புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலர்கிறது. இவ்விரு அணிகள் 3 ஒரு நாள் போட்டி, 2 "டுவென்டி-20' போட்டிகளில் மோத உள்ளன. போட்டிகள் சென்னை, டில்லி, கோல்கட்டா, ஆமதாபாத் மற்றும் பெங்களூருவில் நடக்கும் என தெரிகிறது.
பாகிஸ்தான் அணி கடைசியாக 2007, டிசம்பரில் இந்தியா வந்தது. 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. இத்தொடரை பொதுவான இடத்தில் நடத்த, பி.சி.சி.ஐ., சம்மதிக்கவில்லை. ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், இந்தியா வர பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உலக கோப்பை உள்ளிட்ட சில பொதுவான தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதிக் கொண்டன.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) நிர்வாகிகள் இடையே, அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், பாகிஸ்தான் உள்ளூர் அணியான சியால்கோட் ஸ்டாலியன்சிற்கு அனுமதி தரப்பட்டது.
திடீர் முடிவு:
தற்போது, மேலும் ஒரு திருப்பமாக இரு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது. வரும் நவம்பர் மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது. பின், டிசம்பர் 23ல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட நாடு திரும்புகின்றனர்.
மீண்டும் 2013, ஜன., 3ல் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 11ம் தேதி தான் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. இதனால் இந்திய அணி டிச., 23 முதல் ஜன., 10 (2013) வரை, 19 நாள் ஓய்வில் உள்ளது.
அதேபோல, பாகிஸ்தான் அணிக்கும் டிசம்பரில் எவ்வித போட்டிகளும் கிடையாது. ஜனவரி 2013ல் தான் ஜிம்பாப்வே செல்லும். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இதில் மாற்றங்கள் செய்யவுள்ளனராம்.
போட்டி உறுதி:
இதையடுத்து, வரும் டிசம்பர் மாதம், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும், மூன்று ஒரு நாள் மற்றும் 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே, மீண்டும் கிரிக்கெட் <உறவை துவங்க முடிவு செய்துள்ளோம். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர்-ஜனவரி மாதம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படும். இது தொடர்பான பணிகள் விரைவில் துவங்கும். இத்தொடரை நடத்த, மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போட்டிகள் எங்கே:
மூன்று ஒருநாள் போட்டிகள் சென்னை, டில்லி மற்றும் கோல்கட்டாவிலும், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் ஆமதாபாத் மற்றும் பெங்களூருவிலும் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
கவாஸ்கர் எதிர்ப்பு
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்கு, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
மும்பை பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில், இரு அணிகள் மோதும் தொடருக்கு என்ன அவசரம் வந்தது. மும்பைக்காரர் என்ற முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
தவிர, நவம்பர்-டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடக்கிறது. இதற்கு இடையில் பாகிஸ்தான் தொடரை நடத்துவதால், வீரர்கள் மூச்சுவிடக் கூட நேரமிருக்காது. காயங்களில் இருந்து மீள இந்த ஓய்வை பயன்படுத்தலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
அபாஸ் வரவேற்பு
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அபாஸ் கூறுகையில்,"" இரு தரப்பு உறவை மேம்படுத்த, கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தான் சரியான வழி. இது கிரிக்கெட்டுக்கும் நல்லது. இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதனால், மக்கள் மகிழ்ச்சியடைவர். கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த இந்தியாவுடன் விளையாடுவது, பாகிஸ்தான் அணியின் முன்னேற்றத்துக்கு உதவும்,'' என்றார்.