ஐதராபாத்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்க, அவர் குடும்பத்தினர் தமக்கு ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர தயாராக இருந்ததாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளநீதிபதி லட்சுமி நரசிம்ம ராவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெல்லாரியில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் நடத்தி வந்தவர், மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி. இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்கு, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி.பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார். ஜனார்த்தன் ரெட்டி ஜாமின் வழங்கக்கோரி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, அதற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அவருக்கு மே 11ம் தேதி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அவரை ஜாமினில் விடுவிக்க, 1.80 கோடி ரூபாயை நீதிபதி பட்டாபிராமராவ் லஞ்சம் பெற்றார் என, சி.பி.ஐ., கண்டறிந்தது. ஐதராபாத்தில் உள்ள வங்கி லாக்கரில் கணக்கில் வராத, ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இருந்ததை, சி.பி.ஐ., கண்டுபிடித்து கைப்பற்றியது. அந்த லாக்கரின் சாவி, நீதிபதி பட்டாபிராமராவின் மகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி பட்டாபிராமராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக இம்மாத துவக்கத்தில் மேலும் இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான லட்சுமி நரசிம்ம ராவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜனார்த்தன் ரெட்டி ஜாமினில் வெளிவர அவரது குடும்பத்தினர் தனக்கு ரூ. 100 கோடி வரை தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜாமினில் வெளிவர ரூ. 100 கோடி வரை லஞ்சம் தர முன்வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.