லதேகர்:பில்லி, சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி, வயதான தம்பதியை மலத்தை சாப்பிட வைத்ததோடு, சிறுநீரையும் குடிக்க வைத்த சம்பவம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டம் புரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் லக்ரா, 65. இவரது மனைவி கொலஸ்டினா, 60. இவர்கள் பில்லி, சூனியம் செய்ததாகவும், அதனால், கிராமத்தில் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீர் திடீரென இறந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கடந்த 8ம் தேதி, இந்த வயதான தம்பதியர், கிராம பஞ்சாயத்தார் முன் நிறுத்தப்பட்டனர்.
"தாங்கள் பில்லி, சூனிய வேலைகளில் ஈடுபடவில்லை' என, தம்பதியர் மறுத்தும், அதை ஏற்க, கிராம பஞ்சாயத்தார் மறுத்து விட்டனர். மலத்தை சாப்பிடுவதோடு, சிறுநீரையும் குடிக்க வேண்டும் என, தண்டனை விதித்தனர். கட்டாயப்படுத்தி அவர்களை மலத்தை சாப்பிட வைத்தனர் மற்றும் சிறுநீரை குடிக்க வைத்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இத்தகவலை, லதேகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிரந்தி குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.