சென்னை: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.