கோவை: விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள், முகம் தெரியாத ஏழு பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது.
கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர்கள் மணியன்- கலாமணி தம்பதி. மணியன் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவர்களுக்கு இரு பெண்கள். மூத்த பெண் சரண்யா, 21, கோவில்பாளையம் அருகில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ.,(இ.சி.இ)இறுதி ஆண்டு படித்து முடித்து, "ரிசல்டு'க்காக காத்திருந்தார். வளாக நேர்காணலில், "இன்போசிஸ்' நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டு, இம்மாத இறுதியில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக, "பிளேஸ்மென்ட் டிரெய்னர்' வேலையில் சேர்ந்தார். கடந்த 29ம்தேதி வேலை நிமித்தமாக, சரண்யா மற்றும் கம்பெனி ஊழியர்கள் ஐந்து பேர், காரில் ஈரோடு சென்று விட்டு, கோவை திரும்பும்போது, சித்தோடு அருகில் கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் இறந்தனர். பலத்த காயமடைந்த சரண்யா, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த சரண்யாவுக்கு நேற்று முன் தினம் "மூளைச்சாவு' ஏற்பட்டது. இதனால், படிப்படியாக உடல்நிலை மோசமடைந்து, நேற்று இறந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதிலிருந்து மீண்டு மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் தங்களின் முடிவை தெரிவித்தனர். டாக்டர்கள் குழு, சரண்யாவின் கண்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை, பாதிக்கப்பட்ட எழு பேருக்கு பொருத்தினர். சரண்யாவின் உடல் உறுப்புகள், முகம் தெரியாத ஏழு பேரின் உயிரை காப்பாற்றி, வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சரண்யாவின் தந்தை மணியன் கூறியதாவது: பள்ளி பருவம் முதலே சரண்யா துடிப்பான, தைரியமான பெண். படிப்பில் படுசுட்டி. எந்தவொரு போட்டியானாலும் பயப்படாமல் கலந்து கொள்வாள். கல்லூரியில் கடைசி செமஸ்டர் "ரிசல்ட்' கடந்த 28ம் தேதி வெளியானது. அதில், 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தாள். ரிசல்ட் வெளியான அடுத்த நாளே விபத்தில் சிக்கிவிட்டாள். மூளைச்சாவு ஏற்பட்டதால், எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. ஆசையாய் வளர்த்த மகளை, வெறுமனே புதைக்க மனமில்லாமல், அவளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். எங்கள் மகள் எங்களை விட்டு பிரிந்தாலும், அவளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம், இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.