சென்னை: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கோர்ட் ஒன்றில், தனக்கு எதிராக நடந்து வரும் வழக்கின் தீர்ப்பை, தள்ளி வைக்க, நித்யானந்தா தரப்பு செய்த முயற்சி, தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று தீர்ப்பு வெளியாகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, பொபட்லால் சாவ்லா என்பவர், 2005 முதல், 2010 வரை, நித்யானந்தாவின் சீடராக இருந்தார். அப்போது, கலிபோர்னியா மாகாணத்தில் வேதப் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவங்குவதற்காக, "நித்யானந்தா பவுண்டேஷன்' நிறுவனத்திற்கு, 9.35 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருந்தார். ரஞ்சிதா, "சிடி' விவகாரத்திற்குப் பின், ஆசிரமத்தை விட்டு வெளியேறிய அவர், தான் கொடுத்த நன்கொடையைத் திருப்பித் தரும்படி, கலிபோர்னியா மாகாணத்தின் மாவட்ட கோர்ட் ஒன்றில், வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், கடந்த 2ம் தேதி, இறுதி விசாரணை நடந்தது. அதன் பின் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "நித்யானந்தா பவுண்டேஷன், ஒரு மோசடி நிறுவனம். பாதிக்கப்பட்ட பொபட்லால் சாவ்லாவுக்கு, "நித்யானந்தா பவுண்டேஷன்' 8.63 கோடி ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும். இவ்வழக்கில், பவுண்டேஷன் மீதான அபராதம் பற்றிய இறுதித் தீர்ப்பு, இம்மாதம் 19ம் தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம், "நித்யானந்தா பவுண்டேஷன்' தரப்பில், தீர்ப்பை தள்ளி வைக்கும்படி, ஒரு மனு, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், பவுண்டேஷன் சார்பில் வாதாடும் வழக்கறிஞர், 19ம் தேதி, ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டிருப்பதால், தீர்ப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்து, கடந்த 10ம் தேதி, கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தீர்ப்பை தள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பவுண்டேஷனுக்கு இருந்தால், அது குறித்து, 2ம் தேதி, விசாரணையின் போது தெரிவித்திருக்க வேண்டும். மாறாக, 2ம் தேதியில் நடந்த விசாரணையில், 19ம் தேதி, இறுதித் தீர்ப்பு வெளியிடப்படும் என்ற கோர்ட் உத்தரவை, பவுண்டேஷன் ஏற்றுக் கொண்டது. அதேநேரம், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற பவுண்டேஷனின் கோரிக்கையில், நியாயமான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. அதனால், திட்டமிட்டபடி, 19ம் தேதி, தீர்ப்பு வெளியிடப்படும். இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.