இளைஞர்கள் மொபைல்போனுக்கான ஹெட்போன்களை பயன்படுத்தக்கூடாது, காதல் திருமணங்களுக்கு தடை, துணையின்றி இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என, அடுக்கடுக்கான கடும் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இது இங்கல்ல, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 50 கி.மீ., தொலைவில், பாக்பாத் அருகே உள்ள அசாரா கிராமத்தில் தான் இவ்வளவு தடைகள். இக்கிராமத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த கிராம பஞ்சாயத்தினர் 11ம் தேதி கூடி விவாதித்தனர். முடிவில், பல்வேறு கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டு பொதுமக்களிடம் அறிவிக்கப்பட்டது.
ஹெட்போனுக்கு "தடா':அதில், கிராமத்து இளைஞர்கள் சாலைகளில் செல்லும்போது மொபைல்போன்களுக்கான ஹெட்போன்களை பயன்படுத்தக் கூடாது. இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தலையில் முக்காடு போட்டு, தலையை மறைக்கவேண்டும். போதுமான துணையின்றி, இளம்பெண்கள் மாலையில் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.பெண்கள் மொபைல்போன்களை பயன்படுத்தக்கூடாது. இளைஞர்கள் சாலையில் செல்லும்போது மொபைல்போன் உட்பட பிற கருவிகளுக்கான ஹெட்போன்களை பயன்படுத்தக்கூடாது. கிராமத்திலுள்ள 40 வயதுக்குட்பட்ட பெண்கள், மாலை நேரத்திற்கு பின் , விளக்கு வைத்த நேரத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டை விட்டு வரவே கூடாது.
காதலே போ:இதுதவிர வரதட்சணை கேட்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். காதல் திருமணங்கள் அறவே கூடாது. காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கிராமத்தில் வசிக்க தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற கடுமையான முடிவுகளை கிராம பஞ்சாயத்தினர் எடுத்துள்ளனர்.
இந்த தடைகள் குறித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முஷாரப் என்பவர் கூறுகையில், "கிராம பஞ்சாயத்தினர் எடுத்துள்ள முடிவுகளை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். பெண்கள் தனியே செல்லும்போது, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது' என்றார்.
இந்த முடிவுகள் குறித்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் முகமதுகான் கூறுகையில்,"எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்வதாக இருந்தால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி விடலாம். காதல் திருமணம் செய்து கொண்டு நீதிமன்றங்களில் உத்தரவு வாங்கி வந்தவர்களை கிராமத்தினர் ஒதுக்கி வைப்பர்' என்றார்.
நாட்டாமை... தீர்ப்ப மாத்து:இந்த கிராமத்தினரின் முடிவு குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வி.கே.சேகர் கூறுகையில், "அசாரா கிராமத்தினர் எடுத்துள்ள இதுபோன்ற திகாத் (தீர்மானங்கள்) குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஏற்கனவே தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் இதுபோன்று தான் கடும் சட்டத்திட்டங்களை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தொகுதியில் அடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்