ஆந்திராவில் சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமையால், மாணவி ஒருவர் தமது பேசும் திறனை இழந்துள்ளார். ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் கோட்டலாம் எனும் ஊரில் காயத்திரி ஜூனியர் விடுதியில் ஷாமிலி என்ற மாணவி கடந்த மாதம் சேர்ந்துள்ளார். கடந்த ஜூலை 19ம் தேதி இரவு ஷாமிலியுடன் தங்கியிருந்த சக மாணவிகள் சாப்பிட வெளியே சென்றுள்ளனர். அந்தநேரம் பார்த்து விடுதியில் மின்சாரம் போக, அப்போது ஷாமிலியின் அறைக்குள் புகுந்த சில சீனியர் மாணவிகள் ஷாமிலியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தையும் கயிறால் நெரித்துள்ளனர். அதற்கான அடையாளங்கள் ஷாமிலியின் கழுத்தில் தெரிந்துள்ளது. இந்தசம்பவத்திற்கு பிறகு ஷாமிலியால் பேச முடியவில்லை. இதனையடுத்து ஷாமிலி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷாமிலியை பரிசோதித்த டாக்டர்கள் இனி அவரால் பேச முடியாது என்று கூறிவிட்டனர். ராகிங்கால் மாணவி ஒருவர் பேச்சை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகிங்கிற்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராகிங் கொடுமையை தடுக்க நாடு முழுக்க, எல்லா மாநிலங்களிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது.