிக்காதா? அங்கிருந்து தினமும் 100, 200, 500 கோடி ரூபாய் திட்டங்கள் என முதல்வர் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அறிக்கைகள், அறிக்கைகளாகவே இருக்கின்றன. மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.சட்டசபைக்கு செல்வது எனது தனிப்பட்ட விருப்பம். நான் விருப்பப்பட்டால், எப்போது வேண்டுமோ, அப்போது அங்கு செல்வேன். நாங்கள், உண்மையான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகின்றனர். எதிரில் அமர்ந்திருப்பவர்களே, எங்களை எதிர்க்கட்சியாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றனர். இப்போது, வேறு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்திற்கு நல்லது செய்யும் அரசு வந்தால், நாங்கள் அதற்காக கூட்டணி வைக்கக் கூடாதா?

பலன் இல்லை:
இலங்கையில் தமிழர்கள் கொன்று முடிக்கப்பட்ட பிறகு, "டெசோ' மாநாடு நடத்துவதால், எந்த பலனும் இல்லை. மாநாடு அறிவித்த கருணாநிதி, தனிஈழம் அமைப்போம் என்றார். அதன்பிறகு நான் அப்படி கூறவில்லை என முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். ஆனால், என் மனதில் பட்டதை மட்டுமே நான் கூறுவேன்.

எங்கெங்கும் கட்டிங்
கட்டிங் வாங்கும் கவுன்சிலர்களை அடக்கி விட்டதாக கூறுகின்றனர். கவுன்சிலர்களை கேட்டால், மேலிடமே கட்டிங் வாங்கும்போது, நாங்கள் ஏன் வாங்கக்கூடாது என்கின்றனர். 

சென்னையில் காலரா பரவுவது குறித்து மேயரிடம் கேட்டால், அது வாந்தி, பேதி தான் என்கின்றார். எதுவாக இருந்தாலும், மக்கள்தான் அதில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது போல, மக்கள் தேர்தலை புறக்கணித்தால் நாட்டில் மாற்றம் வரும். "டாஸ்மாக்'கை தமிழகத்தில் அறிமுகம் செய்தது ஒரு கட்சி. மதுவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது மற்றொரு கட்சி. மதுவிலக்கை பொருத்தவரை இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது. இரு தரப்பிடமும் கருத்து கேட்டு, அதன்பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

புகையி‌லைக்கு தடை

ரியாத்: சவூதியில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டது.இதனால் பொது இடங்களில் இனி சிகரெட் பிடிக்கவும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடான சவூதி அரேபியாவில், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையினை பொருட்களை விற்க கூடாது, அரசு அலுவலகங்கள் ,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.உலகிலேயே ‌புகையிலை பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி நான்காவது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் டாலர் புகையிலைக்கு சவூதி செலவிடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.இந்நிலையில் சவூதி இளவரசர் அகமது பின் அப்துலஜீஸ் கூறுகையில், சவூதி மக்களின் சுகாதார நலன் காக்க, புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌கடந்த ஆண்டு தான் முதன்முறையாக விமான நிலையங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது.தற்போது நாடு முழுவதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

30 July 2012

45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளது


இந்தியன் பில்லர்ஸ் என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது,

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக இந்த கால் சென்டர் செயல்பட்டுவருகிறது. இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் இரத்த கால்சென்டருக்கான திட்ட இயக்குனர் ரேணுகாதேவி தெரிவித்தது:
ஜூன்-14 ம் தேதி உலக இரத்த தான தினமன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இரத்த தானத்திர்க்கான 24 மணி நேர கால் சென்டர் தருமபுரியில் துவங்கப்பட்டது, இந்த கால்சென்டர் துவங்கி நேற்று வரை 45 நாட்களில் 1072 பேருக்கு இரத்தம் வளங்கிஉள்ளோம் இது எங்களுக்கு பெருமையாக உள்ளது, இந்த பெருமைக்கு முழு காரணம் உரிய நேரத்தில், உரிய இடத்திற்கு வந்து இரத்தம் கொடுக்கும் தன்னர்வலர்களே.

தினமும் இரத்த தேவைக்காக இருபது முதல் முப்பத்தைந்து இதில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தினமும் குறைந்தது ஒரு அலைபேனும் வருகிறது, அதிகமாக இருதைய அறுவை சிகிச்சை, டெங்கு காய்ச்சல், தலசிமிய, பிரசவம் மற்றும் விபத்து போன்றவற்றிற்கான அழைப்புகள் வருகிறது.

சரியான விபரங்களை கொடுத்தால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் எந்த பகுதியாக இருந்தாலும், பாசிடிவ் வகை இரத்தம் எனில் இரத்தம் கொடுக்க கொடையாளர் மிகஅதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த இடத்தை வந்து விடுகின்றனர். இதே நெகட்டிவ் வகை இரத்தம் எனில் ஒரு அரை மணி நேரம் கூடுதல் ஆகலாம்.

தருமபுரி, ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரத்தம் கேட்ட ஐந்து நிமிடங்களில் எல்லாம் இரத்த கொடையாளர் அந்த மருத்துவமணை-ஐ அடைந்துள்ளனர்  இரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம், இதற்காக அந்த மருத்துவமனைகள், மருத்துவர்கள், இரத்த வங்கிகள் அளித்துள்ளனர் (தங்கள் பார்வைக்க சிலவற்றை இணைத்துள்ளோம்)

கால் சென்டர் துவங்கிய அன்று எங்களிடம் மாநில அளவில் சுமார் 60,000 தன்னார்வலர்களின் விபரங்கள் தான் இருந்தது, ஆனால் இந்த 45 நாட்களில் மட்டும் புதியதாக மாநில அளவில் எஸ்.எம்.எஸ். , மின்னஞ்சல், மூலம் 42,180 பேர் பதிவு செய்துள்ளனர், மொத்தம் இன்று வரை எங்களிடம் இரத்தம் கொடுக்க எங்களிடம் 1,02,180பேர் பதிவு செய்துள்ளனர், இதில் சுமார் 80% பேர் 18 - 28 வயதுடைய இளைஞர்கள், எனினும் இதில் ஒ (O) பாசிடிவ் மற்றும் பி(B) பாசிடிவ் தான் அதிக அளவில் உள்ளனர். நெகட்டிவ் வகை இரத்தம் உடைய தன்னார்வலர்கள் மிக குறைவாகவே உள்ளனர்,

கோரிக்கை:
இனி இரத்தம் தேவைபடுபவர்கள் எங்களை அழைக்கும் பொது நோயாளி பெயர், வயது, அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை விபரங்கள், தேவையான இரத்த வகை ஆகிய விபரங்களை சரியாக கொடுக்க வேண்டுகிறோம்.
மேலும் ஒருவருக்கே இரத்தம் வேண்டி பல பேர் அழைக்கின்றனர், இதனை தவிர்க்க வேண்டுகிறோம்.

புதியதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர், வயது, இரத்த வகை, முகவரி, மாவட்டம் ஆகிய விபரங்களை 94888-48222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்,எஸ், அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் அல்லதுblood@indianpillars.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

இதுகுறித்து இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் வினோத் கூறியது:
இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் சார்பில் இரத்த தானத்திற்காக துவங்கப்பட்ட கால் சென்டருக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்ப்பு உள்ளது,

இரத்த தானத்தினை  தொடர்ந்து இந்த மாதம் (ஆகஸ்ட்) கண் தானத்திர்க்கான மாநிலம் தழுவிய கால் சென்டர் துவங்க திட்டமிட்டு உள்ளோம், இந்த எண் வெளியிடுவதோடு மட்டுமல்லாது கண் தானத்தினை அதிகபடுத்தும் விதமாக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ள உள்ளோம், இவை இரண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட உள்ளோம்.

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் தரம்வீர் சிங் (45வது நிமிடம்), ஷிவேந்திரா சிங் (48வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். நெதர்லாந்து அணிக்கு ராபர்ட் வான் டெர் ஹார்ஸ்ட் (20வது நிமிடம்), ரோடரிக் வியஸ்தோப் (29வது), மின்க் வான் டெர் வீர்டன் (51வது) தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தென் கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
"ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ;தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த பரிதாபம்;50 பேர் பலி

புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு பெட்டியில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர்.

புது தில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்,  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்‌கு விரைந்த‌ார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோது, இந்த விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது...என்றார்.

நெல்லூர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து குறித்து அறிய உதவி எண்கள்:

நெல்லூர் உதவி எண்கள்: 0861-2345863, 2345864, 2345865, 2345866

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் ககன் நரங்

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெற்று தந்தவர் ககன் நரங். இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ., ரைபில் பிரிவில் 701.1 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார் ககன் நரங். இந்த போட்டியில் ரோமேனியாவின் அலின் ஜார்ஜ் மோல்‌டோவினய் தங்கப்பதக்கமும், இத்தாலியின் நிக்கோல் சாம்பிரானி வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்த வெற்றி மூலம் இந்திய கொடியை ஒலிம்பிக் பறக்க விட்டுள்ளார் என அவரது தந்தை பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

28 July 2012

ஆண்களை விட அதிகமாக பெண்களை தாக்கும் நோய்

வாழ்க்கை முறையின் காரணமாக ஆண்களை விட பெண்களையே பக்கவாத நோய் அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உணவுப் பழக்க வழக்கம், வாழ்விடம், சுகாதாரம், உடல் உழைப்பு, உணர்ச்சி, சமூகம் சார்ந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து வெளிப்புற நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பக்கவாதம் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் இல்லாமல், நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனைத் திறன் குறைவு, கவனிக்கும் திறன் குறைவு ஆகியவையும் பக்கவாதத்தின் ஒரு பகுதிதான் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை

இந்தியாவின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்ற பெருமையை ரமேஷ் - ரஜினி தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தை தட்டிச் சென்றது. அது பிறக்கும் போது வெறும் 565 கிராம் (அரை கிலோ) மட்டுமே இருந்துள்ளது.


மே 21ம் தேதி பிறந்த இந்த பெண் குழந்தை 3 மாதமாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று தனது பெற்றோருடன் வீட்டுக்குச் சென்றுள்ளது.

இரவு நேரங்களில் வேலை செய்வதால் மாரடைப்பு ஏற்படும்

பெரும்பாலன மக்கள் இரவு நேரங்களில் வேலை செய்பவராக இருக்கின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இரவு நேரத்தில் வேலை செய்து வருகின்றனர். இதில் 25 சதவீத மக்கள் மாரடைப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதற்கு காரணம், இரவில் வேலை செய்வதால் பசி அதிகமாக உண்டாகிறது. பசி காரணமாக கிடைக்கும் உணவு பொருட்களை உட்கொள்வதால் உடலில் தேவைக்கும் அதிகமான கொழுப்புகள் சேர்கிறது.  எனவே உடல் எடை அதிகரிக்க செய்கிறது. பகலில் உறங்குவதாலும், சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளாததாலும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

நாம் உடலை வருத்தி இரவு நேரங்களில் வேலை செய்வதால் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைவதோடு செரிமான கோளாறு ஏற்படுகின்றது. அதிக நேரம் உறங்காமல் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகின்றன.

கடன்காரன் போல் ஓடி ஒளிகிறேன்: ரஜினிகாந்த்

பணம் வாங்கி விட்டு திருப்பிக்கொடுக்க முடியாத கடன்காரன் போல் ஓடி ஒளிகிறேன் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

 மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு "கும்கி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரபுசாலமன் இயக்கியிருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது
 முதல் ஆடியோ சி.டி.யை ரஜினிகாந்த் முன்னிலையில் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: பட விழாக்களில் நான் அதிகம் கலந்துகொள்வதில்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு விழாவில் கலந்துகொண்டு இன்னொரு விழாவில் கலந்துகொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வருத்தப்படுவார்கள். மேலும் என்னுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு டாக்டர்களும் விழாக்களில் அதிகமாகப் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
 இந்த விழாவுக்கு வர வேண்டும் என பிரபு அழைத்தபோதே என்னால் வர இயலாது எனக் கூறியிருந்தேன். ஆனால், சிவாஜி வீட்டு விழா என்பதால் கடைசி நேரத்தில் கலந்துகொண்டுள்ளேன்.
 சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வந்தபோது என்னுடைய நண்பர் கமல்ஹாசன் என்னைப் பார்க்க மருத்துவமனைக்கே நேரில் வந்துவிட்டார். ஆனால், மருத்துவர்கள் இப்போதுள்ள நிலையில் சந்திக்க வேண்டாமே எனத் தயங்கியுள்ளனர். இந்தத் தகவலை தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார் கமல். நானும் உடல்நிலை குணமானவுடன் சென்னை வந்து சந்திக்கிறேன் எனக் கூற கமல் வருத்தத்துடன் சென்னைக்கு திரும்பிவிட்டார். சென்னை திரும்பியதும் நான் முதலில் பேசியது கமல்ஹாசனிடம்தான். இன்று ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னின் படத்தில் நடிக்க கமலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகுக்கும் இந்தியத் திரையுலகுக்கும் பெருமை சேர்த்துள்ளார் கமல். அப்படிப்பட்ட கமல் என் மீது கொண்ட பாசத்தை நினைத்து உருகிப்போனேன்.
 அதே போல ரசிகர்களும் தமிழக மக்களும் என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவருடைய பிரார்த்தனையும்தான் என்னை குணமடையச் செய்தது. ரசிகர்கள் பற்றி நான் அதிகம் பேசுவது இல்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு நான் ஒரு கடன்காரன். அவர்கள் காட்டி வரும் அன்புக்கு நான் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் ரசிகர்களைப் பார்த்து - பணம் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்க முடியாத கடன்காரன் போல் - ஓடி ஒளிகிறேன்.
 இந்தப் படத்தில் அறிமுகமாகும் விக்ரம் பிரபுவுக்கு பயம் இருப்பது போல் தெரிகிறது. நடிகனுக்கு பயம், கவலை இருக்கக் கூடாது. பயத்தை இயக்குநர்கள் போக்கிவிடுவார்கள். திறமை மீது நம்பிக்கை இருந்தால் கவலைப்படக்கூடாது. சிவாஜியின் பேரன் என்பதை விக்ரம் பிரபு சினிமாத்துறையில் நிரூபிக்க வேண்டும்.
 இப்போது வரும் புதியவர்கள் ஒரு படத்திலேயே கவனம் செலுத்துகிறார்கள். படம் வரவேற்பைப் பெறாவிட்டால் பதற்றம் வந்துவிடும். அதனால் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று படங்களை செய்யுங்கள். அப்போதுதான் ஒரு படம் கைவிட்டாலும் இன்னொரு படம் காப்பாற்றும் என்றார்.
 விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
 ரஜினிகாந்த் எப்போதும் நியாயமான மனிதர். இந்த விழாவிற்கு அவர் வந்து வாழ்த்தியது மிகவும் பொருத்தமானது.
 சிவாஜியின் நடிப்பும் வசனங்களும்தான் என்னைப் போன்றவர்களை நிமிர வைத்தது. அப்படிப்பட்டவருடைய பேரன் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது அழுத்தமான படி என சிலர் கூறினர். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் அடியெடுத்து வைத்திருப்பது மலை. அங்கே அருவி பொங்கியபடியே இருக்கும். அவர் கவனமாக இருக்க வேண்டும்.
 "அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் எனப் பார்க்காதே, கேட்காதே; எதையும் பகுத்தறிந்து பார்' என "பராசக்தி' படத்தில் சிவாஜி பேசியிருப்பார். அந்த வசனத்தையே விக்ரம் பிரபுவுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன் என்றார்.
 ஜெயலலிதா, கருணாநிதி வாழ்த்து: சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு திரையுலகில் அறிமுகமாவதை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் தொலைபேசி மூலம் பிரபுவிடம் வாழ்த்து தெரிவித்தனர். இத் தகவலை நடிகர் பிரபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 விழாவில் நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் லிங்குசாமி, கெüதம் மேனன், பி.வாசு, பிரபுசாலமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக் : வெற்றி தோல்வி நிலவரம்

லண்டன், ஜூலை 28 : ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற படகுப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சவரன் சிங் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.


டேபிள் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கீடா  தாஸ் தோல்வி அடைந்தார்.

முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் சாரா ரமிரஸிடம் 11-9, 11-8, 11-7, 8-11, 11-2 என்ற செட் கணக்கில் அங்கீடா தாஸ் தோல்வி அடைந்தார்.

அதேப்போல முன்னதாக நடைபெற்ற வில்வித்தைப் போட்டியிலும், பாட்மிண்டன் ஆடவர் குழு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

பாட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பருப்பள்ளி கஷ்யப் வெற்றி பெற்றுள்ளார்.

27 July 2012

கனமழை கரை புரண்டு ஓடுகிறது வெள்ளம்: பூஜைக்கு கிடைத்தது பலன்


பெங்களூரு: கர்நாடகாவில் மழை வேண்டி, அரசு சார்பில், 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையின் பலனாக, கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் மழை பெய்தது.
கர்நாடகாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழை இல்லாமல், மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, 123 தாலுகாக்கள் வறட்சி தாலுகா என, அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, 23 தாலுகாவை வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாவாக கூடுதலாக மாநில அரசு அறிவித்தது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும், ஜூன், ஜூலை மாதங்களில் பருவ மழை பெய்யும். இந்தாண்டு கோடை மழையும் இல்லை, பருவ மழையும் பெய்ய வில்லை. இதையடுத்து, கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி, மாநிலம் முழுவதுமுள்ள, 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தார். இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மழை வேண்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு கோவில்களுக்கு தலா, 5,000 ரூபாய் செக்குடன் கோவில்களில் காலை முதல் மாலை வரை நடத்த வேண்டிய பூஜைகள், ஹோமங்கள் குறித்து விளக்கத்துடன் அனைத்து கோவில்களுக்கு ஒரு சுற்றிக்கையாக அனுப்பப்பட்டது. இதற்காக மாநில அரசு, 17.5 கோடி ரூபாய் செலவு செய்தது. இதற்கு சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தனர். இப்பணத்தை வைத்து, தண்ணீர் திட்டம் அல்லது வேறு எதாவது திட்டம் செயல்படுத்தியிருக்கலாம். இது தேவையில்லாத செலவு என, கூறினர். இன்று காலை முதல் மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் தொடங்கியது. மாநிலத்திலுள்ள, 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆரம்பமானது. சுவாமிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, மழைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. சில கோவில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.

மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலில் இன்று காலை சிவாச்சார்யார்கள் கலசத்தில் நீர் எடுத்து, ஊர்வலமாக சென்று சாமுண்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் மழைக்காக சிறப்பு பூஜை செய்தனர். அதே போன்று, நஞ்சன்கோடு நஞ்சுண்டேஸ்வரா, மங்களூரு குக்கே சுப்பிரமணியா கோவில், ஹலசூரு சோமேஸ்வரர் கோவில் உட்பட ஹாசன், சிக்மகளூரு, தாவணகரே, பீதர், கொப்பால், குல்பர்கா, ஷிமோகா உடபட மாநிலத்தில் அனைத்து கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று காலை 11 மணியளவில் இருந்து லேசான மழை பெய்தது. தென் கர்நாடகா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அதே போன்று தாவணகரே, குடகு உட்பட மூன்று மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மூன்று மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. மேல் பத்ரா அணைகட்டு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. சிக்மகளூரு, ஷிமோகா, மடிகேரி, தாவணகரே, சோமவார்பேட், வீராஜ்பேட், சக்லேஷ்புர், மங்களூரு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பூஜைக்காக சிறப்பு பூஜை செய்தால், மழை வந்தாக பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த

சிதம்பரத்தில் பஸ் மோதி பள்ளிச்சிறுமி படுகாயம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் பஸ் மோதி பள்ளிச்சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார். சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நக்றவந்தன்குடி என்ற இடத்திலிருந்து பஸ் ஒன்று இன்று மாலை வந்தது. பஸ்சை கண்டவுடன் அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகள் பஸ்சில் இடம்பிடிப்பதற்காக ஓடினர். அப்போது அவர்களில் சிதம்பரம் பெண்கள் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் தீபிகா என்ற சிறுமி, பஸ் மோதி படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதி சிறுமி பலி

வேலூர்: ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதி 3 வயது சிறுமி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாரப்பட்டு என்ற இடத்தில் எம்போசி கான்வென்ட் உள்ளது. இப்பள்ளியில் அருகன் துருகம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கூலித்தொழிலாளியின் மகள்கள் சுஜிதா (5ம் வகுப்பு) மற்றும் சுஜிதா (எல்.கே.ஜி.,) படித்து வந்தனர். இந்நிலையில், இன்று மாலை பள்ளி பஸ்சில் தனது சகோதரியுடன் அருகன் துருகம் வந்த சுஜிதா, திடீரென பஸ்சின் முன்னால் ஓடியுள்ளார். இதை கவனிக்காத வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன் பஸ்சை இயக்கியுள்ளார். இதில் பஸ் மோதி சுஜிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். டிரைவர் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பஸ் மோதி சிறுமி பலியான சம்பவத்தைக் கண்டித்து சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அருகன் துருகம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ்சை கொளுத்துவதற்காக பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் நிற்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாணவர்கள்

மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம்  பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில்  5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க  அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள்,  வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர்.

வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு  பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை  ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து  காசாக்கினர்.

அந்த பணத்தை வைத்து அங்குள்ள டாஸ்மாக் பாரில் சென்று மது வாங்கி குடித்தனர்.  இந்த விவகாரத்தை பின்னர் தெரிந்து கொண்ட ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும்  மாணவர்களின் செயலை நினைத்து நொந்து போயினர்.



நேற்று இப்பள்ளியில் நடந்த புத்துணர்வு பயிற்சி முகாமில் பேசிய பள்ளி  முதல்வர், வேதனையுடன் இத்தகவலை வெளியிட்டார்.அவர் பேசுகையில் ," தற்கால மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.  இதனால் கல்வி மற்றும் அது சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல்,  இவர்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு பல  மணி நேரம் வீணாகிறது.

பள்ளியில் பெஞ்சை திருடி, மது குடித்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து  விஷயத்தை எடுத்துச் சொன்னேன். அந்த குற்றச் செயலை செய்த மாணவர்களில்  முக்கியமான மாணவர் பிளஸ்-2 படிக்கிறார்.அவரது பெற்றோர் திருப்பூரில் உள்ளனர்.  அந்த மாணவர் வாடிப்பட்டியில் உள்ள தாத்தா -பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு  வருகிறார்.

மாணவர்கள் உடைத்து விற்ற பெஞ்சின் விலை ரூ.2,500 ஆகும்.அதற்கு பதிலாக புதிய  பெஞ்ச் வாங்கி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களிடமும்,  பெற்றோர்களிடமும் கூறினேன்.

அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.இது தவிர 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன்,முதல்  வகுப்பு மாணவனை தாக்கி அவன் பாக்கெட்டில் இருந்த காசை பறித்த சம்பவமும்  நடந்துள்ளது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதோடு கடமை முடிந்து  விட்டதாக கருதக் கூடாது.அவர்களின் செயல்கள், நடவடிக்கைகளை கண்காணிக்க  வேண்டும்” என்றார்.

லண்டன் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்!


லண்டன்:ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.

26 July 2012

கார்களுக்கு கேஸ் கட்டாயமாகிறது


 குஜராத் ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று, அம்மாநிலத்தில் கார் வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க குஜராத் மாநிலத்தில் இயங்கும் அனைத்து ரக கார்களையும் இன்னும் ஒரு வருட காலத்திற்கு இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் காராக மாற்றுவதற்கு புதிய சட்டம் கொண்டு வரும்படி மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு, தனியார் மற்றும் பொதுமக்கள் என அனைவர்களின் கார்களுக்கும் இது பொருந்தும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பச்சிளங்குழந்தையின் உயிரை காவு வாங்கிய 200 ரூபாய்

மக்களிடையே மனிதநேய உணர்வு மறைந்து வருவதை மெய்‌ப்பிக்கும் வகையில், மருத்துவமனை இன்குபேட்டரில் வைப்பதற்கான தொகையான ரூ. 200யை, பெற்றோர்கள் தர முடியாததால் பச்சிளங்குழந்தை பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவி சுனி‌தாவை, ஜலந்தர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இந்நிலையில், இம்மாதம் 20ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குறைந்த எடையுடனும் மற்றும் உடலநலக்குறைவுடன் குழந்தை பிறந்ததால், மருத்துவமனை டாக்டர்கள், குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்க அறிவுறுத்தினர். இன்குபேட்டர் இயங்க நாள் ஒன்றிற்கு மின்கட்டணமாக ரூ. 25 செலவாவதால், இன்குபேட்டரில் குழந்தையை வைக்க ரூ. 200 செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

யாரும் உதவவில்லை : பெயிண்டர் பணி செய்து வரும் சஞ்சீவ் குமாரால், உடனடியாக அந்த பணத்தை புரட்ட இயலவில்லை. தான் பலரிடம் கேட்டுப் பார்த்தும் தனக்கு யாரும் உதவவில்லை என்றும், தயவுசெய்து மருத்துவமனை டாக்டர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று அவர்களிடம் சஞ்சீவ் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மருத்துவமனை செவிசாய்க்கவில்லை. 

குழந்‌தை அகற்றம் : இன்குபேட்டருக்கான பணம் தராததையடுத்து, மருத்துவமனை குழந்தையை புதன்கிழமை இரவு இன்குபேட்டரிலிருந்து அகற்றியது இந்த விளைவே குழந்தை பலியாக காரணமானது.

பெற்‌றோர்கள் குமுறல் :
 பணம் தராத காரணத்தினால், இன்குபேட்டரிலிருந்து குழந்தைய‌ை அகற்றிய மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த குளுகோஸ் பாட்டிலையும் அகற்றிவிட்டதாக சஞ்சீவ் குமாரும், தங்கள் குழந்தையை பணத்திற்காக அவர்கள் கொன்றுவிட்டதாக தாய் சுனிதாவும் கூறினர்.

இதுகுறி்த்து, மருத்துவமனை தலைமை டாக்டர் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து, சஞ்சீவ் குமார் புகாராக அளித்தால், உரிய விசாரண‌ை நடத்தப்பபடும் என்று அவர் கூறினார்.

கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை

தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தாள்.


இந்த சம்பவம், ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை சேதுமாதவனுக்கு உடனடியாக போனில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தகவல் கிடைத்த உடன் உடைந்து போன சேதுமாதவன், தனது ஆட்டோவில் இருந்த பிள்ளைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டுவிட்டு, மருத்துமனைக்கு விரைந்துள்ளார்.

மிகப்பெரிய பள்ளி, தனது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் பேருந்தை கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், மிகத் துயரமான நேரத்திலும் தனது கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

புதிய தலைமைச் செயலகம் வழக்கு திடீர் திருப்பம்

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை அரசு மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


இருதரப்பு வாதங்களும்  கேட்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இன்று தீர்ப்பளிப்பதாக இருந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அளிக்க மறுப்புத் தெரிவித்துள்ள நீதிபதிகள்,  இந்த வழக்கை வேறு நீதிபதியின் முன் மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை,  பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக்க தற்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

25 July 2012

தமிழகத்தில் குண்டும் குழியுமான சாலையால்: பெண்ணுக்கு சுகப் பிரசவம்:

கோவை:கோவை அருகே, "108 ஆம்புலன்சில்' அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.மதுக்கரை அடுத்த, சீரபாளையத்தைச் சேர்ந்தவர், சக்திவேல்; இவர் மனைவி, சுப்புலட்சுமி, 21. நிறைமாத கர்ப்பிணியான இவர், ரங்கசமுத்திரத்திலுள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். ஒரு வாரம் கழித்து வருமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை, சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் உடனடி வாகன வசதி ஏதும் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, தகவல் தெரிவித்தனர். மதுக்கரையிலிருந்து, ரங்கசமுத்திரம் சென்ற ஆம்புலன்சில், 8.50 மணிக்கு சுப்புலட்சுமியை ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில், 9.10 மணியளவில், குமிட்டிபதி அருகே செல்லும்போது, கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்ரமணியன், வாகனத்தை சாலையோரத்திலேயே நிறுத்தினார். ஆம்புலன்சில் உடனிருந்த டெக்னீசியன் ஜோதி, சுப்புலட்சுமிக்கு, பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும், அரிசிபாளையத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர் என் டாக்டர்கள் தெரிவித்தனர்..

ரோடு மோசம்:சுப்புலட்சுமியின் கணவர் சக்திவேல் கூறுகையில்,"" ரங்கசமுத்திலிருந்து, அரிசிபாளையத்துக்கு, குமிட்டிபதி வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த ரோடு, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என் மனைவியை, ஆம்புலன்சில் ஏற்றி, 2 கி.மீ., தூரம் தான் வந்திருப்போம். கடுமையான வலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்சில் இருந்த டெக்னீசியன், பிரசவம் பார்த்தார். நல்ல வேளையாக சுகப்பிரசவம் நடந்து, குழந்தையும் பிறந்தது,'' என்றார்.

ரங்கசமுத்திரம் ரோட்டை சீரமைக்கக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை இதற்கு முன் நடத்தியுள்ளனர். இதுவரை, ரோடு சீரமைக்கப்படவில்லை. அவசர சிகிச்சைக்காக செல்வோர், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமலர் 

தமிழை கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் தரப்படும் பராமரிப்பு வரி ரசீது, பெரும் அச்சுப் பிழையுடன் காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, தனியார் சுங்கச் சாவடிகள், பராமரிப்பு வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. 

ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில், இதற்கான ரசீது அச்சடிக்கப் பட்டு இருக்கும்.ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில், எந்த பிழையும் இன்றி அச்சடிக்கப் பட்டு உள்ள அந்த ரசீதில், தமிழில் உள்ள வார்த்தைகள் மட்டும், பொருள் புரியாத வகையில், பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.சென்னை தாம்பரம் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் வழங்கப்படும் ரசீது, பெரும் பிழையுடன் காணப்படுவதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது என்ன "ஸ்தலம்?'
"இடம்' என்ற நடைமுறை சொல் பழக்கத்தில் இருக்கும் போது, அதற்கு பதிலாக அந்த ரசீதில், "ஸ்தலம்' என்ற வார்த்தையை அச்சடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும், "ஸ்தளம' என, பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.கிலோ மீட்டரை சுருக்கமாக, கி.மீ., எனப் பயன்படுத்துவது வழக்கம். அதையும், "கி மி' என, பிழையுடன் அச்சடித்துள்ளனர். வாகனம் எந்த இடத்திலிருந்து, எந்த இடம் செல்கிறது என அறியும் இடத்தில், "அதுர டொல ப்லாஜா' என்ற புரியாத மொழி வார்த்தைகள் உள்ளன."பிரிவு' என்ற இடத்தில், "தாம்பரம் முதல் திண்டிவனம்' என, எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த பொருளும் இல்லாத வண்ணம், "தம்பரம, திடிவநம' என, அச்சடிக்கப்பட்டு உள்ளது. "வாகனத்தின் வகை' என்ற இடத்தில், "காரு, வ்யாந்த், ஜூப்' என உள்ளது.இப்படி, தப்பும் தவறுமாக உள்ள ரசீதில், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது என்ற வார்த்தையும்; கட்டணம் பற்றிய இதர தகவல்களும், பிழை இல்லாமல் அச்சடிக்கப் பட்டு உள்ளன.முன்பு, தேசிய சேமிப்பு குறித்த மத்திய அரசு விளம்பரங்கள், நாக்பூரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அங்கு பணிபுரியும் யாராவது ஒரு தமிழர், தனக்குத் தெரிந்த தமிழில், அந்த மொழிபெயர்ப்பைச் செய்வது உண்டு.

அக்கறையின்மை
ஆனால், இப்போது கணினி காலம். தமிழ் மொழியில் கட்டண ரசீதைத் தெளிவாக அச்சடிக்க முடியாதா அல்லது அக்கறையின்மையா? கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை, நெடுஞ்சாலைத் துறை இதில் ஏன் காட்டவில்லை. கட்டணம் செலுத்துவோர், விதிக்கப்பட்ட தொகையை மட்டும் கவனிப்பர்; மற்றவற்றை பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றனரா?சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட, பெரும் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் கண்களில் இது படவில்லையா அல்லது தங்கள் கார் டிரைவர்களே பணத்தைக் கட்டி ரசீது வாங்குவதால், இந்த விஷயம் அவர்கள் கண்களில் படவில்லையா?

வாகன ஓட்டிகள் புகார்
இங்கு மட்டும் அல்ல, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் ரசீது, பிழையுடனே காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இவ்வாறு எழுத்துப் பிழையுடன் ரசீது வழங்கும் சுங்கச் சாவடிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மற்ற சுங்கச் சாவடிகள், பிழையின்றி ரசீது வழங்கும்.

நன்றி: தினமலர் 

பிரிந்த காதல் மனைவியை/கணவரை சேர சட்டம் உதவுமா?


ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.

பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குபின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.

திருமணத்திற்குபின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.


கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.


மணவாழ்வுரிமை மீட்பு சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.


மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.


இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத்தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

நன்றி:  ADV பி. சுந்தரராஜன்

சட்டப்படி திருமணம் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது.

சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல்போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது.

இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு சிறப்பு திருமணச் சட்டம் (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்/தகுதிகள்:

  1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும்தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

நன்றி:  ADV பி. சுந்தரராஜன்

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT