பைக்கானூர்: ஏற்கனவே 6 மாதம் காலம் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக சாதித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் இன்று 2 வது முறையாக விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார். இவருக்கு உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது பாரட்டுச்செய்தியில் இவரது முயற்சி வெற்றி பெற தமது உளமாற வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.
இன்று காலை ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தானின் பைகனூர் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டார் சுனிதா. இவருடன் ரஷ்ய விஞ்ஞானிகள் 2 பேரும் சென்றிருக்கின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு இதே போன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று 6 மாதங்கள் (195 நாட்கள் ) மேலாக தங்கியிருந்து சாதனை படைத்தார். இவரது ஆய்வு உலகிற்கு பயன் தருவதாக அமைந்தது.
இந்தியாவின் குஜராத்தை சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ் (47). இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் , குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.மோடி டூவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில் இது மிக மகிழ்ச்சியான செய்தி என்றும், சுனிதா பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறியிருக்கிறார்.
5 மாதம் இருப்பார் விண்வெளியில்: சுனிதா தலைமையிலான ரஷ்ய மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த தலா ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளனர். சோயூஸ் விண்கலம் வரும் செவ்வாயக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடையும். இந்த குழு வரும் நவம்பர் மாத இறுதி வரை வங்கி இருந்து ஆராய்ச்சி செய்கின்றனர்.