மேட்டூர்: மழை பெய்ய வேண்டி, கிராமத்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து, வினோத வழிபாடு நடத்தினர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, அமரகுந்தி ஊராட்சியில் உள்ளது, மாங்குட்டப்பட்டி கிராமம். தென்மேற்கு பருவமழை தாமதமாவதால், கிராமத்தில், விவசாயம் முடங்கி விட்டது. நிலத்தடி நீரும் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், மாங்குட்டப்பட்டி மக்கள், பெரிதும் அவதிப்பட்டனர். மாங்குட்டப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில், அரசமரத்து விநாயகர் கோவில் உள்ளது. பருவமழை பெய்ய வேண்டி, மாங்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள், விநாயகர் கோவில் முன் ஒன்று கூடி, ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். பின், விநாயகர் கோவில் முன், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், ராகி களி சமைத்து, ஊர் பொதுமக்கள் அனைவரும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.