திருவண்ணாமலை: ""ஊழல் செய்வதில் அரசு சாதனை படைக்கிறது,'' என, விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில், மக்களின் குறைகளை கேட்டறிந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவர்கள் மத்தியில் பேசியதாவது: ""சிறந்த எதிர்கட்சியாக நாங்கள் செயல்படவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், நான் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, என்ன செய்ய வேண்டுமோ, அதை தான் செய்கிறேன். தமிழகத்தில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் தொகுதிகளில், பொதுமக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாக சென்று வருகிறேன். பொதுமக்கள் இந்த ஆட்சியின் அலங்கோலத்தை சொல்லி புலம்புகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது. அவர்கள் கொடுக்கும் மனுக்களை உரிய அதிகாரிகளிடம் சேர்த்தாலும், உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். ஓராண்டில் நூறாண்டு சாதணை செய்து விட்டதாக சொல்கின்றனர். ஆனால், ஊழல் செய்வது; கமிஷன் வாங்குவது; கொள்ளையடிப்பதுதான் அவர்கள் செய்த சாதனை. இதையெல்லாம் கேள்வி கேட்டால், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கின்றனர். இதைக் கேட்க நீங்கள் யார் என்கின்றனர். காவிரி விவகாரத்தில், எந்த அரசும் உரிய நடவடிக்கை இல்லை. தற்போது, மழை பெய்தால் தான் காவிரியில் நீர் வரும் என்று சொல்கிறார்கள். அதுவரை விவசாயிகளின் நிலைமை என்னாகும் என்பது பற்றி கவலைப்படவில்லை.'' இவ்வாறு அவர் பேசினார்.