மும்பை:விளையாட்டு துறையின் <உயரிய "ராஜிவ் கேல் ரத்னா' விருதுக்கு, டிராவிட் பெயரை பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவுள்ளது. உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங் பெயரை, அர்ஜுனா விருதுக்கு அனுப்புகிறது.
இந்திய விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு விளையாட்டு அமைப்புகளும், தங்கள் வீரர்கள் பெயரை பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி கடந்த ஏப்., 30. "தங்களுக்கு விண்ணப்பம் எதுவும் வராததால், கிரிக்கெட் வீரர்கள் பெயரை பரிந்துரை செய்யவில்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூறியது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், விருதுக்கு வீரர்கள் பெயரை விண்ணப்பிக்கும் தேதியை வரும் 20ம் தேதி நீட்டித்து, மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய "ராஜிவ் கேல் ரத்னா' விருதுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட், 39, பெயரை, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. 1996ல் கிரிக்கெட்டுக்கு வந்த டிராவிட், டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மொத்தம் 24,208 ரன்கள் எடுத்துள்ளார்.
1991-92 முதல் வழங்கப்பட்டு வரும் "ராஜிவ் கேல் ரத்னா' விருது, டிராவிட்டுக்கு வழங்கப்படும் பட்சத்தில், சச்சின் (1997-98), தோனிக்கு (2007-08) அடுத்து, இதைப் பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெறலாம்.
"அர்ஜுனா' யுவராஜ்:
2011 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்றவர் யுவராஜ் சிங். சமீபத்தில் "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட இவர், தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.
விரைவில், இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் இவரது பெயரை, விளையாட்டுத் துறையில், வியக்கத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும், "அர்ஜுனா' விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் இவ்விருது பெறும் 45 வது வீரர் யுவராஜ் சிங்.