புதுடில்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய துணை ராணுவ படையினர் ஆயிரக்கணக்கில் விலகி வருவதாகவும், கொத்து, கொத்தாக பதவியில் இருந்து விருப்ப ஓய்வு கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக இந்த படைபலம் சற்று பலவீனப்படும் சூழல் இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரம் கடந்த 5 ஆண்டுகால ஒரு அறிக்கை மற்றும் புள்ளி விவரத்தை எடுத்துள்ளது. இது அரசு உள் ஆவணமாக இருந்தாலும் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
துணை ராணுவ படையினராக திகழும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ( பி.எஸ்.எப்) , தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ( சி.ஐ,எஸ்.எப்), மற்றும் எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட வீரர்களின் கடந்த 5 ஆண்டுகால ( 200 7முதல் 2011 வரை) விவரத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த விவரப்படி வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்தவர்கள் விர்ரென உயர்ந்துள்ளது. கடந்த 2007 ல் மொத்தம் இந்த படையினர் 671 பேர் வெளியேறியிருந்தனர். 2008 ல் 880 பேரும், 2009 ல் ஆயிரத்து 107 பேரும், 2010ல் ஆயிரத்து 279 பேரும், 2011ல் ஆயிரத்து 283 பேரும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 220 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் எல்லை பாதுகாப்பு படையினரும், மத்திய தொழில் நுடப்ப படையினரும்தான் அதிகம்.
இவர்கள் பணியில் இருக்கும் போது கடும் மன அழுத்த்திற்கு ஆளாவதாகவும், எல்லைப்புறம் முழுவதும் மாற்றுச்சூழல் இருப்பதாகவும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்கள்: இது போல விருப்ப ஓய்வு பெற்று செல்வோரது எண்ணிக்கையும் விறு, விறு என அதிகரித்துள்ளது, இந்த விவரத்தில் 2007-ல் ( 5 ஆயிரத்து 967 ), 2008 -ல் ( 7ஆயிரத்து 38 ), 2009- ல் ( 13 ஆயிரத்து 90 ), 2010- ல் ( 10 ஆயிரத்து 822 ) 2011-,ல் (9 ஆயிரத்து 64 பேர் ) விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 981 பேர் இதில் அடங்குவர். ஆக மொத்தம் பணி விலகியது, விருப்ப ஓய்வு என 51 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக வீரர்கள் வெளியேறாமல் இருக்க உகந்த நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதுகாப்பு படை ஆட்டம் காணத்துவங்கி விடும் . என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ படையினர் பெரும்பாலும் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதியில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். மற்றும் எல்லையோர சீதோஷ்ணம் வீரர்களை கடுமையாக பாதிப்பதாகவும், இவர்களுக்கு தேவையான விடுப்புக்கள் மறுக்கப்படுவதாலும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.