கடலூர்: நடுவீரப்பட்டு பகுதியில், நாளை நடைபெற உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் குரூப்-8 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக, புரளி ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. கடந்த ஆண்டு, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 வி.ஏ.ஓ., தேர்வு சமயத்தில், கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பகுதியில், தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதால், பத்திரக்கோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் மற்றும் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பலர், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இது மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால், குற்றவாளிகளை இன்னமும் கண்டு பிடிக்கவில்லை. இந்நிலையில், நாளை 7ம் தேதி நடைபெற உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் குரூப்-8 தேர்வுக்கு, வினாத்தாள் வெளியாகி விட்டதாகவும், அதன் நகல் பெற, ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசப்பட்டு பணம் கை மாறியதாகவும், புரளி கிளம்பியுள்ளது. வெளியான வினாத்தாளைப் பெற, நடுவீரப்பட்டு பகுதி மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.