வேலூர்: ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதி 3 வயது சிறுமி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாரப்பட்டு என்ற இடத்தில் எம்போசி கான்வென்ட் உள்ளது. இப்பள்ளியில் அருகன் துருகம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கூலித்தொழிலாளியின் மகள்கள் சுஜிதா (5ம் வகுப்பு) மற்றும் சுஜிதா (எல்.கே.ஜி.,) படித்து வந்தனர். இந்நிலையில், இன்று மாலை பள்ளி பஸ்சில் தனது சகோதரியுடன் அருகன் துருகம் வந்த சுஜிதா, திடீரென பஸ்சின் முன்னால் ஓடியுள்ளார். இதை கவனிக்காத வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன் பஸ்சை இயக்கியுள்ளார். இதில் பஸ் மோதி சுஜிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். டிரைவர் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பஸ் மோதி சிறுமி பலியான சம்பவத்தைக் கண்டித்து சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அருகன் துருகம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ்சை கொளுத்துவதற்காக பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் நிற்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.